நல்குரவு

இன்மையின் இன்னாதது யாதெனின் இன்மையின்
இன்மையே இன்னா தது.   (௲௪௰௧ - 1041)
 

ஒருவனுக்கு வறுமையைப் போலத் துன்பம் தருவது யாதென்றால், அந்த வறுமையைப் போலத் துன்பந்தருவது, அந்த வறுமையேயன்றி, யாதுமில்லை (௲௪௰௧)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

வறுமையைப் போல் துன்பமானது எது என்று கேட்டால், வறுமையைப் போல் துன்பமானது வறுமை ஒன்றே ஆகும். (௲௪௰௧)
—மு. வரதராசன்

இன்மையை விடக் கொடியதுஎது என்றால், இல்லாமையை விடக் கொடியது இல்லாமையே. (௲௪௰௧)
—சாலமன் பாப்பையா

வறுமைத் துன்பத்துக்கு உவமையாகக் காட்டுவதற்கு வறுமைத் துன்பத்தைத் தவிர வேறு துன்பம் எதுவுமில்லை (௲௪௰௧)
—மு. கருணாநிதி

இன்மை எனவொரு பாவி மறுமையும்
இம்மையும் இன்றி வரும்.   (௲௪௰௨ - 1042)
 

வறுமை என்னும் ஒரு பாவி ஒருவனிடம் வந்துவிட்டால், அவனுக்கு இம்மையிலுள்ள உலகவின்பமும், மறுமையின் சுவர்க்க இன்பமும் இல்லாமல் போய்விடும் (௲௪௰௨)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

வறுமை என்று சொல்லப்படும் பாவி ஒருவனை நெருங்கினால், அவனுக்கு மறுமையின்பமும், இன்மையின்பமும் இல்லாமற் போகும் நிலைமை வரும். (௲௪௰௨)
—மு. வரதராசன்

இல்லாமை என்ற ஒரு பாவி ஒருவனிடத்தில் சேர்ந்தால், அவன் பிறர்க்குக் கொடுக்க இல்லாதவன் ஆவதால் அவனுக்கு மறுமை இன்பமும் இல்லை; தானே அனுபவிக்க ஏதும் இல்லாததால் இம்மை இன்பமும் இல்லை. (௲௪௰௨)
—சாலமன் பாப்பையா

பாவி என இகழப்படுகின்ற வறுமைக் கொடுமை ஒருவருக்கு ஏற்பட்டுவிட்டால் அவருக்கு நிகழ்காலத்திலும், வருங்காலத்திலும் நிம்மதி என்பது கிடையாது (௲௪௰௨)
—மு. கருணாநிதி

தொல்வரவும் தோலும் கெடுக்கும் தொகையாக
நல்குரவு என்னும் நசை.   (௲௪௰௩ - 1043)
 

வறுமை எனப்படும் கேடானது, ஒருவனுடைய பழைய குடும்பச் செல்வத்தையும், அதன்மேல் அக்குடும்பத்திற்கு உண்டான பெரும்புகழையும் கெடுத்துவிடும் (௲௪௰௩)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

வறுமை என்று சொல்லப்படும் ஆசைநிலை ஒருவனைப் பற்றினால், அவனுடைய பழைமையானக் குடிப் பண்பையும் புகழையும் ஒரு சேரக் கெடுக்கும். (௲௪௰௩)
—மு. வரதராசன்

இல்லாமை என்று சொல்லப்படும் மன ஆசை எவரிடம் இருக்கிறதோ, அவரின் பழம் குடும்பப் பெருமையையும் சிறந்த பாராட்டுக்களையும் அது மொத்தமாக அழித்து விடும். (௲௪௰௩)
—சாலமன் பாப்பையா

ஒருவனுக்கு வறுமையின் காரணமாகப் பேராசை ஏற்படுமேயானால், அது அவனுடைய பரம்பரைப் பெருமையையும், புகழையும் ஒரு சேரக் கெடுத்துவிடும் (௲௪௰௩)
—மு. கருணாநிதி

இற்பிறந்தார் கண்ணேயும் இன்மை இளிவந்த
சொற்பிறக்கும் சோர்வு தரும்.   (௲௪௰௪ - 1044)
 

இழிவான செயல் பிறவாத குடும்பத்தாரிடமும், அது பிறப்பதற்கு ஏதுவான சோர்வு என்னும் நிலைமையானது வறுமையை உண்டாக்கிவிடும் (௲௪௰௪)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

வறுமை என்பது, நல்ல குடியிற் பிறந்தவரிடத்திலும் இழிவு தரும் சொல் பிறப்பதற்குக் காரணமான சோர்வை உண்டாக்கி விடும். (௲௪௰௪)
—மு. வரதராசன்

நல்ல குடும்பத்தில் பிறந்தவரிடம் கூட, இல்லாமை வந்து விட்டால், இழிவான சொற்களைச் சொல்லும் தளர்ச்சியை உண்டாக்கி விடும். (௲௪௰௪)
—சாலமன் பாப்பையா

இல்லாமை எனும் கொடுமை, நல்ல குடியில் பிறந்தவர்களிடம் இழிந்த சொல் பிறப்பதற்கான சோர்வை உருவாக்கி விடும் (௲௪௰௪)
—மு. கருணாநிதி

நல்குரவு என்னும் இடும்பையுள் பல்குரைத்
துன்பங்கள் சென்று படும்.   (௲௪௰௫ - 1045)
 

வறுமை எனப்படும் துன்பம் ஒன்றின் உள்ளாகவே, உலகத்தாரால் சொல்லப்படும் பலவகைப்பட்ட துன்பங்கள் எல்லாம் சென்று அடங்கிவிடும் (௲௪௰௫)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

வறுமை என்று சொல்லப்படும் துன்ப நிலையினுள் பலவகையாக வேறுபட்டுள்ள எல்லாத் துன்பங்களும் சென்று விளைந்திடும். (௲௪௰௫)
—மு. வரதராசன்

இல்லாமை என்னும் துன்பத்திற்குள் எல்லா வகைத் துன்பங்களும் அடங்கும். (௲௪௰௫)
—சாலமன் பாப்பையா

வறுமையெனும் துன்பத்திற்குள்ளிருந்து பல்வேறு வகையான துன்பங்கள் கிளர்ந்தெழும் (௲௪௰௫)
—மு. கருணாநிதி

நற்பொருள் நன்குணர்ந்து சொல்லினும் நல்கூர்ந்தார்
சொற்பொருள் சோர்வு படும்.   (௲௪௰௬ - 1046)
 

நல்லவான பொருள்களைத் தெளிவாக அறிந்து சொன்னார் ஆனாலும், வறுமைப்பட்டவர் சொல்லும் சொற்கள், பொருள் பயவாதவாய்ச் சோர்வு பட்டுவிடும் (௲௪௰௬)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

நல்ல நூற் பொருளை நன்றாக உணர்ந்து எடுத்துச் சொன்னப் போதிலும் வறியவர் சொன்ன சொற்பொருள் கேட்பார் இல்லாமல் பயன்படாமல் போகும். (௲௪௰௬)
—மு. வரதராசன்

நல்ல கருத்துக்களைத் தெளிவாகத் தெரிந்து சொன்னாலும், சொல்பவர் ஏழை என்றால் அவர் சொல் மதிக்கப் பெறாது. (௲௪௰௬)
—சாலமன் பாப்பையா

அரிய பல் நூல்களின் கருத்துகளையும் ஆய்ந்துணர்ந்து சொன்னாலும், அதனைச் சொல்பவர் வறியவராக இருப்பின் அக்கருத்து எடுபடாமற் போகும் (௲௪௰௬)
—மு. கருணாநிதி

அறஞ்சாரா நல்குரவு ஈன்றதா யானும்
பிறன்போல நோக்கப் படும்.   (௲௪௰௭ - 1047)
 

அறத்தோடு பொருந்தாத வறுமையை உடையவன், தன்னைப் பெற்ற தாயாராலுங்கூட, ஓர் அயலானைப் போலக் கருதிப் பார்க்கப் படுவான் (௲௪௰௭)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

அறத்தோடு பொருந்தாத வறுமை ஒருவனைச் சேர்ந்தால் பெற்றத் தாயாலும் அவன் அயலானைப் போல் புறக்கணித்துப் பார்க்கப்படுவான். (௲௪௰௭)
—மு. வரதராசன்

நியாயமான காரணங்கள் இல்லாத இல்லாமை ஒருவனுக்கு இருந்தால், பெற்ற தாய் கூட அவனை அந்நியனாகவே பார்ப்பாள். (௲௪௰௭)
—சாலமன் பாப்பையா

வறுமை வந்தது என்பதற்காக, அறநெறியிலிருந்து விலகி நிற்பவனை, அவன் தாய்கூட அயலானைப் போல்தான் கருதுவாள் (௲௪௰௭)
—மு. கருணாநிதி

இன்றும் வருவது கொல்லோ நெருநலும்
கொன்றது போலும் நிரப்பு.   (௲௪௰௮ - 1048)
 

நேற்றுக் கொன்றது போலத் துன்பஞ் செய்த வறுமையானது, இன்றும் என்னிடத்தே வந்துவிடுமோ? வந்தால், இனி யான் யாது செய்வேனோ? (௲௪௰௮)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

நேற்றும் கொலை செய்தது போல் துன்புறுத்திய வறுமை இன்றும் என்னிடம் வருமோ, (என்று வறியவன் நாள்தோறும் கலங்கி வருந்துவான்). (௲௪௰௮)
—மு. வரதராசன்

நேற்று என்னைக் கொன்றது போன்ற துன்பத்தைத் தந்த இல்லாமை, இன்றும் கூட வருமோ? (௲௪௰௮)
—சாலமன் பாப்பையா

கொலை செய்வதுபோல நேற்றுக் கொடுமைப்படுத்திய வறுமை, தொடர்ந்து இன்றைக்கும் வராமல் இருக்க வேண்டுமே என்று வறியவன் ஏங்குவான் (௲௪௰௮)
—மு. கருணாநிதி

நெருப்பினுள் துஞ்சலும் ஆகும் நிரப்பினுள்
யாதொன்றும் கண்பாடு அரிது.   (௲௪௰௯ - 1049)
 

மந்திரமும் மருந்தும் முதலியவற்றின் உதவியாலே நெருப்பிற் கிடந்தும் உறங்கலாம்; ஆனால் வறுமை வந்த போது, எதன் உதவியாலும் உறக்கம் வருவதில்லை (௲௪௰௯)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

ஒருவன் நெருப்பினுள் இருந்து தூங்குதலும் முடியும், ஆனால் வறுமை நிலையில் எவ்வகையாலும் கண்மூடித் தூங்குதல் அரிது. (௲௪௰௯)
—மு. வரதராசன்

யோக வலிமையால் நெருப்பிற்குள் படுத்து உறங்கவும் முடியும்; ஆனால், பசிக் கொடுமைக்குள் சிறிது கூடக் கண் மூட முடியாது. (௲௪௰௯)
—சாலமன் பாப்பையா

நெருப்புக்குள் படுத்துக் தூங்குவதைகூட ஒரு மனிதனால் முடியும்; ஆனால் வறுமை படுத்தும் பாட்டில் தூங்குவது என்பது இயலாத ஒன்றாகும் (௲௪௰௯)
—மு. கருணாநிதி

துப்புர வில்லார் துவரத் துறவாமை
உப்பிற்கும் காடிக்கும் கூற்று.   (௲௫௰ - 1050)
 

பொருளில்லாத வறுமையாளர் செய்யக்கூடியது முற்றத்துறத்தலே; அதனைச் செய்யாதிருப்பது, பிறர் வீட்டு உப்புக்கும் காடிக்கும் தாம் எமனாவதே யாகும் (௲௫௰)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

நுகரும் பொருள் இல்லாத வறியவர் முற்றுந் துறக்க கூடியவராக இருந்தும் துறக்காத காரணம், உப்புக்கும் கஞ்சிக்கும் எமனாக இருப்பதே ஆகும். (௲௫௰)
—மு. வரதராசன்

உண்ண, உடுத்த ஏதம் இல்லாதவர் இல்லறத்தை முழுமையாகத் துறந்து விடாதிருப்பது, பிறர் வீட்டில் இருக்கும் உப்புக்கும் கஞ்சித் தண்ணீருக்கும் எமனாம். (௲௫௰)
—சாலமன் பாப்பையா

ஒழுங்குமறையற்றதால் வறுமையுற்றோர், முழுமையாகத் தம்மைத் துறக்காமல் உயிர்வாழ்வது, உப்புக்கும் கஞ்சிக்கும்தான் கேடு (௲௫௰)
—மு. கருணாநிதி

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

இராகம்: நாதநாமக்கிரியை  |  தாளம்: ஆதி
பல்லவி:
வறுமையைப் போலொரு துன்பமும் இல்லை
வாழ்க்கையில் இதனாலே எத்தனை தொல்லை

அநுபல்லவி:
அருமையாய்ப் பெற்றெடுத்த அன்னையும் வெறுத்திடும்
அறம் சாரா நல்குரவால்
பிறன் போலும் நோக்கச் செய்யும்

சரணம்:
தொல்குடிப் பிறப் பழிக்கும் விழுப்பமும் கொல்லும்
சொற்பொருள் நன்குணர்ந் தோராயினும் சோர்வு தரும்
நல்குரவு என்னும் இடும்பையுள் பல்குரைத்
துன்பங்கள் சென்றுபடும் தொகையாக யாவும்கெடும்

நன்மை எல்லாம் கெடுக்கும் நல்குரவென்னும் நசை
நற்பொருள் நன்குணர்ந்தோராயினும் உண்டோ பசை
இன்மை என்னும் ஒரு பாவி இதன் கொடுமை
இம்மையும் மறுமையும் இன்றிச் செய்யும் சிறுமை

நேற்றுபோல் இன்றும் கொல்ல வருமோ என்றஞ்சுவது
நிறப்பெனும் பெயரது நெருப்பினும் கொடியது
ஆற்றுவார் யாரே என்று அல்லல்பட்டே உழலும்
அதனாலே குறள்வழி இரவும் துணையாய்க்கொள்ளும்




பிரபலமான அதிகாரம்

பிரபலமான குறள்

குறளில் பல முறை தோன்றிய சொல்
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

பல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22