மக்கட்பேறு

பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த
மக்கட்பேறு அல்ல பிற.   (௬௰௧ - 61)
 

பெறுகின்ற செல்வங்களாகிய அவற்றுள், அறிவறிந்த மக்களைப் பெறுவதைக் காட்டிலும் சிறந்ததாக, பிற எதனையும் யாம் கருதுவதில்லை (௬௰௧)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

பெறத்தகுந்த பேறுகளில் அறிய வேண்டியவைகளை அறியும் நன்மக்களைப் பெறுவதைத் தவிர, மற்றப்பேறுகளை யாம் மதிப்பதில்லை. (௬௰௧)
—மு. வரதராசன்

அறியவேண்டுவனவற்றை அறியும் அறிவு படைத்த பிள்ளைச் செல்வத்தைத் தவிர மற்றவற்றை ஒருவன் பெறும் நன்மையாக நான் எண்ணுவதில்லை. (௬௰௧)
—சாலமன் பாப்பையா

அறிவில் சிறந்த நல்ல பிள்ளைகளைவிட இல்வாழ்க்கையில் சிறந்த பேறு வேறு எதுவுமில்லை (௬௰௧)
—மு. கருணாநிதி

எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்
பண்புடை மக்கட் பெறின்.   (௬௰௨ - 62)
 

பழிச்சொல் ஏற்படாத நற்பண்புடைய மக்களைப் பெற்றிருந்தால், ஒருவனுக்கு ஏழு பிறப்பிலும் தீவினைப்பயன்களாகிய துன்பங்கள் அணுகா (௬௰௨)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

பழி இல்லாத நல்ல பண்பு உடைய மக்களைப்பெற்றால் ஒருவனுக்கு ஏழு பிறவியிலும் தீவினைப் பயனாகிய துன்பங்கள் சென்று சேரா. (௬௰௨)
—மு. வரதராசன்

பழிக்கப்படாத நல்ல குணங்களை உடைய பிள்ளைகளைப் பெற்றால், பெற்றவளை அவனுடைய பிறவிகள்தோறும் துன்பங்கள் தொடமாட்டா. (௬௰௨)
—சாலமன் பாப்பையா

பெற்றெடுக்கும் மக்கள் பழிபடராத பண்புடையவர்களாக இருப்பின், ஏழேழு தலைமுறை எனும் அளவுக்குக் காலமெல்லாம் எந்தத் தீமையும் தீண்டாது (௬௰௨)
—மு. கருணாநிதி

தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள்
தம்தம் வினையான் வரும்.   (௬௰௩ - 63)
 

‘தம் பொருள்’ என்று போற்றுதற்கு உரியவர் தம் மக்களேயாவர்; மக்களாகிய அவர்தம் பொருள்கள் எல்லாம் அவரவர் வினைப்பயனால் வந்தடையும் (௬௰௩)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

தம்மக்களே தம்முடைய பொருள்கள் என்று அறிஞர் கூறுவர். மக்களாகிய அவர்தம் பொருள்கள் அவரவருடைய வினையின் பயனால் வந்து சேரும். (௬௰௩)
—மு. வரதராசன்

பிள்ளைகளைத் தம் செல்வம் என்று அறிந்தோர் கூறுவர். அப்பிள்ளைகள் உள்ளபடியே செல்வமாவது அவரவர் செய்யும் நற்செயல்களால் அமையும். (௬௰௩)
—சாலமன் பாப்பையா

தம் பொருள் என்பது தம்மக்களையேயாம் அம்மக்களின் பொருள்கள் அவரவர் செயல்களின் விளைவாக வரக்கூடியவை (௬௰௩)
—மு. கருணாநிதி

அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்
சிறுகை அளாவிய கூழ்.   (௬௰௪ - 64)
 

தம்முடைய மக்களின் சின்னஞ்சிறு கைகளாலே அளாவப் பெற்றது, மிகவும் எளிமையுடைய கூழேயானாலும், அது பெற்றோருக்கு அமிழ்தினும் இனிமையானதாயிருக்கும் (௬௰௪)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

தம்முடைய மக்களின் சிறு கைகளால் அளாவப்பெற்ற உணவு, பெற்றோர்க்கு அமிழ்தத்தை விட மிக்க இனிமை உடையதாகும். (௬௰௪)
—மு. வரதராசன்

தம் பிள்ளைகளின் சிறு கையால் பிசையப்பட்ட கூழ், அமிழ்தைக் காட்டிலும் மிக இனிது. (௬௰௪)
—சாலமன் பாப்பையா

சிறந்த பொருளை அமிழ்தம் எனக் குறிப்பிட்டாலுங்கூடத் தம்முடைய குழந்தைகளின் பிஞ்சுக்கரத்தால் அளாவப்பட்ட கூழ் அந்த அமிழ்தத்தைவிடச் சுவையானதாகிவிடுகிறது (௬௰௪)
—மு. கருணாநிதி

மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றுஅவர்
சொற்கேட்டல் இன்பம் செவிக்கு.   (௬௰௫ - 65)
 

தம் மக்களின் உடம்பைத் தொடுதல் உலகுக்கு இன்பமாகும் (௬௰௫)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

மக்களின் உடம்பைத் தொடுதல் உடம்பிற்கு இன்பம் தருவதாகும்: அம் மக்களின் மழலைச் சொற்களைக் கேட்டால் செவிக்கு இன்பம் தருவதாகும். (௬௰௫)
—மு. வரதராசன்

பெற்ற பிள்ளைகளின் உடலைத் தழுவுவது உடலுக்கு இன்பம். அவர்களின் பேச்சைக் கேட்பது காதிற்கு இன்பம் (௬௰௫)
—சாலமன் பாப்பையா

தம் குழந்தைகளைத் தழுவி மகிழ்வது உடலுக்கு இன்பத்தையும், அந்தக் குழந்தைகளின் மழலை மொழி கேட்பது செவிக்கு இன்பத்தையும் வழங்கும் (௬௰௫)
—மு. கருணாநிதி

குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்.   (௬௰௬ - 66)
 

தம் மக்களின் மழலைப் பேச்சைக் கேட்டு இன்புறாதவர்களே, ‘குழலிசை இனியது’, ‘யாழிசை இனியது’ என்று புகழ்ந்து கூறுவார்கள் (௬௰௬)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

தம் மக்களின் மழலைச் சொல்லைக் கேட்டு அதன் இனிமையை நுகராதவரே குழலின் இசை இனியது யாழின் இசை இனியது என்று கூறுவர். (௬௰௬)
—மு. வரதராசன்

பெற்ற பிள்ளைகள் பேசும் பொருளற்ற மழலைச் சொல்லைக் கேட்காதவர்தாம், குழலும் யாழும் கேட்க இனியவை என்பர். (௬௰௬)
—சாலமன் பாப்பையா

தங்கள் குழந்தைகளின் மழலைச் சொல்லைக் கேட்காதவர்கள்தான் குழலோசை, யாழோசை ஆகிய இரண்டும் இனிமையானவை என்று கூறுவார்கள் (௬௰௬)
—மு. கருணாநிதி

தந்தை மகற்காற்று நன்றி அவையத்து
முந்தி இருப்பச் செயல்.   (௬௰௭ - 67)
 

ஒரு தந்தை தன் மகனுக்குச் செய்யும் நல்ல உதவி, அவனைக் கற்றோர் அவையிலே முதன்மை பெற்றவனாக இருக்கச் செய்தலே ஆகும் (௬௰௭)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

தந்தை தன் மகனுக்குச் செய்யத்தக்க நல்லுதவி, கற்றவர் கூட்டத்தில் தன் மகன் முந்தியிருக்கும்படியாக அவனைக் கல்வியில் மேம்படச் செய்தலாகும். (௬௰௭)
—மு. வரதராசன்

தகப்பன் தன் பிள்ளைக்குச் செய்யும் நன்மை, கற்றவர் அவையில் முதன்மைப் பெறச் செய்வதே. (௬௰௭)
—சாலமன் பாப்பையா

தந்தை தன் மக்களுக்குச் செய்யவேண்டிய நல்லுதவி அவர்களை அறிஞர்கள் அவையில் புகழுடன் விளங்குமாறு ஆக்குதலே ஆகும் (௬௰௭)
—மு. கருணாநிதி

தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து
மன்னுயிர்க் கெல்லாம் இனிது.   (௬௰௮ - 68)
 

தம்மைக் காட்டினும், தம் மக்கள் அறிவுடையவராக விளக்கம் பெறுதல், பெற்றோருக்கு மட்டுமல்லாமல், பெரிய உலகிலுள்ள உயிர்களுக்கெல்லாம் இனிமையானது ஆகும் (௬௰௮)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

தம் மக்களின் அறிவுடைமை தமக்கு இன்பம் பயப்பதை விட உலகத்து உயிர்களுக்கேல்லாம் மிகுந்த இன்பம் பயப்பதாகும். (௬௰௮)
—மு. வரதராசன்

தம் பிள்ளைகள் அறிவு மிக்கவராக இருப்பது, தம்மைக் காட்டிலும், இப்பெரிய பூமியில் அழியாமல் தொடரும் உயிர்களுக்கு எல்லாம் இனிது. (௬௰௮)
—சாலமன் பாப்பையா

பெற்றோரைக் காட்டிலும் பிள்ளைகள் அறிவிற் சிறந்து விளங்கினால், அது பெற்றோருக்கு மட்டுமேயன்றி உலகில் வாழும் அனைவருக்கும் அக மகிழ்ச்சி தருவதாகும் (௬௰௮)
—மு. கருணாநிதி

ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்.   (௬௰௯ - 69)
 

தன் மகனைச் சான்றாளன் என்று பலரும் போற்றுவதைக் கேள்வியுற்ற தாய், அவனைப் பெற்றபொழுதிலும் பெரிதாக மகிழ்வாள் (௬௰௯)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

தன் மகனை நற்பண்பு நிறைந்தவன் என பிறர் சொல்லக் கேள்வியுற்ற தாய், தான் அவனை பெற்றக் காலத்தில் உற்ற மகிழ்ச்சியை விடப் பெரிதும் மகிழ்வாள். (௬௰௯)
—மு. வரதராசன்

தம் மகனைக் கல்வி ஒழுக்கங்களால் நிறைந்தவன் என்று அறிவுடையோர் கூற அதைக் கேட்ட தாய், அவனைப் பெற்ற பொழுதைக் காட்டிலும் மிகுதியாக மகிழ்வாள். (௬௰௯)
—சாலமன் பாப்பையா

நல்ல மகனைப் பெற்றெடுத்தவள் என்று ஊரார் பாராட்டும் பொழுது அவனைப் பெற்றபொழுது அடைந்த மகிழ்ச்சியைவிட அதிக மகிழ்ச்சியை அந்தத் தாய் அடைவாள் (௬௰௯)
—மு. கருணாநிதி

மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல்எனும் சொல்   (௭௰ - 70)
 

மகன், தந்தைக்குச் செய்யும் உதவி ‘இவன் தந்தை இவனை மகனாகப் பெற என்ன நோன்பு செய்தானோ’ என்னும் புகழ்ச் சொல்லே ஆகும் (௭௰)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

மகன் தன் தந்தைக்குச் செய்யத் தக்க கைம்மாறு, இவன் தந்தை இவனை மகனாகப் பெற என்ன தவம் செய்தானோ என்று பிறர் புகழ்ந்து சொல்லும் சொல்லாகும். (௭௰)
—மு. வரதராசன்

தன்னைக் கல்வி அறிவு உடையவனாய் ஆளாக்கிய தந்தைக்கு மகன் செய்யும் கைம்மாறு, பிள்ளையின் ஒழுக்கத்தையும் அறிவையும் கண்டவர், இப்பிள்ளையைப் பெறுவதற்கு இவன் தகப்பன் என்ன தவம் செய்தானோ என்று சொல்லும் சொல்லைப் பெற்றுத் தருவதே. (௭௰)
—சாலமன் பாப்பையா

``ஆகா! இவனைப் பிள்ளையாகப் பெற்றது இவன் தந்தை பெற்ற பெறும்பேறு'', என்று ஒரு மகன் புகழப்படுவதுதான், அவன் தன்னுடைய தந்தைக்குச் செய்யக்கூடிய கைம்மாறு எனப்படும் (௭௰)
—மு. கருணாநிதி

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

இராகம்: சாமா  |  தாளம்: ரூபகம்
பல்லவி:
மதலையின் மொழிக்கிணையாமோ
மங்கல மாட்சியிலே
நன் கலமாகப் பெறும்

அநுபல்லவி:
குதலை மொழியது குழலினும் இனியது
கொண்டிடும் மேன்மையைத்
தண்டமிழ்க் குறள் சொல்லும்

சரணம்:
இல்லற வாழ்க்கையின் இன்பக் கனியமுதம்
எவரும் மதிக்கவரும் ஈடில்லா மக்கட் செல்வம்
நல்லறம் கூறவும் நடைமுறை தேறவும்
நாட்டின் நலம் கருதி வீட்டினிலே தவழும்

ஈன்ற பொழுதைவிட இனிது மகிழ அன்னை
இவன் தந்தை என்னோற்றானோ என்று புகழத்தன்னை
ஆன்றோரை அணுகி அறிவதெல்லாம் அறிந்து
சான்றோன் இவன் எனத் தகுதிபெற வளரும்




பிரபலமான அதிகாரம்

பிரபலமான குறள்

குறளில் பல முறை தோன்றிய சொல்
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

பல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22