அறிவுடைமை

அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும்
உள்ளழிக்க லாகா அரண்.   (௪௱௨௰௧ - 421)
 

இறுதிக்காலம் வரையும் காப்பாற்றும் கருவி அறிவு ஆகும்; பகைவருக்கும் உட்புகுந்து அழிக்க இயலாத கோட்டையும் அந்த அறிவு ஆகும் (௪௱௨௰௧)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

அறிவு அழிவு வராமல் காக்கும் கருவியாகும், அன்றியும் பகைகொண்டு எதிர்ப்பவர்க்கும் அழிக்க முடியாத உள்ளரணும் ஆகும். (௪௱௨௰௧)
—மு. வரதராசன்

அறிவு நமக்கு அழிவு வராமல் காக்கும் ஆயுதம், பகைவராலும் அழிக்க முடியாத உட்கோட்டை. (௪௱௨௰௧)
—சாலமன் பாப்பையா

பகையால் அழிவு வாராமல் பாதுகாக்கும் அரண், அறிவு ஒன்றுதான் (௪௱௨௰௧)
—மு. கருணாநிதி

சென்ற இடத்தால் செலவிடா தீதொரீஇ
நன்றின்பால் உய்ப்ப தறிவு.   (௪௱௨௰௨ - 422)
 

மனத்தை அது சென்ற இடங்களிலேயே செல்லவிடாமல் தீமைகளிலிருந்து விலக்கி, நன்மையில் மட்டுமே செல்லவிடுவது அறிவு ஆகும் (௪௱௨௰௨)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

மனத்தை சென்ற இடத்தில் செல்லவிடாமல், தீமையானதிலிருந்து நீக்கிக் காத்து நன்மையானதில் செல்லவிடுவதே அறிவாகும். (௪௱௨௰௨)
—மு. வரதராசன்

மனம் சென்ற வழியெல்லாம் அதைச் செல்ல விடாமல், தீமையை விட்டு விலக்கி, நல்ல வழியில் நடத்துவது அறிவு. (௪௱௨௰௨)
—சாலமன் பாப்பையா

மனம் போகும் வழியெல்லாம் போக விடாமல் தீய வழிகளைத் தள்ளிவிட்டு, நல்வழியைத் தேர்வு செய்வதே அறிவுடைமையாகும் (௪௱௨௰௨)
—மு. கருணாநிதி

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு.   (௪௱௨௰௩ - 423)
 

எந்தப் பொருளைப் பற்றியும், எவரெவரிடமிருந்து கேட்பதானாலும், அப் பொருளினது மெய்யான தன்மைகளைக் காண்பதுதான் அறிவு ஆகும் (௪௱௨௰௩)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

எப்பொருளை யார் யார் இடம் கேட்டாலும் (கேட்டவாறே கொள்ளாமல்) அப் பொருளின் மெய்யானப் பொருளைக் காண்பதே அறிவாகும். (௪௱௨௰௩)
—மு. வரதராசன்

எந்தக் கருத்தை எவர் சொன்னாலும், அக்கருத்தின் உண்மையைக் காண்பது அறிவு. (௪௱௨௰௩)
—சாலமன் பாப்பையா

எந்தவொரு பொருள்குறித்து எவர் எதைச் சொன்னாலும், அதை அப்படியே நம்பி ஏற்றுக் கொள்ளாமல் உண்மை எது என்பதை ஆராய்ந்து தெளிவதுதான் அறிவுடைமையாகும் (௪௱௨௰௩)
—மு. கருணாநிதி

எண்பொருள வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய்
நுண்பொருள் காண்ப தறிவு.   (௪௱௨௰௪ - 424)
 

கேட்பவருக்குப் புரியும்படி எளிமையாகத் தான் விளக்கிச் சொல்லியும், பிறரின் பேச்சுக்களில் உள்ள நுண்மையான பொருளைக் காண்பதும், அறிவு ஆகும் (௪௱௨௰௪)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

தான் சொல்லுவன எளிய பொருளையுடையனவாகப் பதியுமாறு சொல்லி, தான் பிறரிடம் கேட்பவற்றின் நுட்பமானப் பொருளையும் ஆராய்ந்து காண்பது அறிவாகும். (௪௱௨௰௪)
—மு. வரதராசன்

அரிய கருத்துகளைக்கூடக் கேட்பவர்க்கு விளங்கும்படி எளியனவாகவும், அவர் மனங் கொள்ளும்படியும் சொல்லும்; பிறர் சொல்லும் கருத்து நுண்ணியது என்றாலும் அதை எளிதாக விளங்கிக் கொள்ளும்; இது அறிவு. (௪௱௨௰௪)
—சாலமன் பாப்பையா

நாம் சொல்ல வேண்டியவைகளை எளிய முறையில் கேட்போரின் இதயத்தில் பதியுமாறு சொல்லிப் பிறர் சொல்லும் நுட்பமான கருத்துக்களையும் ஆராய்ந்து தெளிவதே அறிவுடைமையாகும் (௪௱௨௰௪)
—மு. கருணாநிதி

உலகம் தழீஇய தொட்பம் மலர்தலும்
கூம்பலும் இல்ல தறிவு.   (௪௱௨௰௫ - 425)
 

உயர்ந்தவர்களைத் தன்னுடையவர்களாகச் செய்து கொள்வதே அறிவு; அத் தொடர்பிலே முதலில் மகிழ்தலும் பின்னர் குவிதலும் இல்லாததும் அறிவு ஆகும் (௪௱௨௰௫)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

உலகத்து உயர்ந்தவரை நட்பாக்கி கொள்வது சிறந்த அறிவு, முன்னே மகிழ்ந்து விரிதலும் பின்னே வருந்திக் குவிதலும் இல்லாத அறிவு. (௪௱௨௰௫)
—மு. வரதராசன்

உலகை நட்பாக்கிக் கொள்வது அறிவு; நட்பின் ஆரம்பத்தில் பெரிதாக மகிழ்வதும், நாளடைவில் வாடுவதும் இல்லாது. எப்போதும் ஒரே சீராக இருப்பது அறிவு. (௪௱௨௰௫)
—சாலமன் பாப்பையா

உயர்ந்தோரே உலகோர் எனப்படுவதால் அவர்களுடன் நட்பு கொண்டு இன்பம் துன்பம் ஆகிய இரண்டையும் ஒரே நிலையாகக் கருதுவதே அறிவுடைமையாகும் (௪௱௨௰௫)
—மு. கருணாநிதி

எவ்வ துறைவது உலகம் உலகத்தோடு
அவ்வ துறைவ தறிவு.   (௪௱௨௰௬ - 426)
 

உயர்ந்தோர் எவ்வாறு வாழ்கின்றார்களோ, அவ்வாறே, அந்த உயர்ந்தவர்களோடு தானும் அங்ஙனமே வாழ்வதுதான் அறிவுடைமை ஆகும் (௪௱௨௰௬)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

உலகம் எவ்வாறு நடைபெறுகின்றதோ, உலகத்தோடு பொருந்திய வகையில் தானும் அவ்வாறு நடப்பதே அறிவாகும். (௪௱௨௰௬)
—மு. வரதராசன்

உலகத்துப் பெரியோர் எவ்வாறு வாழ்கின்றார்களோ, அவரோடு சேர்ந்து, தானும் அப்படியே வாழ்வது அறிவு. (௪௱௨௰௬)
—சாலமன் பாப்பையா

உயர்ந்தோர் வழியில் உலகம் எவ்வாறு நடைபெறுகின்றதோ அதற்கேற்ப நடந்து கொள்வதே அறிவாகும் (௪௱௨௰௬)
—மு. கருணாநிதி

அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார்
அஃதறி கல்லா தவர்.   (௪௱௨௰௭ - 427)
 

பின்னே வரப்போவதை முன்னாலேயே அறிபவர்களே அறிவுடையவர்; அவ்வாறு அறிந்து நடப்பதற்குக் கல்லாதவர்களே அறிவில்லாதவர் ஆவர் (௪௱௨௰௭)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

அறிவுடையோர் எதிர்காலத்தில் நிகழப்போவதை முன்னே எண்ணி அறியவல்லார், அறிவில்லாதவர் அதனை அறிய முடியாதவர். (௪௱௨௰௭)
—மு. வரதராசன்

அறிவுடையார் நாளை வர இருப்பதை முன் அறிய வல்லவர்; அறிவு இல்லாதவரோ அதனை அறிய இயலாதவர். (௪௱௨௰௭)
—சாலமன் பாப்பையா

ஒரு விளைவுக்கு எதிர் விளைவு எப்படியிருக்குமென அறிவுடையவர்கள்தான் சிந்திப்பார்கள்; அறிவில்லாதவர்கள் சிந்திக்க மாட்டார்கள் (௪௱௨௰௭)
—மு. கருணாநிதி

அஞ்சுவ தஞ்சாமை பேதைமை அஞ்சுவது
அஞ்சல் அறிவார் தொழில்.   (௪௱௨௰௮ - 428)
 

அஞ்ச வேண்டியவைகளுக்கு அஞ்சாமல் நடப்பது அறிவில்லாத தன்மை ஆகும்; அஞ்ச வேண்டியதற்கு அஞ்சி விலகி நடப்பதே அறிவுடையவர் செயலாகும் (௪௱௨௰௮)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

அஞ்சத்தக்கதைக் கண்டு அஞ்சாதிருப்பது அறியாமையாகும், அஞ்சத் தக்கதைக் கண்டு அஞ்சுவதே அறிவுடையவரின் தொழிலாகும். (௪௱௨௰௮)
—மு. வரதராசன்

பயப்பட வேண்டியதற்குப் பயப்படாமல் இருப்பது மூடத்தனம்; பயப்படுவது அறிவாளிகளின் செயல். (௪௱௨௰௮)
—சாலமன் பாப்பையா

அறிவில்லாதவர்கள்தான் அஞ்ச வேண்டியதற்கு அஞ்ச மாட்டார்கள் அறிஞர்கள் மட்டுமே அஞ்ச வேண்டியதற்கு அஞ்சுவார்கள் (௪௱௨௰௮)
—மு. கருணாநிதி

எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லை
அதிர வருவதோர் நோய்.   (௪௱௨௰௯ - 429)
 

பின்னர் வரப்போவதை முன்னதாகவே அறிந்து காக்கும் அறிவுடையவர்க்கு, அவர் நடுங்கும்படியாக வருவதான ஒரு துன்பமும் இல்லை (௪௱௨௰௯)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

வரப்போவதை முன்னே அறிந்து காத்துக் கொள்ளவல்ல அறிவுடையவர்க்கு, அவர் நடுங்கும் படியாக வரக்கூடிய துன்பம் ஒன்றும் இல்லை. (௪௱௨௰௯)
—மு. வரதராசன்

நாளை வர இருப்பதை முன்னதாக அறிந்து காக்கும் அறிவை உடையோர்க்கு, அவர் நடுங்க வரும் துன்பமே இல்லை. (௪௱௨௰௯)
—சாலமன் பாப்பையா

வருமுன் அறிந்து காத்துக்கொள்ளும் திறனுடையவர்களுக்கு அதிர்ச்சி தரக்கூடிய துன்பம் ஏற்படாது (௪௱௨௰௯)
—மு. கருணாநிதி

அறிவுடையார் எல்லா முடையார் அறிவிலார்
என்னுடைய ரேனும் இலர்.   (௪௱௩௰ - 430)
 

அறிவுடையோர் எல்லா நன்மையுமே உடையவர் ஆவர்; அறிவில்லாதவர் எதனை உடையவரானாலும் எந்த நன்மையும் இல்லாதவரே ஆவர் (௪௱௩௰)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

அறிவுடையவர் (வேறொன்றும் இல்லாதிருப்பினும்) எல்லாம் உடையவரே ஆவர், அறிவில்லாதவர் வேறு என்ன உடையவராக இருப்பினும் ஒன்றும் இல்லாதவரே ஆவர். (௪௱௩௰)
—மு. வரதராசன்

ஏதும் இல்லாதவரானாலும் அறிவுடையார் எல்லாவற்றையும் உடையவரே; எதைப் பெற்றவராய் இருந்தாலும், அறிவு இல்லாதவர் ஏதும் இல்லாதவரே. (௪௱௩௰)
—சாலமன் பாப்பையா

அறிவு இல்லாதவர்களுக்கு வேறு எது இருந்தாலும் பெருமையில்லை; அறிவு உள்ளவர்களுக்கு வேறு எது இல்லாவிட்டாலும் சிறுமை இல்லை (௪௱௩௰)
—மு. கருணாநிதி

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

இராகம்: மணிரங்கு  |  தாளம்: ஆதி
பல்லவி:
படைக் கலமாய் விளங்கும் கூரறிவுடைமை
பண்புடன் காக்க வரும் இதன் பெருமை

அநுபல்லவி:
உடைக்க முடியாது பகையுள் நுழையாது
ஒரு பெருங் கோட்டை என்றே
உறுதியாய் ஓங்கி நிற்கும்

சரணம்:
மனக்குதிரைக் கறிவுக் கடிவாளம் பூட்டும்
மாபெரும் வீரனின் வல்லமை காட்டும்
தனக்கெதிர் வரும் தீமை யாவையும் ஓட்டும்
தன்மை கொண்ட மக்களின் நன்மையில் கூட்டும்

எப்பொருள் யார் யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பதே அறிவெனும் திருக்குறள்
ஒப்பிடவே எல்லாம் உடையவர் ஆக்கும்
ஊருடன் உலகுடன் உறைந்தினி தாளும்




பிரபலமான அதிகாரம்

பிரபலமான குறள்

குறளில் பல முறை தோன்றிய சொல்
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

பல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22