சிற்றினம் சேராமை

சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான்
சுற்றமாச் சூழ்ந்து விடும்.   (௪௱௫௰௧ - 451)
 

பெரியோர் சிற்றினத்தைக் காணின் அஞ்சி ஒதுங்குவார்கள்; சிறியாரோ அதுவே தம் சுற்றமாகக் கருதித் தம்முடன் சேர்த்துக் கொள்வார்கள் (௪௱௫௰௧)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

பெரியோரின் இயல்பு சிற்றினத்தை அஞ்சி ஒதுக்கும், சிறியோரின் இயல்பு அதையே சுற்றமாக எண்ணித் தழுவிக் கொள்ளும். (௪௱௫௰௧)
—மு. வரதராசன்

தீய குணத்தாரோடு சேரப் பெரியோர் அஞ்சுவர்; சிறியாரோ அவர்களைத் தம் உறவாகவே கருதி விடுவர். (௪௱௫௰௧)
—சாலமன் பாப்பையா

பெரியோர், கீழ்மக்களின் கூட்டத்தோடு சேர மாட்டார்கள் ஆனால் சிறியோர்களோ இனம் இனத்தோடு சேருமென்பதுபோல் அந்தக் கீழ் மக்கள் கூட்டத்துடன் சேர்ந்து கொள்வார்கள் (௪௱௫௰௧)
—மு. கருணாநிதி

நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்கு
இனத்தியல்ப தாகும் அறிவு.   (௪௱௫௰௨ - 452)
 

நிலத்தின் தன்மையால், அதிற் சேர்ந்த நீரின் தன்மை மாறுபடும்; அவ்வாறே, மாந்தர்க்கும் அவரவர் சேர்ந்த இனத்தின் தன்மைப்படியே அறிவும் ஆகும் (௪௱௫௰௨)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

சேர்ந்த நிலத்தின் இயல்பால் அந்த நீர் வேறுபட்டு அந் நிலத்தின் தன்மையுடையதாகும், அதுபோல் மக்களுடைய அறிவு இனத்தின் இயல்பினை உடையதாகும். (௪௱௫௰௨)
—மு. வரதராசன்

தான் சேர்ந்த நிலத்தின் தன்மையால் நீர் தன் இயல்பை இழந்து, நிலத்தின் இயல்பாகவே மாறிவிடும்; மனிதரின் அறிவும் அவர் சேர்ந்த இனத்தின் இயல்பாகவே ஆகிவிடும். (௪௱௫௰௨)
—சாலமன் பாப்பையா

சேர்ந்த நிலத்தின் தன்மையால் நீரானது வேறுபட்டு அந்த நிலத்தின் தன்மையை அடைந்துவிடும் அதுபோல மக்களின் அறிவும், தாங்கள் சேர்ந்த இனத்தின் தன்மையைப் பெற்றதாகிவிடும் (௪௱௫௰௨)
—மு. கருணாநிதி

மனத்தானாம் மாந்தர்க் குணர்ச்சி இனத்தானாம்
இன்னான் எனப்படுஞ் சொல்.   (௪௱௫௰௩ - 453)
 

மாந்தர்க்கு உணர்ச்சி என்பது மனத்தின் தன்மையால் உண்டாவதாகும்; இவன் இன்னவன் எனப்படும் சொல்லானது அவனவன் சேர்ந்த இனத்தாலே உண்டாகும் (௪௱௫௰௩)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

மக்களுக்கு இயற்கையறிவு மனத்தால் ஏற்படும், இப்படிப் பட்டவன் என்று உலகத்தாரால் மதிக்கப்படும் சொல், சேர்ந்த இனத்தால் ஏற்படும். (௪௱௫௰௩)
—மு. வரதராசன்

மக்களுக்கு இயல்பான அறிவு அவர்தம் மனததால் உண்டாகும்; ஆனால், ஒருவன் இப்படிப்பட்டவன் என்று பெரியோர் சொல்லும் சொல் அவன் சார்ந்த இனம் காரணமாகவே உண்டாகும். (௪௱௫௰௩)
—சாலமன் பாப்பையா

ஒருவரின் உணர்ச்சி, மனத்தைப் பொருத்து அமையும் அவர் இப்படிப்பட்டவர் என்று அளந்து சொல்வது அவர் சேர்ந்திடும் கூட்டத்தைப் பொருத்து அமையும் (௪௱௫௰௩)
—மு. கருணாநிதி

மனத்து ளதுபோலக் காட்டி ஒருவற்கு
இனத்துள தாகும் அறிவு.   (௪௱௫௰௪ - 454)
 

ஒருவனது மனத்தில் உள்ளதுபோலக் காட்டினாலும், ஒருவனுக்கு அவன் சேர்ந்த இனத்தை யொட்டியதாகவே அறிவு உண்டாகும் (௪௱௫௰௪)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

ஒருவனுக்கு சிறப்பறிவு மனத்தில் உள்ளது போலக் காட்டி (உண்மையாக நோக்கும் போது) அவன் சேர்ந்த இனத்தில் உள்ளதாகும். (௪௱௫௰௪)
—மு. வரதராசன்

அறிவு ஒருவன் மனத்துள் இருப்பது போலத் தோன்றும்; உண்மையில் அது அவன் சேர்ந்துள்ள இனத்தின்பால் இருந்து பெறப்படுவதே ஆகும். (௪௱௫௰௪)
—சாலமன் பாப்பையா

ஒருவரின் அறிவு அவரது மனத்தின் இயல்பு என்பது போல் தோன்றினாலும், அது அவர் சேர்ந்த கூட்டத்தாரின் தொடர்பால் வெளிப்படுவதேயாகும் (௪௱௫௰௪)
—மு. கருணாநிதி

மனந்தூய்மை செய்வினை தூய்மை இரண்டும்
இனந்தூய்மை தூவா வரும்.   (௪௱௫௰௫ - 455)
 

மனம் தூய்மை யாதலும், செய்யும் தொழில் தூய்மை யாதலும் ஆகிய இரண்டும், தான் சேர்ந்த இனத்தின் தூய்மையை ஒட்டியே வரும் (௪௱௫௰௫)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

மனத்தின் தூய்மை செய்யும் செயலின் தூய்மை ஆகிய இவ்விரண்டும் சேர்ந்த இனத்தின் தூய்மையைப் பொறுத்தே ஏற்ப்படும். (௪௱௫௰௫)
—மு. வரதராசன்

மனத்தூய்மை, செய்யும் செயல் சிறப்பு ஆகிய இரண்டும், ஒருவன் சேர்ந்துள்ள இனத்தின் தூய்மையை ஆதாரமாகக் கொண்டே பிறக்கும். (௪௱௫௰௫)
—சாலமன் பாப்பையா

ஒருவன் கொண்டுள்ள தொடர்பு தூய்மையானதாக இருந்தால்தான் அவனுடைய மனமும் செயலும் தூய்மையானவையாக இருக்கும் (௪௱௫௰௫)
—மு. கருணாநிதி

மனந்தூயார்க் கெச்சம்நன் றாகும் இனந்தூயார்க்கு
இல்லைநன் றாகா வினை.   (௪௱௫௰௬ - 456)
 

மனத்திலே தூய்மை உடையவர்களுக்கு எஞ்சி நிற்பதான புகழ் முதலியவை நன்றாக ஆகும்; சேர்ந்த இனம் தூய்மையானவர்க்கு நன்மையாகாத செயல் யாதுமில்லை (௪௱௫௰௬)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

மனம் தூய்மையாகப் பெற்றவர்க்கு , அவர்க்குப் பின் எஞ்சி நிற்கும் புகழ் முதலியவை நன்மையாகும், இனம் தூய்மையாக உள்ளவர்க்கு நன்மையாகாத செயல் இல்லை. (௪௱௫௰௬)
—மு. வரதராசன்

மனத்தால் நல்லவர்க்கு அவர் விட்டுச் செல்வனவே நல்லவை; இனத்தால் நல்லவர்க்கோ நல்லதாக அமையாத செயல் என்று எதுவுமே இல்லை. (௪௱௫௰௬)
—சாலமன் பாப்பையா

மனத்தின் தூய்மையால் புகழும், சேர்ந்த இனத்தின் தூய்மையால் நற்செயல்களும் விளையும் (௪௱௫௰௬)
—மு. கருணாநிதி

மனநலம் மன்னுயிர்க் காக்கம் இனநலம்
எல்லாப் புகழும் தரும்.   (௪௱௫௰௭ - 457)
 

மனத்தின் நல்ல நிலையே மன்னுயிர்க்கு ஆக்கம் தரும்; இனத்தின் நல்ல துணையோ எல்லாவகையான புகழையும் ஒருவனுக்குத் தருவதாகும் (௪௱௫௰௭)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

மனதின் நன்மை உயிர்க்கு ஆக்கமாகும், இனத்தின் தன்மை (அவ்வளவோடு நிற்காமல்) எல்லாப் புகழையும் கொடுக்கும். (௪௱௫௰௭)
—மு. வரதராசன்

நிலைபெற்று வரும் உயிர்களுக்கு மனநலம் சிறந்த செல்வம் தரும்; இன நலமோ எல்லாப் புகழையும் தரும். (௪௱௫௰௭)
—சாலமன் பாப்பையா

மனத்தின் நலம் உயிருக்கு ஆக்கமாக விளங்கும் இனத்தின் நலமோ எல்லாப் புகழையும் வழங்கும் (௪௱௫௰௭)
—மு. கருணாநிதி

மனநலம் நன்குடைய ராயினும் சான்றோர்க்கு
இனநலம் ஏமாப் புடைத்து.   (௪௱௫௰௮ - 458)
 

சான்றோர் மனநலத்தினை நல்லபடியே உடையவரானாலும், அவருக்குத் தாம் சேர்ந்திருக்கும் இனத்தது நலமே எல்லாப் புகழையும் தரும் (௪௱௫௰௮)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

மனதின் நன்மையை உறுதியாக உடையவராயினும் சான்றோர்க்கு இனத்தின் நன்மை மேலும் நல்ல காவலாக அமையும். (௪௱௫௰௮)
—மு. வரதராசன்

மனநலத்தைச் சிறப்பாகப் பெற்றவரே ஆயினும், நல்ல குணம் உடையவர்க்கு இனநலம் பாதுகாப்பாக இருக்கும். (௪௱௫௰௮)
—சாலமன் பாப்பையா

மனவளம் மிக்க சான்றோராக இருப்பினும் அவர் சேர்ந்துள்ள கூட்டத்தினரைப் பொருத்தே வலிமை வந்து வாய்க்கும் (௪௱௫௰௮)
—மு. கருணாநிதி

மனநலத்தின் ஆகும் மறுமைமற் றஃதும்
இனநலத்தின் ஏமாப் புடைத்து.   (௪௱௫௰௯ - 459)
 

மனத்தின் செம்மையாலே மறுமை இன்பம் உண்டாகும்; மற்று அந்த மறுமையும், சேர்ந்த இனத்தின் செம்மையால் நல்ல பாதுகாப்புடன் இருக்கும் (௪௱௫௰௯)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

மனத்தின் நன்மையால் மறுமை இன்பம் உண்டாகும், அதுவும் இனத்தின் நன்மையால் மேலும் சிறப்புடையதாகும். (௪௱௫௰௯)
—மு. வரதராசன்

ஒருவனுக்கு மனநலத்தால் மறுமை இன்பம் கிடைக்கும். அதுவுங்கூட இனநலத்தால் வலிமை பெறும். (௪௱௫௰௯)
—சாலமன் பாப்பையா

நல்ல உறுதியான உள்ளம் படைத்த உயர்ந்தோராக இருந்தாலும் அவர் சார்ந்த இனத்தின் உறுதியும் அவருக்கு வலிமையான துணையாக அமையக் கூடியதாகும் (௪௱௫௰௯)
—மு. கருணாநிதி

நல்லினத்தி னூங்குந் துணையில்லை தீயினத்தின்
அல்லற் படுப்பதூஉம் இல்.   (௪௱௬௰ - 460)
 

நல்ல இனத்தைக் காட்டிலும் துணையாவது உலகத்தில் யாதுமில்லை; தீய இனத்தை விட அல்லல் படுத்துவதும் உலகத்தில் யாதுமில்லை (௪௱௬௰)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

நல்ல இனத்தைவிடச் சிறந்ததாகிய துணையும் உலகத்தில் இல்லை, தீய இனத்தைவிடத் துன்பப்படுத்தும் பகையும் இல்லை. (௪௱௬௰)
—மு. வரதராசன்

ஒருவனுக்கு நல்ல இனத்தைக் காட்டிலும் பெரிய துணையும் இல்லை; தீய இனத்தைக் காட்டிலும் துன்பம் தருவதும் இல்லை. (௪௱௬௰)
—சாலமன் பாப்பையா

நல்ல இனத்தைக் காட்டிலும் துணையாக இருப்பதும், தீய இனத்தைக் காட்டிலும் துன்பம் தரக்கூடியதும் எதுவுமே இல்லை (௪௱௬௰)
—மு. கருணாநிதி

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

இராகம்: தோடி  |  தாளம்: மிஸ்ரசாப்பு
பல்லவி:
எல்லாப் புகழும் தரும் இனநலமே - மக்கள்
இன்னுயிர்க் காக்கம் தரும் மனநலமே

அநுபல்லவி:
நல்லாரினத்தின் துணை நாளும் நன்மை பயக்கும்
அல்லாத சிற்றினத்தை
அஞ்சும் பெருமையில் நெஞ்சம் தனித்திடும்

சரணம்:
பார்க்கின்ற தண்ணீரெல்லாம் பருகும் நன்னீராகுமோ
சேர்க்கும் இனங்கள் எல்லாம் சிறப்பில் ஒன்றாய் வருமோ
நீர்க்குள்ள தன்மையை நிலத்தால் அறிந்து சொல்வோம்
நினைக்கும் இனத்தைக் கொண்டே மனத்தைப் புரிந்து கொள்வோம்

மனமும் இனமும் மக்கள் வாழ்வின் உயர் நிலைகள்
மதியும் நிதியாக மதிக்கச் செய்யும் பொருள்கள்
மன நலம் நன்குடைய ராயினும் சான்றோர்க்கு
இனநலம் ஏமாப்புடைத்தெனும் திருக்குறள்




பிரபலமான அதிகாரம்

பிரபலமான குறள்

குறளில் பல முறை தோன்றிய சொல்
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

பல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22