புலவி

புல்லா திராஅப் புலத்தை அவருறும்
அல்லல்நோய் காண்கம் சிறிது.   (1301)

நாம் ஊடும் போது அவர் அடைகின்ற அல்லல் நோயையும் சிறிது நேரம் காணலாம்; அதற்காக, அவர் வந்ததும், அவர் பாற் சென்று தழுவாமல் பிணங்கியிருப்பாயாக
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

உப்பமைந் தற்றால் புலவி அதுசிறிது
மிக்கற்றால் நீள விடல்.   (1302)

உணவுப் பண்டங்களில், அளவாக உப்புச் சேர்ந்திருப்பது போன்றதே ஊடல்; அதை அளவு கடந்து சிறிது நீள விட்டாலும், உப்பின் மிகுதி போல அது கெட்டுவிடும்
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

அலந்தாரை அல்லல்நோய் செய்தற்றால் தம்மைப்
புலந்தாரைப் புல்லா விடல்.   (1303)

தம்மோடு ஊடியவரைத் தெளிவித்துத் தழுவாமல் விட்டுவிடுதல், துன்புற்று வருந்துவாரை மேலும் துன்பஞ் செய்து வருந்தச் செய்வது போன்ற கொடுமையாகும்!
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

ஊடி யவரை உணராமை வாடிய
வள்ளி முதலரிந் தற்று.   (1304)

ஊடிப் பிணங்கியவரைத் தெளிவித்து அன்பு செய்யாமல் கைவிடுதல், முன்பே நீரில்லாது வாடிப் போன வள்ளிக் கொடியின் வேரை அறுப்பது போன்றது ஆகும்
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

நலத்தகை நல்லவர்க் கேஎர் புலத்தகை
பூவன்ன கண்ணார் அகத்து.   (1305)

நல்ல தகைமைகள் பொருந்தியுள்ள நல்ல ஆடவருக்கு அழகாவது, மலரன்ன கண்களையுடைய அவர் காதலியர் இடத்தே உண்டாகும் ஊடலின் சிறப்பே ஆகும்
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

துனியும் புலவியும் இல்லாயின் காமம்
கனியும் கருக்காயும் அற்று.   (1306)

பெரிய பிணக்கமும் சிறிதான பிணக்கமும் இல்லாமற் போனால், காமமானது, மிகக்கனிந்த கனியும், பழுக்காத கருக்காயும் போலப் பயனற்றது ஆகும்
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

ஊடலின் உண்டாங்கோர் துன்பம் புணர்வது
நீடுவ தன்றுகொல் என்று.   (1307)

ஊடியிருத்தலிலும் காதலர்க்கு உண்டாவதோர் துன்பம் உளது; அது, ‘கூடியிருப்பதுதான் இனிமேல் நீட்டிக்காதோ’ என்று நினைத்து வருந்தும் அச்சமாகும்
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

நோதல் எவன்மற்று நொந்தாரென் றஃதறியும்
காதலர் இல்லா வழி.   (1308)

‘நம்மாலே இவரும் நோயுற்றார்’ என்று உணர்ந்து, அதைத் தீர்க்க முயலும் காதலர் இல்லாத போது, வீணாக வருத்தம் அடைவதனால் என்ன பயன்?
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

நீரும் நிழல தினிதே புலவியும்
வீழுநர் கண்ணே இனிது.   (1309)

நீரும் நிழலிடத்தே உள்ளதானால் இனியதாகும்; அதுபோன்றே, ஊடலும் அன்பு செலுத்துவோரிடத்தே நிகழுமானால், இனிமையைத் தருவதாகும்
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

ஊடல் உணங்க விடுவாரோ டென்னெஞ்சம்
கூடுவேம் என்ப தவா.   (1310)

ஊடல் கொண்ட போது தெளிவித்து இன்பம் செய்யாமல் வாடவிடுகின்றவரோடு, எம் நெஞ்சம் ‘கூடுவோம்’ என்று நினைப்பது, அதுகொண்டுள்ள ஆசையினாலே ஆகும்
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)