ஊழ்

ஆகூழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள்
போகூழால் தோன்றும் மடி.   (௩௱௭௰௧ - 371)
 

ஆவதற்குரிய ஊழ் வந்தால் சோர்வில்லாத முயற்சிகள் தோன்றும்; கைப்பொருள் போவதற்குரிய ஊழ் வந்தால் சோம்பல் தோன்றும் (௩௱௭௰௧)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

கைப்பொருள் ஆவதற்க்கு காரணமான ஊழால் சோர்வில்லாத முயற்சி உண்டாகும், கைப்பொருள் போவதற்க்கு காரணமான ஊழால் சோம்பல் ஏற்படும். (௩௱௭௰௧)
—மு. வரதராசன்

பணம் சேர்வதற்கு உரிய விதி நமக்கு இருந்தால், சேர்ப்பதற்கான முயற்சி உண்டாகும். இருப்பதையும் இழப்பதற்கான விதி இருந்தால் சோம்பல் உண்டாகும். (௩௱௭௰௧)
—சாலமன் பாப்பையா

ஆக்கத்திற்கான இயற்கை நிலை சோர்வு தலை காட்டாத ஊக்கத்தைக் கொடுக்கும் ஊக்கத்தின் அழிவுக்கான இயற்கைநிலை சோம்பலை ஏற்படுத்தும் (௩௱௭௰௧)
—மு. கருணாநிதி

பேதைப் படுக்கும் இழவூழ் அறிவகற்றும்
ஆகலூழ் உற்றக் கடை.   (௩௱௭௰௨ - 372)
 

இழப்பதற்கான ஊழ் ஒருவனைப் பேதையாக்கும்; ஆவதற்கான ஊழ் வந்தால் ஒருவனது அறிவை விரிவாக்கி அவனுக்குப் பல நன்மைகளைத் தரும் (௩௱௭௰௨)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

பொருள் இழந்தற்கு காரணமான ஊழ், பேதை யாக்கும் பொருள் ஆவதற்க்கு காரணமான ஊழ் அறிவைப் பெருக்கும். (௩௱௭௰௨)
—மு. வரதராசன்

தாழ்வதற்கு உரிய விதி இருந்தால் அறிவு மனிதனைப் பேதை ஆக்கும்; உயர்வதற்கு உரிய விதி இருந்தால் அறிவு விரிவு பெறும். (௩௱௭௰௨)
—சாலமன் பாப்பையா

அழிவுதரும் இயற்கை நிலை, அறியாமையை உண்டாக்கும்; ஆக்கம் தரும் இயற்கை நிலை, அதற்கேற்ப அறிவை விரிவாக்கும் (௩௱௭௰௨)
—மு. கருணாநிதி

நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன்
உண்மை யறிவே மிகும்.   (௩௱௭௰௩ - 373)
 

நுண்மையான நூல்கள் பலவற்றை முயன்று கற்றாலும், ஊழின் நிலைமைக்குத் தகுந்தபடி உள்ளதாகும் அறிவே மேம்பட்டுத் தோன்றும் (௩௱௭௰௩)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

ஒருவன் நுட்பமான நூல் பலவற்றைக் கற்றாலும் ஊழுக்கு ஏற்றவாறு அவனுக்கு உள்ள தாகும் அறிவே மேம்பட்டுத் தோன்றும். (௩௱௭௰௩)
—மு. வரதராசன்

பேதை ஆக்குவதற்கு உரிய விதி நமக்கு இருந்தால், நுட்பமான கருத்துக்களை உடைய பல நூல்களைக் கற்றாலும் இயல்பான அறிவே இருக்கும். ( அறிவு விரிவ பெறாது) (௩௱௭௰௩)
—சாலமன் பாப்பையா

கூரிய அறிவு வழங்கக் கூடிய நூல்களை ஒருவர் கற்றிருந்த போதிலும் அவரது இயற்கை அறிவே மேலோங்கி நிற்கும் (௩௱௭௰௩)
—மு. கருணாநிதி

இருவேறு உலகத்து இயற்கை திருவேறு
தெள்ளிய ராதலும் வேறு.   (௩௱௭௰௪ - 374)
 

ஊழின் காரணத்தால் உலகத்து இயற்கையானது இருவேறு வகைப்படும்; செல்வராதல் வேறு ஊழ்; தெளிவான அறிவினராதல் வேறு ஊழ் ஆகும் (௩௱௭௰௪)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

உலகத்தின் இயற்க்கை ஊழின் காரணமாக இரு வேறு வகைப்படும், செல்வம் உடையவராதலும் வேறு அறிவு உடையவராதலும் வேறு. (௩௱௭௰௪)
—மு. வரதராசன்

உலகின் இயல்பு இருவகைப்பட்டது; செல்வரை ஆக்கும் விதியும், அறிஞரை ஆக்கும் விதியும் வேறு வேறாம். (௩௱௭௰௪)
—சாலமன் பாப்பையா

உலகின் இயற்கை நிலை இரு வேறுபட்டதாகும் ஒருவர் செல்வமுடையவராகவும், ஒருவர் அறிவுடையவராகவும் இருப்பதே அந்த வேறுபாடாகும் (௩௱௭௰௪)
—மு. கருணாநிதி

நல்லவை எல்லாஅந் தீயவாம் தீயவும்
நல்லவாம் செல்வம் செயற்கு.   (௩௱௭௰௫ - 375)
 

செல்வம் தேடும் முயற்சிக்கு, நல்லூழால் தீயவும் நல்லவையாவதும், தீயூழால் நல்லவைகளும் தீயவை தருகின்ற தன்மையவாதலும் உண்டு (௩௱௭௰௫)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

செல்வத்தை ஈட்டும் முயற்சிக்கு ஊழ்வகையால் நல்லவை எல்லாம் தீயவை ஆதலும் உண்டு, தீயவை நல்லவை ஆதலும் உண்டு. (௩௱௭௰௫)
—மு. வரதராசன்

நாம் பணத்தைப் பெருக்க எடுக்கும் முயற்சியில் காலம், இடம், தொழில் ஆகியவை சரியாக இருந்தாலும், தீய விதி குறுக்கிட்டால் நட்டம் உண்டாகும். அவை சரியாக இல்லை என்றாலும் நல்ல விதி வருமானால் லாபம் உண்டாகும். (௩௱௭௰௫)
—சாலமன் பாப்பையா

நல்ல செயல்களை ஆற்ற முற்படும்போது அவை தீமையில் போய் முடிந்துவிடுவதும், தீய செயல்களை ஆற்றிட முனையும்போது அவை நல்லவைகளாக முடிந்து விடுவதும் இயற்கை நிலை எனப்படும் (௩௱௭௰௫)
—மு. கருணாநிதி

பரியினும் ஆகாவாம் பாலல்ல உய்த்துச்
சொரியினும் போகா தம.   (௩௱௭௰௬ - 376)
 

வருந்திக் காப்பாற்ற முயன்றாலும் நல்லூழ் இல்லாத போது எதுவுமே ஆகாது; கொண்டு போய் வெளியே சொரிந்தாலும் நல்லூழிருந்தால் தம் பொருள் போகாது (௩௱௭௰௬)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

ஊழால் தமக்கு உரியவை அல்லாதப் பொருள்கள் வருந்திக்காப்பாற்றினாலும் நில்லாமல் போகும் தமக்கு உரியவை கொண்டு போய்ச் சொரிந்தாலும் போகா. (௩௱௭௰௬)
—மு. வரதராசன்

எத்தனை காத்தாலும் நமக்கு விதி இல்லை என்றால், செல்வம் நம்மிடம் தங்காது. வேண்டா என்று நாமே வெளியே தள்ளினாலும் விதி இருந்தால் செல்வம் நம்மை விட்டுப் போகமாட்டாது. (௩௱௭௰௬)
—சாலமன் பாப்பையா

தனக்கு உரிமையல்லாதவற்றை எவ்வளவுதான் பாதுகாப்பாக வைத்தாலும் அவை தங்காமல் போய்விடக் கூடும்; உரிமையுள்ளவற்றை எங்கே கொண்டு போய்ப் போட்டாலும் அவை எங்கும் போகமாட்டா (௩௱௭௰௬)
—மு. கருணாநிதி

வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி
தொகுத்தார்க்கு துய்த்தல் அரிது.   (௩௱௭௰௭ - 377)
 

ஊழை வகுத்தவன் வகுத்துவிட்ட வகைப்படி அல்லாமல் கோடியாகப் பொருள் தொகுத்தவர்க்கும் அவற்றைத் துய்த்தல் என்பது அரிதாகும் (௩௱௭௰௭)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

ஊழ் ஏற்ப்படுத்திய வகையால் அல்லாமல் முயன்று கோடிக்கணக்கானப் பொருளைச் சேர்த்தவருக்கும் அவற்றை நுகர முடியாது. (௩௱௭௰௭)
—மு. வரதராசன்

கோடிப்பொருள் சேர்ந்திருந்தாலும் , இறைவன் விதித்த விதிப்படிதான் நாம் அதை அனுபவிக்க முடியுமே தவிர, நம் விருப்பப்படி அனுபவிப்பது கடினம். (௩௱௭௰௭)
—சாலமன் பாப்பையா

வகுத்து முறைப்படுத்திய வாழ்க்கை நெறியை ஒட்டி நடக்கா விட்டால் கோடிப் பொருள் குவித்தாலும், அதன் பயனை அனுபவிப்பது என்பது அரிதேயாகும் (௩௱௭௰௭)
—மு. கருணாநிதி

துறப்பார்மன் துப்புர வில்லார் உறற்பால
ஊட்டா கழியு மெனின்.   (௩௱௭௰௮ - 378)
 

வந்தடைவதான இன்பங்கள் வந்து சேராமற் போகுமானால் துய்க்கும் பொருள் இல்லாதவர்கள் தம்முடைய ஆசைகளைத் துறப்பார்கள்! (௩௱௭௰௮)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

வரவேண்டிய துன்பங்கள் வந்து வருத்தாமல் நீங்குமானால் நுகரும் பொருள் இல்லாத வறியவர் துறவறம் மேற்க்கொள்வர். (௩௱௭௰௮)
—மு. வரதராசன்

துன்பங்களை அனுபவிக்க வேண்டும் என்னும் விதி, ஏழைகளைத் தடுத்திருக்கவில்லை என்றால், அவர்கள் துறவியர் ஆகியிருப்பார்கள். (௩௱௭௰௮)
—சாலமன் பாப்பையா

நுகர்வதற்குரியது எதுவுமில்லை என்ற உறுதியினால், தம்மை வருத்தக்கூடிய உணர்வுகள் வந்து வருத்தாமல் நீங்கிவிடுமானால் துறவறம் மேற்கொள்வர் (௩௱௭௰௮)
—மு. கருணாநிதி

நன்றாங்கால் நல்லவாக் காண்பவர் அன்றாங்கால்
அல்லற் படுவ தெவன்.   (௩௱௭௰௯ - 379)
 

ஊழால் நன்மைகள் விளையும்போது, அவற்றை நல்லவையாகக் காண்பவர்கள், அ·து இல்லாத கேடு காலத்தில் துன்பப்படுவதுதான் எதற்காக? (௩௱௭௰௯)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

நல்வினை விளையும் போது நல்லவை எனக் கருதி மகிழ்கின்றனர், தீவினை விளையும் போது துன்பப்பட்டுக் கலங்குவது ஏனோ. (௩௱௭௰௯)
—மு. வரதராசன்

நல்லது நடக்கும்போது மட்டும் நல்லது என அனுபவிப்பவர், தீயது நடக்கும்போது மட்டும் துன்பப்படுவது ஏன்? (௩௱௭௰௯)
—சாலமன் பாப்பையா

நன்மையும் தீமையும் வாழ்க்கையில் மாறி மாறி வரும். நன்மை கண்டு மகிழ்கிறவர்கள், தீமை விளையும்போது மட்டும் மனம் கலங்குவது ஏன்? (௩௱௭௰௯)
—மு. கருணாநிதி

ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந் தான்முந் துறும்.   (௩௱௮௰ - 380)
 

ஊழைக் காட்டிலும் பெரிதும் வலிமையானவை யாவை உள்ளன! மற்றொன்றை வலியது என்று கருதினாலும், அங்கும் ஊழே முன்வந்து நிற்கும்! (௩௱௮௰)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

ஊழை விட மிக்க வலிமையுள்ளவை வேறு எவை உள்ளன, ஊழை விலக்கும் பொருட்டு மற்றோரு வழியைஆராய்ந்தாலும் அங்கும் தானே முன் வந்து நிற்கும். (௩௱௮௰)
—மு. வரதராசன்

விதியை வெல்ல வேறொரு வழியை எண்ணி நாம் செயற்பட்டாலும், அந்த வழியிலேயோ வேறு ஒரு வழியிலேயோ அது நம்முன் வந்து நிற்கும்‌; ஆகவே விதியை விட வேறு எவை வலிமையானவை? (௩௱௮௰)
—சாலமன் பாப்பையா

இயற்கை நிலையை மாற்றி மற்றொரு செயற்கை நிலையை அமைத்திட முனைந்தாலும், இயற்கை நிலையே முதன்மையாக வந்து நிற்பதால் அதைவிட வலிமையானவையாக வேறு எவை இருக்கின்றன? (௩௱௮௰)
—மு. கருணாநிதி

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

இராகம்: மத்தியமாவதி  |  தாளம்: ஆதி
பல்லவி:
ஊழ்தான் உயர்ந்த சக்தி - உலகில்
உடன்படுமாயின் நம்செயல் எல்லாம் வெற்றி

அநுபல்லவி:
வாழ்வுறும் மக்கள் வலிமையைக் காட்டிலும்
சூழ்பெரும் உலகின் அமைப்பே மேலேனும்

சரணம்:
வறுமை நோய் புகுத்திட சோம்பலே மிகுவதும்
வளர் செல்வமானது முயற்சியால் சேர்வதும்
பெருமைசேர் கல்விச் செல்வம் பிரிந்து வேறாவதும்
பெரிதும் இயற்கையின் நிகழ்ச்சி என்றே வரும்

"வகுத்தான் வகுத்த வகையல்லாற் கோடி
தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது; எனக் கூடி
மிகுத்த தன் வல்லமையை வியந்திடக் கூறும்
வேறொன்று சூழினும் தான் முந்தித் தேறும்

உலகிடை ஊழே வலியதென்றாலும்
ஓட்டத்தில் நமக்கது முந்திச் சென்றாலும்
விலகிடா முயற்சியால் ஊழையும் வெல்வோம்
மேவும் திருக்குறள் அறம்செய்து மகிழ்வோம்




பிரபலமான அதிகாரம்

பிரபலமான குறள்

குறளில் பல முறை தோன்றிய சொல்
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

பல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22