பொருள்செயல்வகை

பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்
பொருளல்லது இல்லை பொருள்.   (௭௱௫௰௧ - 751)
 

ஒரு பொருளாக மதிப்பதற்குத் தகுதியில்லாதவரையும், பிறர் மதிக்கும்படியாகச் செய்யக் கூடிய பொருளை அல்லாமல் உலக வாழ்வுக்குச் சிறந்த பொருளாவது யாதும் இல்லை (௭௱௫௰௧)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

ஒரு பொருளாக மதிக்கத் தகாதவரையும், மதிப்புடையவராகச் செய்வதாகிய பொருள் அல்லாமல் சிறப்புடைய பொருள் வேறு இல்லை. (௭௱௫௰௧)
—மு. வரதராசன்

தகுதி அற்றவரையும்கூடத் தகுதி உடையவராக ஆக்கிவிடும் தகுதி உடையது, பணமே அன்றி வேறொன்றும் இல்லை. (௭௱௫௰௧)
—சாலமன் பாப்பையா

மதிக்கத் தகாதவர்களையும் மதிக்கக்கூடிய அளவுக்கு உயர்த்திவிடுவது அவர்களிடம் குவிந்துள்ள பணத்தைத் தவிர வேறு எதுவும் இல்லை (௭௱௫௰௧)
—மு. கருணாநிதி

இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை
எல்லாரும் செய்வர் சிறப்பு.   (௭௱௫௰௨ - 752)
 

பொருள் இல்லாத வறியவரை எல்லாருமே இகழ்ச்சியாகப் பேசுவார்கள்; செல்வம் உடையவரையோ எல்லாரும் சிறப்புச் செய்து போற்றுவார்கள் (௭௱௫௰௨)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

பொருள் இல்லாதவரை (வேறு நன்மை உடையவராக இருந்தாலும்) எல்லாரும் இகழ்வார், செல்வரை (வேறு நன்மை இல்லாவிட்டாலும்) எல்லாரும் சிறப்பு செய்வர். (௭௱௫௰௨)
—மு. வரதராசன்

பணம் இல்லாதவரை எல்லாரும் இகழ்வர். செல்வரையோ எல்லாரும் பெருமைப்படுத்துவர். (௭௱௫௰௨)
—சாலமன் பாப்பையா

பொருள் உள்ளவர்களைப் புகழ்ந்து போற்றுவதும் இல்லாதவர்களை இகழ்ந்து தூற்றுவதும்தான் இந்த உலக நடப்பாக உள்ளது (௭௱௫௰௨)
—மு. கருணாநிதி

பொருளென்னும் பொய்யா விளக்கம் இருளறுக்கும்
எண்ணிய தேயத்துச் சென்று.   (௭௱௫௰௩ - 753)
 

‘பொருள்’ என்னும் நந்தா விளக்கமானது, தன்னை உடையவர் எண்ணிய தேயங்களுக்கும் சென்று, அவர் பகையாகிய இருளைப் போக்கும் வல்லமை உடையதாகும் (௭௱௫௰௩)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

பொருள் என்று சொல்லப்படுகின்ற நந்தா விளக்கு, நினைத்த இடத்திற்குச் சென்று உள்ள இடையூற்றைக் கெடுக்கும் (௭௱௫௰௩)
—மு. வரதராசன்

பணம் எனப்படும் அணையா விளக்கு அயல்நாட்டிற்குள்ளும் சென்று பகையாகிய இருளைப் போக்கும். (௭௱௫௰௩)
—சாலமன் பாப்பையா

பொருள் என்னும் அணையா விளக்கு மட்டும் கையில் இருந்துவிட்டால் நினைத்த இடத்துக்குச் சென்று இருள் என்னும் துன்பத்தைத் துரத்தி விட முடிகிறது (௭௱௫௰௩)
—மு. கருணாநிதி

அறன்ஈனும் இன்பமும் ஈனும் திறனறிந்து
தீதின்றி வந்த பொருள்.   (௭௱௫௰௪ - 754)
 

தீய வழிகளால் அல்லாமல், பொருள் தேடும் திறனை அறிந்து தேடியதனால் வந்தடைந்த செல்வமானது, அறவாழ்க்கையையும், இன்பத்தையும் ஒருங்கே கொடுப்பது ஆகும் (௭௱௫௰௪)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

சேர்க்கும் திறம் அறிந்து தீமை ஒன்றும் இல்லாமல், சேர்க்கப் பட்டுவந்த பொருள் ஒருவனுக்கு அறத்தையும் கொடுக்கும் இன்பத்தையும் கொடுக்கும். (௭௱௫௰௪)
—மு. வரதராசன்

நேரிய வழிகை அறிந்து, தீமை ஏதும் செய்யாமல் சம்பாதிக்கப்பட்ட பணம் அறத்தையும் தரம்; இன்பத்தையும் தரும். (௭௱௫௰௪)
—சாலமன் பாப்பையா

தீய வழியை மேற்கொண்டு திரட்டப்படாத செல்வம்தான் ஒருவருக்கு அறநெறியை எடுத்துக்காட்டி, அவருக்கு இன்பத்தையும் தரும் (௭௱௫௰௪)
—மு. கருணாநிதி

அருளொடும் அன்பொடும் வாராப் பொருளாக்கம்
புல்லார் புரள விடல்.   (௭௱௫௰௫ - 755)
 

‘அருள்’ என்னும் இயல்போடும், மக்களின் அன்போடும் பொருந்திவாராத பொருட் பெருக்கத்தைத் தீயவர் புரள்வதற்கு விலக்கி விட்டுவிட வேண்டும் (௭௱௫௰௫)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

அருளோடும், அன்போடும் பொருந்தாத வழிகளில் வந்த செல்வத்தின் ஆக்கத்தைப் பெற்று மகிழாமல் அதைத் தீமையானது என்று நீக்கிவிட வேண்டும். (௭௱௫௰௫)
—மு. வரதராசன்

பிறர்மீது இரக்கமும் அன்பும் இல்லாமல் சேர்க்கும் பணச் சேமிப்பை ஏற்காது விட்டு விடுக (௭௱௫௰௫)
—சாலமன் பாப்பையா

பெரும் செல்வமாக இருப்பினும் அது அருள் நெறியிலோ அன்பு வழியிலோ வராதபோது அதனைப் புறக்கணித்துவிட வேண்டும் (௭௱௫௰௫)
—மு. கருணாநிதி

உறுபொருளும் உல்கு பொருளும்தன் ஒன்னார்த்
தெறுபொருளும் வேந்தன் பொருள்.   (௭௱௫௰௬ - 756)
 

உடையவர் இல்லாததாலே வந்து சேர்ந்த செல்வமும், சுங்க வரியாக வந்த பொருளும், பகைவரை வென்று பெற்ற திறைப் பொருளும், வேந்தனின் உரிமைப் பொருளாகும் (௭௱௫௰௬)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

இறையாக வந்து சேரும் பொருளும், சுங்கமாகக் கொள்ளும் பொருளும், தன் பகைவரை வென்று திறமையாகக் கொள்ளும் பொருளும் அரசனுடைய பொருள்களாகும். (௭௱௫௰௬)
—மு. வரதராசன்

வாரிசுதாரர் இல்லாமல் வந்த பொருள் வெளிநாட்டு பொருட்களுக்கு விதிக்கப்படும் வரி தன் பகைவர் தனக்குக் கட்டும் கப்பம் என்னும் இவை எல்லாம் அரசிற்கு உரிய பொருள்களாம். (௭௱௫௰௬)
—சாலமன் பாப்பையா

வரியும், சுங்கமும், வெற்றி கொள்ளப்பட்ட பகை நாடு செலுத்தும் கப்பமும் அரசுக்குரிய பொருளாகும் (௭௱௫௰௬)
—மு. கருணாநிதி

அருளென்னும் அன்பீன் குழவி பொருளென்னும்
செல்வச் செவிலியால் உண்டு.   (௭௱௫௰௭ - 757)
 

‘அன்பு’ என்னும் தாய் பெற்றெடுத்த ‘அருள்’ என்னும் குழந்தையானது (௭௱௫௰௭)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

அன்பினால் பெறப்பட்ட அருள் என்றுக் கூறப்படும் குழந்தை, பொருள் என்றுக் கூறப்படும் செல்வமுள்ள செவிலித் தாயால் வளர்வதாகும். (௭௱௫௰௭)
—மு. வரதராசன்

அன்பு பெற்றெடுத்த அருள் என்னும் குழந்தை, பொருள் எனப்படும் இன்பம் தரும் வளர்ப்புத் தாயால் வளரும். (௭௱௫௰௭)
—சாலமன் பாப்பையா

அன்பு என்கிற அன்னை பெற்றெடுக்கும் அருள் என்கிற குழந்தை, பொருள் என்கிற செவிலித் தாயால் வளரக் கூடியதாகும் (௭௱௫௰௭)
—மு. கருணாநிதி

குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன்று
உண்டாகச் செய்வான் வினை.   (௭௱௫௰௮ - 758)
 

தன் கைப்பொருளோடு ஒரு செயலைச் செய்யத் தொடங்குவதானது, குன்றின்மேல் ஏறி நின்று யானைப் போரைக் கண்டாற் போல், துன்பமின்றி இன்பம் தருவதாகும் (௭௱௫௰௮)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

தன் கைப்பொருள் ஒன்று தன்னிடம் இருக்க அதைக் கொண்டு ஒருவன் செயல் செய்தால், மலையின் மேல் ஏறி யானைப் போரைக் கண்டாற் போன்றது. (௭௱௫௰௮)
—மு. வரதராசன்

தன் கையிலே பணம் இருக்க ஒரு செயலைச் செய்யத் தொடங்குவது, ஒருவன் மலை மேல் ஏறி நின்று யானைச் சண்டையைக் கண்டது போலாம். (௭௱௫௰௮)
—சாலமன் பாப்பையா

தன் கைப்பொருளைக்கொண்டு ஒரு தொழில் செய்வது என்பது யானைகள் ஒன்றோடொன்று போரிடும் போது இடையில் சிக்கிக் கொள்ளாமல் அந்தப் போரை ஒரு குன்றின் மீது நின்று காண்பதைப் போன்று இலகுவானது (௭௱௫௰௮)
—மு. கருணாநிதி

செய்க பொருளைச் செறுநர் செருக்கறுக்கும்
எஃகதனிற் கூரிய தில்.   (௭௱௫௰௯ - 759)
 

பகைவரின் மனச் செருக்கை அழித்து வெற்றிபெரும் ஆயுதம், பொருளைக் காட்டிலும் கூர்மையானது வேறில்லை (௭௱௫௰௯)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

ஒருவன் பொருளை ஈட்டவேண்டும், அவனுடைய பகைவரின் செருக்கைக் கெடுக்க வல்ல வாள் அதைவிடக் கூர்மையானது வேறு இல்லை. (௭௱௫௰௯)
—மு. வரதராசன்

எதையும் சாதிக்க எண்ணுவோர் பணத்தைச் சம்பாதியுங்கள்; பகைவரின் அகங்காரத்தை அறுக்கும் கூரிய ஆயுதம், பணத்தைவிட வேறு இல்லை. (௭௱௫௰௯)
—சாலமன் பாப்பையா

பகைவரின் செருக்கை அழிக்கும் தகுதியான கருவி பொருளைத் தவிர வேறொன்றும் இல்லாததால் அதனைச் சேமிக்க வேண்டியுள்ளது (௭௱௫௰௯)
—மு. கருணாநிதி

ஒண்பொருள் காழ்ப்ப இயற்றியார்க்கு எண்பொருள்
ஏனை இரண்டும் ஒருங்கு.   (௭௱௬௰ - 760)
 

சிறந்த வழியோடு வந்த பொருளை மிகுதியாகத் தேடிக் கொண்டவர்களுக்கு, எண்ணப்படும் மற்றையவாகிய அறமும் இன்பமும் ஒருங்கே வந்து வாய்க்கும் பொருள்களாகும் (௭௱௬௰)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

சிறந்ததாகிய பொருளை மிகுதியாக ஈட்டியவர்க்கு, மற்ற அறமும் இன்பமுமாகிய இரண்டும் ஒரு சேரக்கைகூடும் எளிய பொருளாகும். (௭௱௬௰)
—மு. வரதராசன்

நல்ல வழியில் மிகுதியாகப் பணம் சேர்த்தவர்க்கு மற்ற அறமும் இன்பமும் எளிதாக் கிடைக்கும் பொருள்களாகும். (௭௱௬௰)
—சாலமன் பாப்பையா

அறம் பொருள் இன்பம் எனும் மூன்றினுள் பொருந்தும் வழியில் பொருளை மிகுதியாக ஈட்டியவர்களுக்கு ஏனைய இரண்டும் ஒன்றாகவே எளிதில் வந்து சேரும் (௭௱௬௰)
—மு. கருணாநிதி

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

இராகம்: கௌரிமனோகரி  |  தாளம்: ஆதி
பல்லவி:
பொருள் செயல் வகை யறிவோமே - அது
பொருந்தும் நல்ல வழியில்
போற்றிச் செய்வோமே

அநுபல்லவி:
"அருளொடும் அன்பொடும் வாராத பொருளாக்கம்
புல்லார் புரளவிடல்" எனும் குறள் மணி வாக்கும்

சரணம்:
குன்றேறி யானைப் போரைக் காண்பது போல
கொண்டதன் கைப்பொருளால் செயும் தொழிலாலே
என்றுமே உயர்வாகி இருட்பகையை அறுக்கும்
எண்ணிய தேய மெல்லாம் ஏற்றும் பொய்யா விளக்கும்

அன்பு பெற்ற குழந்தையாகும் நல்லருளே
அதை வளர்க்கும் செவிலித்தாயாகும் பொருளே
இன்பமும் நல்லறமும் தனக்கிரு பாலும்
எற்றிடவே உலகில் இருந்தர சாளும்




பிரபலமான அதிகாரம்

பிரபலமான குறள்

குறளில் பல முறை தோன்றிய சொல்
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

பல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22