மானம்

இன்றி அமையாச் சிறப்பின ஆயினும்
குன்ற வருப விடல்.   (961)

மிகவும் இன்றியமையாத சிறப்புக்களை உடையவாயினும், உயர்குடியில் பிறந்தவர், தாழ்ச்சி வரும்படியான செயல்களைச் செய்யாமல் விட வேண்டும்
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

சீரினும் சீரல்ல செய்யாரே சீரொடு
பேராண்மை வேண்டு பவர்.   (962)

தமக்குச் சிறப்பையே தருமானாலும், தம் குடியின் சிறப்புக்குப் பொருந்தாத செயல்களை, புகழும் மானமும் நிலைப்பதை விரும்புகிறவர்கள் செய்ய மாட்டார்கள்
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

பெருக்கத்து வேண்டும் பணிதல் சிறிய
சுருக்கத்து வேண்டும் உயர்வு.   (963)

உயர் குடியிலே பிறந்தவர்களுக்கு, நிறைந்த செல்வம் உண்டானபோது, பணிவுடைமை வேண்டும்; செல்வம் சுருங்கி வறுமை உண்டாகும்போது உயர்வு வேண்டும்
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

தலையின் இழிந்த மயிரனையர் மாந்தர்
நிலையின் இழிந்தக் கடை.   (964)

நல்ல குடியிலே பிறந்தவர்கள், தம் உயர்வான நிலையை விட்டுத் தாழ்ந்த விடத்து, தலையைவிட்டு அகன்று விழுந்த மயிரைப் போல இழிவு அடைவார்கள்
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

குன்றின் அனையாரும் குன்றுவர் குன்றுவ
குன்றி அனைய செயின்.   (965)

குடிப்பிறப்பாலே குன்று போல உயர்ந்த பெருமையை அடைந்தவர்களும், குன்றியளவு தகுதியற்ற செயல்களைச் செய்தாரானால் தாழ்ச்சி அடைவார்கள்
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

புகழ்இன்றால் புத்தேள்நாட்டு உய்யாதால் என்மற்று
இகழ்வார்பின் சென்று நிலை.   (966)

தன்னை இகழ்பவர்களின் முன்பாக மானமிழந்து நிற்கும் நிலைமை புகழையும் தராது
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

ஒட்டார்பின் சென்றொருவன் வாழ்தலின் அந்நிலையே
கெட்டான் எனப்படுதல் நன்று.   (967)

தன்னை இகழ்பவரின் பின்னே சென்று பொருள் பெற்று, அதனால் உயிர்வாழ்தலைவிட, இறந்தவன் என்று சொல்லப் படுதலே ஒருவனுக்கு நன்மை ஆகும்
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

மருந்தோமற்று ஊன்ஓம்பும் வாழ்க்கை பெருந்தகைமை
பீடழிய வந்த இடத்து.   (968)

தம் குடிக்குரிய பெருந்தன்மை அழியும் நிலையில், தான் இறந்து போகாமல், மானம்விட்டு உடம்பைக் காப்பது பிறவிப் பிணிக்கு ஏற்ற மருந்தாகுமோ?
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்
உயிர்நீப்பர் மானம் வரின்.   (969)

தன் ஒரு மயிர் நீங்கினாலும் உயிர் வாழாத கவரிமானைப் போன்றவர்கள், மானம் இழந்து உயிரைக் காக்கும் நிலைமை வந்தால், அப்போதே உயிரை விட்டுவிடுவார்கள்
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

இளிவரின் வாழாத மானம் உடையார்
ஒளிதொழுது ஏத்தும் உலகு.   (970)

தமக்கு ஓர் இழிவு வந்த போது உயிரை விட்டு விட்ட மானமுள்ளவரது புகழ்வடிவினை, எக்காலத்திலும் உலகத்தார் கைதொழுது போற்றித் துதிப்பார்கள்
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)