உட்பகை

நிழல்நீரும் இன்னாத இன்னா தமர்நீரும்
இன்னாவாம் இன்னா செயின்.   (௮௱௮௰௧ - 881)
 

நிழலும் நீரும் நுகரும் காலத்தில் இன்பமானாலும், பின்னர் நோய் செய்யும்; தழுவவேண்டும் சுற்றத்தாரின் இயல்புகளும் முதலில் இனியவாயினும், பின்னர் இன்னாதனவாகும் (௮௱௮௰௧)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

இன்பம் தரும் நிழலும் நீரும் நோய் செய்வனவாக இருந்தால் தீயனவே ஆகும், அதுபோலவே சுற்றத்தாறின் தன்மைகளும் துன்பம் தருவானால் தீயனவே ஆகும். (௮௱௮௰௧)
—மு. வரதராசன்

நிழலும் நீரும் முதலில் இனியவாக இருந்தாலும், பிறகு துன்பம் தருவனவே. அதபோல, நெருக்கமான உறவும் சொந்தக் கட்சிக்காரரும் கூடப் பழக்கத்தில் இனியவராக இருந்து, செயலில் துன்பம் தந்தால் அது பெருந் துன்பமே. (௮௱௮௰௧)
—சாலமன் பாப்பையா

இனிமையாகத் தெரியும் நிழலும் நீரும்கூடக் கேடு விளைவிக்கக் கூடியவையாக இருந்தால் அவை தீயவைகளாகவே கருதப்படும் அது போலவேதான் உற்றார் உறவினராக உள்ளவர்களின் உட்பகையும் ஆகும் (௮௱௮௰௧)
—மு. கருணாநிதி

வாள்போல பகைவரை அஞ்சற்க அஞ்சுக
கேள்போல் பகைவர் தொடர்பு.   (௮௱௮௰௨ - 882)
 

வாளைப் போல வெளிப்பட்டு நிற்கும் பகைவர்க்கு அஞ்ச வேண்டாம்; சுற்றத்தார் போல அன்புகாட்டி உள்ளத்தில் பகைமறைத்து நிற்பவருக்கே, அஞ்ச வேண்டும் (௮௱௮௰௨)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

வாளைப்போல் வெளிப்படையான பகைவர்க்கு அஞ்ச வேண்டியதில்லை, ஆனால் உறவினரைப் போல் இருந்து உட்பகை கொண்டவரின் தொடர்புக்கு அஞ்ச வேண்டும். (௮௱௮௰௨)
—மு. வரதராசன்

வாளைப்போல் வெளிப்படையாகத் தெரியும் பகைவர்க்கு அஞ்ச வேண்டா; நண்பரைப்போல் வெளியில் காட்டி மனத்துள் பகைவராக‌வே இருப்போரின் தொடர்புக்கு அஞ்சுக. (௮௱௮௰௨)
—சாலமன் பாப்பையா

வெளிப்படையாக எதிரே வரும் பகைவர்களைவிட உறவாடிக் கெடுக்க நினைப்பவர்களிடம்தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் (௮௱௮௰௨)
—மு. கருணாநிதி

உட்பகை அஞ்சித்தற் காக்க உலைவிடத்து
மட்பகையின் மாணத் தெறும்.   (௮௱௮௰௩ - 883)
 

உட்பகையாக விளங்குபவருக்கு அஞ்சித் தன்னைக் காத்துக் கொள்ள வேண்டும்; அங்ஙனம் காவாதிருப்பின், தனக்குத் தளர்ச்சி வந்த போது, அவர்கள் கெடுதல் செய்வார்கள் (௮௱௮௰௩)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

உட்பகைக்கு அஞ்சி ஒருவன் தன்னைக் காத்துக்கொள்ள வேண்டும், தளர்ச்சி வந்த போது மட்கலத்தை அறுக்கும் கருவி போல் அந்த உட்பகை தவறாமல் அழிவு செய்யும். (௮௱௮௰௩)
—மு. வரதராசன்

உட்பகைக்கு அஞ்சித் தன்னைக் காத்துக் கொள்க; காக்காது போனால் நமக்குத் தளர்வு வந்தபோது, மண்கலத்தை அறுக்கும் கைக்கருவிபோல உட்பகையானவர் நம்மை உறுதியாக அழித்து விடுவர். (௮௱௮௰௩)
—சாலமன் பாப்பையா

உட்பகைக்கு அஞ்சி ஒருவன் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் இல்லாவிட்டால் ஒரு சோதனையான நேரத்தில் பச்சை பாண்டத்தை அறுக்கும் கருவிபோல அந்த உட்பகை அழிவு செய்துவிடும் (௮௱௮௰௩)
—மு. கருணாநிதி

மனமாணா உட்பகை தோன்றின் இனமாணா
ஏதம் பலவும் தரும்.   (௮௱௮௰௪ - 884)
 

உள்ளத்தில் திருந்தாத உட்பகை தோன்றினால், அரசன் அதனை அப்போதே ஒழிக்க வேண்டும்; இல்லையானால், அ·து சுற்றம் வசமாகாதபடி குற்றங்களைத் தந்துவிடும் (௮௱௮௰௪)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

மனம் திறந்தாத உட்பகை ஒருவனுக்கு உண்டாகுமானால், அது அவனுக்குச் சுற்றம் சிர்படாமைக்கு காரணமான குற்றம் பலவற்றைத் தரும். (௮௱௮௰௪)
—மு. வரதராசன்

புறத்தே நட்பானவர் போல் தோன்றி அகத்தே திருந்ததாத உட்பகை உண்டானால், அது நம் சுற்றமும் நம் கட்சிக்காரரும் நம் வசப்படாதிருக்கும்படி பல சிக்கல்களையும் உண்டாக்கும். (௮௱௮௰௪)
—சாலமன் பாப்பையா

மனம் திருந்தாத அளவுக்கு உட்பகை விளைவிக்கும் உணர்வு ஒருவனுக்கு ஏற்பட்டுவிடுமானால், அது அவனைச் சேர்ந்தவர்களையே பகைவராக்கும் கேட்டினை உண்டாக்கி விடும் (௮௱௮௰௪)
—மு. கருணாநிதி

உறல்முறையான் உட்பகை தோன்றின் இறல்முறையான்
ஏதம் பலவும் தரும்.   (௮௱௮௰௫ - 885)
 

புறத்தே உறவு முறைத் தன்மையோடு பழகுவாரிடம் உட்பகை தோன்றினால், அ·து, அவனுக்கு இறத்தல் முறைமையோடு கூடிய பல குற்றங்களையும் தரும் (௮௱௮௰௫)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

உறவுமுறையோடு உட்பகை உண்டாகுமானால், அது ஒருவனுக்கு இறக்கும் வகையான துன்பம் பலவற்றையும் கொடுக்கும். (௮௱௮௰௫)
—மு. வரதராசன்

உறவு முறையை உடையவனே ( சொந்தக் கட்சிக்காரனே) உட்பகையானால், அது சாவோடு கூடிய குற்றம் பலவற்றையும் உண்டாக்கும். (௮௱௮௰௫)
—சாலமன் பாப்பையா

நெருங்கிய உறவினருக்கிடையே தோன்றும் உட்பகையானது அவர்களுக்குக் கேடு விளைவிக்கக் கூடிய பல துன்பங்களை உண்டாக்கும் (௮௱௮௰௫)
—மு. கருணாநிதி

ஒன்றாமை ஒன்றியார் கட்படின் எஞ்ஞான்றும்
பொன்றாமை ஒன்றல் அரிது.   (௮௱௮௰௬ - 886)
 

தனக்கு உட்பட்டவர் இடத்திலேயே பகைமை தோன்றினால், தனக்குச் சாவாதிருப்பது கைகூடுவது என்பதும் எக்காலத்திலும் அரியதாகும் (௮௱௮௰௬)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

ஒருவனுடைய உற்றாரிடத்தில் பகைமை ஏற்படுமானால், அந்த உட்பகையால் அவன் அழியாமலிருத்தல் எப்போதும் அரிது. (௮௱௮௰௬)
—மு. வரதராசன்

தன்னுடன் இருப்பவரின் பகை தோன்றுமானால், ஆட்சியின் அழிவைத் தடுக்க ஒருபோதும் முடியாது. (௮௱௮௰௬)
—சாலமன் பாப்பையா

ஒன்றி இருந்தவர்களிடையே உட்பகை தோன்றி விடுமானால், அதனால் ஏற்படும் அழிவைத் தடுப்பது என்பது எந்தக் காலத்திலும் அரிதான செயலாகும் (௮௱௮௰௬)
—மு. கருணாநிதி

செப்பின் புணர்ச்சிபோல் கூடினும் கூடாதே
உட்பகை உற்ற குடி.   (௮௱௮௰௭ - 887)
 

செப்பின் புணர்ச்சி போல வெளிப்பார்வைக்குப் பொருந்தினவர் ஆயினும், உட்பகை உண்டாகிய குடியிலுள்ளவர்கள் தம் உள்ளத்தினாலே ஒன்று கூட மாட்டார்கள் (௮௱௮௰௭)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

செப்பின் இணைப்பைப் போல புறத்தே பொருந்தி இருந்தாலும், உட்பகை உண்டான குடியில் உள்ளவர் அகத்தே பொருந்தி இருக்கமாட்டார். (௮௱௮௰௭)
—மு. வரதராசன்

செப்பு, மூடியோடு சேர்ந்து இருப்பதுபோல் உட்பகை கொண்ட குடும்பமும், கட்சியும், அரசும் வெளியே சேர்ந்து இருந்தாலும் உள்ளத்துள் சேரவே மாட்டா. (௮௱௮௰௭)
—சாலமன் பாப்பையா

செப்பு எனப்படும் சிமிழில் அதன் மூடி பொருந்தியிருப்பது போல வெளித்தோற்றத்துக்கு மட்டுமே தெரியும் அவ்வாறே உட்பகையுள்ளவர்கள் உளமாரப் பொருந்தியிருக்க மாட்டார்கள் (௮௱௮௰௭)
—மு. கருணாநிதி

அரம்பொருத பொன்போலத் தேயும் உரம்பொருது
உட்பகை உற்ற குடி.   (௮௱௮௰௮ - 888)
 

முன் உயர்ந்து வளர்ந்ததே என்றாலும், உட்பகையுள்ள குடியானது, அரத்தினால் அராவப்பட்ட இரும்பைப் போல் நாளுக்கு நாள் தேய்ந்து அழிந்து போகும் (௮௱௮௰௮)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

உட்பகை உண்டான குடி அரத்தினால் தேய்க்கப் பட்ட இரும்பு போல் வலிமை குறைக்கப் பட்டு தேய்ந்து போகும். (௮௱௮௰௮)
—மு. வரதராசன்

அரத்தால் தேய்க்கப்படும் இரும்பு தேய்வது போல, உட்பகை கொண்ட குடு்ம்‌பமும் கட்சியும் அரசும் தமக்கும் பொருது தம் பலம் இழக்கும். (௮௱௮௰௮)
—சாலமன் பாப்பையா

அரத்தினால் தேய்க்கப்படும் இரும்பின் வடிவமும் வலிமையும் குறைவதைப் போல, உட்பகை உண்டான குலத்தின் வலிமையும் தேய்ந்து குறைந்து விடும் (௮௱௮௰௮)
—மு. கருணாநிதி

எட்பக வன்ன சிறுமைத்தே ஆயினும்
உட்பகை உள்ளதாங் கேடு.   (௮௱௮௰௯ - 889)
 

ஒருவனது உட்பகை, அவன் பெருமையை நோக்க, எள்ளின் பிளவு போன்று சிறிதானது என்றாலும், அதனாலும், அவன் பெருமை எல்லாம் பின் காலத்தில் கெட்டுவிடும் (௮௱௮௰௯)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

எள்ளின் பிளவைப் போன்ற சிறிய அளவு உடையதே ஆனாலும், ஒரு குடியை அழிக்கவல்ல கேடு உட்பகையில் உள்ளதாகும். (௮௱௮௰௯)
—மு. வரதராசன்

எள்ளின் பிளவு போல உட்பகை சிறியதாக இருக்கலாம்; என்றாலம் உட்பகை உள்ள கட்சிக்குள்ளேயே அதன் கேடும் இருக்கிறதாம். (௮௱௮௰௯)
—சாலமன் பாப்பையா

எள்ளின் பிளவுபோன்று சிறிதாக இருந்தாலும் உட்பகையால் பெருங்கேடு விளையும் (௮௱௮௰௯)
—மு. கருணாநிதி

உடம்பாடு இலாதவர் வாழ்க்கை குடங்கருள்
பாம்போடு உடனுறைந் தற்று.   (௮௱௯௰ - 890)
 

மனம் பொருந்தாதவரோடு கூடியிருந்து வாழும் வாழ்க்கை ஒரு குடிசையுள்ளே பாம்போடு கூடத் தங்கியிருந்து வருந்துவதைப் போன்றதாகும் (௮௱௯௰)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

அகத்தில் உடண்பாடு இல்லாதவருடன் குடிவாழும் வாழ்க்கை, ஒரு குடிசையிற் பாம்போடு உடன்வாழ்ந்தாற் போன்றது. (௮௱௯௰)
—மு. வரதராசன்

மனப்பொருத்தம் இல்லா‌தவரோடு சேர்ந்து வாழும் வாழ்க்கை, ஒரு குடிசைக்குள்ளே பாம்புடன் சேர்ந்து வாழ்வது போலாகும். (௮௱௯௰)
—சாலமன் பாப்பையா

உள்ளத்தால் ஒன்றுபடாதவர்கள் கூடிவாழ்வது என்பது ஒரு சிறிய குடிலுக்குள் பாம்புடன் இருப்பது போன்று ஒவ்வொரு நொடியும் அச்சம் தருவதாகும் (௮௱௯௰)
—மு. கருணாநிதி

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

இராகம்: லதாங்கி  |  தாளம்: ரூபகம்
பல்லவி:
உட் பகைக்கே அஞ்சு வேண்டுமே - நம்
உயிரைக் காத்துக் கொள்ள வேண்டுமே

அநுபல்லவி:
எட் பகவன்ன சிறுமைத்தே ஆயினும்
உட் பகை உள்ளதாம் கேடுறும் நோயினும்

சரணம்:
இன்பம் தரும் நிழல் நீராயிருப்பினும்
துன்பநோய் தரும் என்றால் தொடுவாரோ எவரேனும்
வன்புள்ள உறவினர் தன்மையும் இதுவன்றோ
வாளினும் கொடியவர் கேளிர் எனல் நன்றோ

புடமிட்ட பொன்னையும் பொடியாக்கும் கருவிபோல்
புணரினும் கூடாத செப்பின் மேல் மூடிபோல்
உடம் பாடில்லாதவர் வாழ்க்கைக் குடங்கருள்
பாம்போடுடன் உறைந்தற்றே எனும் குறள்




பிரபலமான அதிகாரம்

பிரபலமான குறள்

குறளில் பல முறை தோன்றிய சொல்
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

பல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22