குற்றங்கூறாமை

செருக்குஞ் சினமும் சிறுமையும் இல்லார்
பெருக்கம் பெருமித நீர்த்து.   (431)

செருக்கும், சினமும், சிறுமைக் குணமும் இல்லாதவருடைய பெருஞ் செல்வமானது சான்றோரால் மதிக்கப்படும் தன்மையை உடையது ஆகும்
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

இவறலும் மாண்பிறந்த மானமும் மாணா
உவகையும் ஏதம் இறைக்கு.   (432)

ஈயாத உலோபமும், மாட்சியில்லாத மானவுணர்வும், தகுதியில்லாத உவகையும் தலைவனாக இருப்பவனுக்குக் கேடுதரும் குற்றங்கள் ஆகும்
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

தினைத்துணையாங் குற்றம் வரினும் பனைத்துணையாக்
கொள்வர் பழிநாணு வார்.   (433)

பழிச்சொல்லுக்கு வெட்கப்படுகின்றவர்கள், தினை அளவான சிறு குற்றம் தம்மிடம் வந்தாலும், அதனைப் பனையளவு பெரிதாகக் கருதி வருந்துவார்கள்
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

குற்றமே காக்க பொருளாகக் குற்றமே
அற்றந் த்ரூஉம் பகை.   (434)

தனக்கு முடிவைத் தருகின்ற கொடிய பகை குற்றமே; ஆகவே குற்றம் செய்யாதிருப்பதே பொருளாகத் தன்னை எப்போதும் காத்துக் கொள்க
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும்.   (435)

குற்றம் வருவதற்கு முன்பே, வராமல் காத்துக் கொள்ளாதவன் வாழ்க்கையானது, நெருப்பின் முன்னர் வைத்த வைக்கோல் போர் போலக் கெடும்
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றங் காண்கிற்பின்
என்குற்ற மாகும் இறைக்கு.   (436)

தன் குற்றத்தையும் வராமல் நீக்கிக் கொண்டு, பிறர் குற்றங்களையும் கண்டறிந்து நீக்குவானானால், அரசனுக்கு என்ன குற்றம் உண்டாகும்?
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

செயற்பால செய்யா திவறியான் செல்வம்
உயற்பால தன்றிக் கெடும்.   (437)

செல்வம் பெற்ற போது அதனாலே செய்ய வேண்டிய செயல்களைச் செய்யாமல் தவறியவனுடைய செல்வமானது, நிலைக்கும் தன்மையற்று, அழியும்
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

பற்றுள்ளம் என்னும் இவறன்மை எற்றுள்ளும்
எண்ணப் படுவதொன் றன்று.   (438)

செல்வத்தின் மேல் பற்றுக் கொண்ட உள்ளம் எனப்படும் கஞ்சத்தனம், எந்தக் குற்றங்களோடும் எண்ணப்படும் ஒன்றாக இல்லாமற், பெருங் குற்றமாகும்
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

வியவற்க எஞ்ஞான்றும் தன்னை நயவற்க
நன்றி பயவா வினை.   (439)

எப்போதும் தன்னையே வியந்து பேசுதல் கூடாது; நன்மை பயவாத செயல்களையும் ஒருபோதும் செய்ய விரும்புதலும் செய்தலும் கூடாது
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

காதல காதல் அறியாமை உய்க்கிற்பின்
ஏதில ஏதிலார் நூல்.   (440)

தன் விருப்பத்தைப் பிறர் அறியாதபடி நுகர வல்லவனானால், அவனைப் பகைத்தவர் செய்யும் சூழ்ச்சிகள் எல்லாம் பயனில்லாமல் அழிந்து போகும்
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)