புல்லறிவாண்மை

அறிவின்மை இன்மையுள் இன்மை பிறிதின்மை
இன்மையா வையா துலகு.   (841)

அறிவில்லாத தன்மையே, வறுமையுள் கொடிய வறுமை; பிற, பொருள் இல்லாத வறுமையை உலகம் நிலையான வறுமையாக ஒருபோதும் கருதாது
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

அறிவிலான் நெஞ்சுவந்து ஈதல் பிறிதியாதும்
இல்லை பெறுவான் தவம்.   (842)

அறிவில்லாத ஒருவன், மனமகிழ்ச்சியோடு ஒரு பொருளை ஒருவனுக்குத் தருவதென்பது, பெறுவானது தவத்தின் பயனே அல்லாமல், வேறு எதனாலும் இல்லை
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

அறிவிலார் தாந்தம்மைப் பீழிக்கும் பீழை
செறுவார்க்கும் செய்தல் அரிது.   (843)

அறிவில்லாதவர், தமக்குத் தாமே செய்து கொள்ளும் வருத்தம் தரக்கூடிய துன்பங்கள், அவரது பகைவராலும் அவருக்குச் செய்ய முடியாதவையாக இருக்கும்
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

வெண்மை எனப்படுவ தியாதெனின் ஒண்மை
உடையம்யாம் என்னும் செருக்கு.   (844)

‘அறியாமை என்று சொல்லப்படுவது யாது?’ என்றால், அ·து, அறிவில்லாதவனும், ‘தான் அறிவுடையவன்’ என்று நினைத்துச் செருக்கு அடைதலாகும்!
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

கல்லாத மேற்கொண் டொழுகல் கசடற
வல்லதூஉம் ஐயம் தரும்.   (845)

தான் கல்லாத ஒரு செயலையும், அறிவில்லாததால் துணிந்து செய்யத் தொடங்குதல், எதையும் குறையில்லாமல் செய்யவல்ல செயல்களிலும், ஐயத்தைத் தரும்
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

அற்றம் மறைத்தலோ புல்லறிவு தம்வயின்
குற்றம் மறையா வழி.   (846)

தம்மிடத்திலே உள்ள குற்றங்கள் மறையாதபோது, உடல் முழுவதும் ஆடைகளாலே மறைத்துக் கொண்டு, நல்லவர் போலத் திரிதல், அறிவற்ற தன்மை ஆகும்
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

அருமறை சோரும் அறிவிலான் செய்யும்
பெருமிறை தானே தனக்கு.   (847)

அரியவான மறைகளைக் கற்றும், உண்மைப் பொருளை அறியாமல் சோர்வு அடைகின்ற அறிவில்லாதவன், தனக்குத்தானே பெரிய தீமைகளைச் செய்து கொள்வான்
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

ஏவவும் செய்கலான் தான்தேறான் அவ்வுயிர்
போஒம் அளவுமோர் நோய்.   (848)

அறிவுடையோர் ‘இன்னின்னபடி செய்க’ என்று ஏவிய போதும், அதன்படி செய்யமாட்டாதவன், தானும் தெளியாதவன், உயிர் போகுமளவும் துன்பம் அடைவான்
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

காணாதான் காட்டுவான் தான்காணான் காணாதான்
கண்டானாம் தான்கண்ட வாறு.   (849)

தன் அறியாமையால், தான் கண்டபடியே பிறருக்குக் காட்டுபவன், தானும் உண்மை காணாதவன், என்றுமே தான் கண்டபடி காண்பவனாகவே விளங்குவான்
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

உலகத்தார் உண்டென்பது இல்லென்பான் வையத்து
அலகையா வைக்கப் படும்.   (850)

உலகத்தார் ‘உண்டு’ என்னும் ஒரு பொருளை, தன்னுடைய அறியாமையாலே ‘இல்லை’ என்று சொல்லுபவன், உலகத்தாரால் பேயாகக் கருதி ஒதுக்கி வைக்கப்படுவான்
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)