படர்மெலிந்திரங்கல்

மறைப்பேன்மன் யானிஃதோ நோயை இறைப்பவர்க்கு
ஊற்றுநீர் போல மிகும்.   (1161)

பிரிவுத் துன்பமான இந்த நோயை, பிறர் அறியாதபடி மறைப்பேன்; ஆனால், அ·து ஊற்று நீரைப் போல மேன்மேலும் சுரந்து சுரந்து பெருகுகின்றதே
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

கரத்தலும் ஆற்றேன்இந் நோயைநோய் செய்தார்க்கு
உரைத்தலும் நாணுத் தரும்.   (1162)

காமநோயை முழுவதும் மூடி மறைக்கவும் முடியவில்லை; நோயைச் செய்த காதலருக்குத் தூது அனுப்புவதும் என் பெண்ணைக்கு நாணம் தருகின்றதே!
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

காமமும் நாணும் உயிர்காவாத் தூங்கும்என்
நோனா உடம்பின் அகத்து.   (1163)

பிரிவுத் துயராலே நலியும் என் உயிரையே காவடித் தண்டாகக் கொண்டு, காமமும் நாணமும் இருபாலும் சம எடையாகத் தூங்குகின்றனவே?
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

காமக் கடல்மன்னும் உண்டே அதுநீந்தும்
ஏமப் புணைமன்னும் இல்.   (1164)

காமமாகிய நோயும் கடலைப் போலப் பெருகியுள்ளது; அதைக் கடக்கும் தோணியாகிய காதலர்தாம் இப்போது நம்மோடு உடனில்லாமற் போயினர்!
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

துப்பின் எவனாவர் மன்கொல் துயர்வரவு
நட்பினுள் ஆற்று பவர்.   (1165)

இனிமையான நட்புடைய நம்மிடையே துன்பத்தைச் செய்யும் நம் காதலர், பகையை வெல்வதற்கான வலிமை வேண்டும் போது என்னதான் செய்வாரோ?
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

இன்பம் கடல்மற்றுக் காமம் அஃதடுங்கால்
துன்பம் அதனிற் பெரிது.   (1166)

காம இன்பமானது அநுபவிக்கும் போது கடலளவு பெரிதாயுள்ளது; ஆனால், பிரிவுத் துன்பத்தால் வருத்தும் போது, அவ்வருத்தம் கடலை விடப் பெரிதாக உள்ளதே!
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

காமக் கடும்புனல் நீந்திக் கரைகாணேன்
யாமத்தும் யானே உளேன்.   (1167)

காமமாகிய கடும்புனலை நீந்தி நீந்திக் கரை காணாமல் தவிக்கின்றேன்; இந்த நள்ளிரவிலும், யான் ஒருத்தியே தூங்காமல் வருந்தியபடி உள்ளேன்!
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

மன்னுயிர் எல்லாம் துயிற்றி அளித்திரா
என்னல்லது இல்லை துணை.   (1168)

இந்த இராக்காலமும், எல்லா உயிர்களையும் உறங்கச் செய்துவிட்டு, என்னையன்றி யாரையும் இந்நள்ளிரவில் தனக்குத் துணையில்லாமல் உள்ளதே!
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

கொடியார் கொடுமையின் தாம்கொடிய விந்நாள்
நெடிய கழியும் இரா.   (1169)

பிரிவுத் துயராலே வருந்தும் போது மிக நீண்டது போலக் கழிகின்ற இரவுப் பொழுதானது, நம்மைப் பிரிந்து போன காதலரினும் மிகமிகக் கொடுமையானது
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

உள்ளம்போன்று உள்வழிச் செல்கிற்பின் வெள்ளநீர்
நீந்தல மன்னோஎன் கண்.   (1170)

என் உள்ளத்தைப் போலவே, உடலும், அவர் இருக்கும் இடத்திற்கே இப்போதே செல்ல முடிந்ததானால், என் கண்கள் இப்படிக் கண்ணீர் வெள்ளத்தில் நீந்தாவே!
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)