கல்வி

கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக.   (௩௱௯௰௧ - 391)
 

கற்பதற்குத் தகுதியான நூல்களைப் பழுதில்லாமல் கற்க வேண்டும்; கற்றதன் பின்னர் கற்ற அக்கல்வியின் தகுதிக்குத் தகுந்தபடி நடக்கவும் வேண்டும் (௩௱௯௰௧)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

கல்வி கற்க நல்ல நூல்களைக் குற்றமறக் கற்க வேண்டும், அவ்வாறு கற்ற பிறகு, கற்ற கல்விக்கு தக்கவாறு நெறியில் நிற்க வேண்டும். (௩௱௯௰௧)
—மு. வரதராசன்

கற்கத் தகும் நூல்களைப் பிழை இல்லாமல் கற்க; கற்ற பிறகு கற்ற கல்விக்கு ஏற்ப நல்ல வழிகளில் வாழ்க. (௩௱௯௰௧)
—சாலமன் பாப்பையா

பிழை இல்லாதவற்றைத் தனது குறைகள் நீங்குமளவுக்குக் கற்றுக்கொள்ள வேண்டும் கற்ற பிறகு அதன்படி நடக்கவேண்டும் (௩௱௯௰௧)
—மு. கருணாநிதி

எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு..   (௩௱௯௰௨ - 392)
 

‘எண்’ என்று சொல்லப்படுவதும், ‘எழுத்து’ என்று கூறப்படுவதும், என்னும் இவை இரண்டும், இவ்வுலகில் வாழும் உயிர்களுக்குக் ‘கண்’ என்பார்கள் (௩௱௯௰௨)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

எண் என்று சொல்லப்படுவன எழுத்து என்று சொல்லப்படுவன ஆகிய இரு வகைக் கலைகளையும் வாழும் மக்களுக்குக் கண்கள் என்று கூறுவர். (௩௱௯௰௨)
—மு. வரதராசன்

வாழும் நல்லவர்க்கு அறிவியலும் கலைஇயலும் சிறந்த கண் என்று அறிந்தவர் கூறுவர். (௩௱௯௰௨)
—சாலமன் பாப்பையா

எண்ணும் எழுத்தும் எனப்படும் அறிவுக் கண்களைப் பெற்றவர்களே, உயிர் வாழ்வோர் எனக் கருதப்படுவார்கள் (௩௱௯௰௨)
—மு. கருணாநிதி

கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு
புண்ணுடையர் கல்லா தவர்.   (௩௱௯௰௩ - 393)
 

‘கண்’ உடையவர் என்று உயர்வாகக் கூறப்படுவோர் கற்றவரே ஆவர்; கல்லாதவர்கள் தம் முகத்தில் இரண்டு புண் உடையவர்கள் ஆவர் (௩௱௯௰௩)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

கண்ணுடையவர் என்றுக் கூறப்படுபவர் கற்றவரே, கல்லாதவர் முகத்தில் இரண்டுப் புண் உடையவர் ஆவார். (௩௱௯௰௩)
—மு. வரதராசன்

கற்றவரே கண் உடையவர்; கல்லாதவரோ முகத்தில் இரண்டு புண்ணையே உடையவர். (௩௱௯௰௩)
—சாலமன் பாப்பையா

கண்ணில்லாவிடினும் அவர் கற்றவராக இருப்பின் கண்ணுடையவராகவே கருதப்படுவார் கல்லாதவருக்குக் கண் இருப்பினும் அது புண் என்றே கருதப்படும் (௩௱௯௰௩)
—மு. கருணாநிதி

உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்
அனைத்தே புலவர் தொழில்.   (௩௱௯௰௪ - 394)
 

எல்லாரும் மகிழும் வகையிலே கூடியிருந்து, ‘இனி என்று மீளக் கூடுவோம்’ என்று எண்ணும்படியாகப் பிரிதல் கல்வியறிவினரது செயல் ஆகும் (௩௱௯௰௪)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

மகிழும் படியாகக் கூடிபழகி (இனி இவரை எப்போது காண்போம் என்று ) வருந்தி நினைக்கும் படியாகப் பிரிதல் புலவரின் தொழிலாகும். (௩௱௯௰௪)
—மு. வரதராசன்

மற்றவர்கள் கூடி வரும்போது, மனம் மகிழ அவர்களுடன் கலந்து பேசி, இனி இவரை எப்போது, எவ்வாறு சந்திக்கப் போகிறோம் என்று அவர்கள் எண்ணுமாறு பிரிவது கற்று அறிந்தவரின் செயல். (௩௱௯௰௪)
—சாலமன் பாப்பையா

மகிழ்ச்சி பொங்கிடச் சேர்ந்து பழகுவதும், பிரிந்திட நேரும் போது மனங்கலங்குவதும் அறிவிற் சிறந்தோர் செயலாகும் (௩௱௯௰௪)
—மு. கருணாநிதி

உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றுங் கற்றார்
கடையரே கல்லா தவர்.   (௩௱௯௰௫ - 395)
 

செல்வர்களின் முன்னே உதவி கேட்கும் எளியவர் பணிவோடு நிற்பது போல, ஆசிரியரிடம் பணிந்து நின்று கற்றவரே சிறந்தவர்; கல்லாதவரோ கடையர்! (௩௱௯௰௫)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

செல்வர் முன் வறியவர் நிற்பது போல் (கற்றவர்முன்) ஏங்கித் தாழ்ந்து நின்றும் கல்விக் கற்றவரே உயர்ந்தவர், கல்லாதவர் இழிந்தவர். (௩௱௯௰௫)
—மு. வரதராசன்

செல்வர் முன்னே ஏழைகள் நிற்பது போல் ஆசிரியர் முன்னே, விரும்பிப் பணிந்து கற்றவரே உயர்ந்தவர்; அப்படி நின்று கற்க வெட்கப்பட்டுக் கல்லாதவர், இழிந்தவரே. (௩௱௯௰௫)
—சாலமன் பாப்பையா

அறிவுடையார் முன் அறிவில்லாதவர் போல் தாழ்ந்து நின்று, மேலும் கற்றுக்கொள்பவர்களின் ஆர்வத்தைக் கற்றுக் கொள்ளாதவர்கள் கடைநிலை மாந்தராக கருதப்படுவார்கள் (௩௱௯௰௫)
—மு. கருணாநிதி

தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு.   (௩௱௯௰௬ - 396)
 

மணலிலே தோண்டும் கிணற்றில், தோண்டிய அளவுக்கே நீர் ஊறும்; மாந்தருக்கும் அவரவர் முயன்று கற்றதன் அளவுக்கே அறிவும் ஊறிச் சுரக்கும் (௩௱௯௰௬)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

மணலில் உள்ள கேணியில் தோண்டிய அளவிற்க்கு நீர் ஊறும், அதுபோல் மக்களின் கற்றக் கல்வியின் அளவிற்கு அறிவு ஊறும். (௩௱௯௰௬)
—மு. வரதராசன்

மணலில் தோண்டிய அளவு சிறு குளத்தில் நீர் ஊறும்; மக்கள் கற்ற அளவே அறிவும் வளரும். (௩௱௯௰௬)
—சாலமன் பாப்பையா

தோண்டத் தோண்ட ஊற்றுநீர் கிடைப்பது போலத் தொடர்ந்து படிக்கப் படிக்க அறிவு பெருகிக் கொண்டே இருக்கும் (௩௱௯௰௬)
—மு. கருணாநிதி

யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்
சாந்துணையுங் கல்லாத வாறு.   (௩௱௯௰௭ - 397)
 

கற்றவனுக்கு எந்த நாடும் நாடாகும்; எந்த ஊரும் ஊராகும்; இதுவே உண்மையாக இருந்தும் ஒருவன் சாகும் வரைக்கும் கல்லாமலிருப்பது எதனால்? (௩௱௯௰௭)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

கற்றவனுக்கு தன் நாடும் ஊரும் போல வேறு எதுவாயினும் நாடாகும், ஊராகும் ஆகையால் ஒருவன் சாகும் வரையில் கல்லாமல் காலங்கழிப்பது ஏன். (௩௱௯௰௭)
—மு. வரதராசன்

கற்றவனுக்கு எல்லா நாடும் சொந்த நாடாம்; எல்லா ஊரும் சொந்த ஊராம். இதனைத் தெரிந்தும் ஒருவன் இறக்கும் வரை கூடப் படிக்காமல் இருப்பது ஏன்? (௩௱௯௰௭)
—சாலமன் பாப்பையா

கற்றோர்க்கு எல்லா நாடுகளிலும் எல்லா ஊர்களிலும் சிறப்பு என்கிறபோது, ஒருவன் சாகும் வரையில் கற்காமல் காலம் கழிப்பது ஏனோ? (௩௱௯௰௭)
—மு. கருணாநிதி

ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப் புடைத்து.   (௩௱௯௰௮ - 398)
 

ஒரு பிறவியிலே தான் கற்ற கல்வியானது, ஒருவனுக்குத் தொடர்ந்து வரும் ஏழு பிறப்புக்களிலும் அவனைப் பாதுகாக்கும் சிறப்புடையது ஆகும் (௩௱௯௰௮)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

ஒரு பிறப்பில் தான் கற்றக் கல்வியானது அப்பிறப்பிற்கு மட்டும் அல்லாமல் அவனுக்கு ஏழுபிறப்பிறப்பிலும் உதவும் தன்மை உடையது. (௩௱௯௰௮)
—மு. வரதராசன்

ஒருவன் ஒரு பிறவியில் கற்ற கல்வி, அவனுக்கு ஏழு பிறப்பிலும் - எழும் பிறவிதோறும் கூடவே சென்று உதவும். (௩௱௯௰௮)
—சாலமன் பாப்பையா

ஒரு தலைமுறையில் பெறும் கல்வி அறிவானது, ஏழேழு தலைமுறைக்கும் பாதுகாப்பாக அமையும் (௩௱௯௰௮)
—மு. கருணாநிதி

தாமின் புறுவது உலகின் புறக்கண்டு
காமுறுவர் கற்றறிந் தார்.   (௩௱௯௰௯ - 399)
 

தாம் இன்பம் அடைவதாகிய கல்வியினாலே உலகத்தாரும் இன்பம் அடைவதைக் கண்டு, கற்றறிந்தவர், மேன்மேலும் தாம் கற்பதையே விரும்புவார்கள் (௩௱௯௰௯)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

தாம் இன்புறுவதற்குக் காரணமான கல்வியால் உலகமும் இன்புறுவதைக் கண்டு, கற்றறிந்த அறிஞர் மேன்மேலும் (அக் கல்வியையே) விரும்புவர். (௩௱௯௰௯)
—மு. வரதராசன்

தம் மனத்தை மகிழ்விக்கும் கல்வியினால் உலகம் மகிழ்வதைக் கண்டு கற்று அறிந்தவர்கள் மேலும் கற்கவே விரும்புவார்கள். (௩௱௯௰௯)
—சாலமன் பாப்பையா

தமக்கு இன்பம் தருகின்ற கல்வியறிவு உலகத்தாருக்கும் இன்பம் தருவதைக் கண்டு, அறிஞர்கள் மேலும் மேலும் பலவற்றைக் கற்றிட விரும்புவார்கள் (௩௱௯௰௯)
—மு. கருணாநிதி

கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு
மாடல்ல மற்றை யவை.   (௪௱ - 400)
 

‘அழிவில்லாத சிறந்த செல்வம்’ என்பது கல்விச் செல்வமே; மற்றைய பொன் பொருள் மண் என்னும் செல்வங்கள் ஒருவனுக்குச் சிறந்த செல்வம் ஆகா (௪௱)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

ஒருவனுக்கு அழிவு இல்லாத சிறந்த செல்வம் கல்வியே ஆகும், கல்வியைத் தவிர மற்றப் பொருள்கள் (அத்தகைய சிறப்புடைய) செல்வம் அல்ல. (௪௱)
—மு. வரதராசன்

கல்வியே அழிவு இல்லாத சிறந்த செல்வம்; பிற எல்லாம் செல்வமே அல்ல. (௪௱)
—சாலமன் பாப்பையா

கல்வி ஒன்றே அழிவற்ற செல்வமாகும் அதற்கொப்பான சிறந்த செல்வம் வேறு எதுவும் இல்லை (௪௱)
—மு. கருணாநிதி

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

இராகம்: மகாநந்தி  |  தாளம்: ஆதி
பல்லவி:
கைப் பொருள் தன்னில் மெய்ப் பொருள் கல்வி எனும் கைப்
கருத்தினை யறிந்திடுவோம்

அநுபல்லவி:
பொய்ப் பொருள் போகத்தில்
புரண்டிடும் செல்வத்தைப்
போற்றத் தகுந்த விதம்
பொலிவுறச் செய்வதினால்

சரணம்:
தோண்டு மளவில் மணல் கேணியில் நீர் ஏறும்
துலங்கும் மக்களறிவும் கற்றனைத்தே ஊரும்
வேண்டு மளவும் கற்கக் கசடறக் கற்பவை
விளங்கிடக் கற்றவிதம் நிற்பதே தக்கவை

"எண்ணென்ப வேனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்" காம் துணை என்றும்
எண்ணில் அழியாச் செல்வம் கல்வியாம் பொருளே
எழுமைக்கும் பயன்பெற இசைத்திடும் குறளே




பிரபலமான அதிகாரம்

பிரபலமான குறள்

குறளில் பல முறை தோன்றிய சொல்
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

பல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22