வலியறிதல்

வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்
துணைவலியும் தூக்கிச் செயல்.   (471)

செயலில் வலிமையும், தன் வலிமையும், மாற்றானது வலிமையும், துணைசெய்வாரின் வலிமையும் ஆராய்ந்தே செயலைச் செய்ய வேண்டும்
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

ஒல்வ தறிவது அறிந்ததன் கண்தங்கிச்
செல்வார்க்குச் செல்லாதது இல்   (472)

தன்னாலே முடியக்கூடியவனை ஆராய்ந்து அறிந்து, அச்செயலிலேயே நிலைத்து நின்று முயற்சி செய்பவர்களுக்கு முடியாத செயல் எதுவும் இல்லை
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

உடைத்தம் வலியறியார் ஊக்கத்தின் ஊக்கி
இடைக்கண் முரிந்தார் பலர்.   (473)

தம்மிடமுள்ள வலிமையை அறியாதவராய், மனவெழுச்சியினாலே தூண்டப்பட்டுச் செயலைத் தொடங்கிவிட்டு, இடையிலே முரிந்து போனவர்கள் உலகிற் பலராவர்
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

அமைந்தாங் கொழுகான் அளவறியான் தன்னை
வியந்தான் விரைந்து கெடும்.   (474)

மற்றவரோடு பொருந்தி நடக்காதவனாகித் தன் வலிமை அளவை அறியாதவனும் ஆகி, தன்னை வல்லவன் என்று வியந்து நடப்பவன் விரைவிற் கெடுவான்
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்
சால மிகுத்துப் பெயின்.   (475)

மென்மையான மயிலிறகை ஏற்றியுள்ள வண்டியும், அம் மயிலிறகையே அளவுக்கு மிகுதியாக ஏற்றினால் அச்சு முரிந்து கெடும்
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந் தூக்கின்
உயிர்க்கிறுதி ஆகி விடும்.   (476)

மரத்தின் நுனிக்கொம்பு வரையும் ஏறிவிட்டவர்கள், அதனையும் கடந்து மேலே செல்வதற்கு முயன்றால் அது அவர்கள் உயிருக்கே இறுதியாகி விடும்
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

ஆற்றின் அறவறிந்து ஈக அதுபொருள்
போற்றி வழங்கு நெறி.   (477)

தன்னிடமுள்ள பொருளின் அளவைத் தெரிந்து, அதற்குத் தகுந்த அளவே கொடுத்து உதவுக; அது பொருளைப் போற்றி வழங்குவதற்குரிய நெறியாகும்
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

ஆகாறு அளவிட்டி தாயினுங் கேடில்லை
போகாறு அகலாக் கடை.   (478)

வருமானம் வருகின்ற வழியானது சிறிதாக இருந்தாலும், அது செலவாகிப் போகும் வழியானது விரியாதிருந்தால், அவனுக்குக் கேடில்லை
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல
இல்லாகித் தோன்றாக் கெடும்.   (479)

தன்னுடைய செல்வத்தின் அளவை அறிந்து அதற்கு ஏற்றபடி வாழாதவனுடைய வாழ்க்கை உள்ளது போலத் தோன்றினாலும் இல்லாததாய்க் கெடும்
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

உளவரை தூக்காத ஒப்புர வாண்மை
வளவரை வல்லைக் கெடும்.   (480)

தன்னுடைய செல்வத்தின் அளவை ஆராயாது அளவு கடந்து உதவி வந்தால், அவன் செல்வத்தின் அளவும் விரைவில் கெட்டுப் போகும்
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)