பேதைமை

பேதைமை என்பதொன்று யாதெனின் ஏதங்கொண்டு
ஊதியம் போக விடல்.   (831)

‘பேதைமை’ என்பதன் தன்மை யாது?’ என்றால், ஒன்றைச் செய்யும் போது வரும் துன்பத்தை ஏற்றுக் கொண்டு, அதனால் வரும் ஊதியத்தை விட்டுவிடுதல் ஆகும்
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

பேதைமையுள் எல்லாம் பேதைமை காதன்மை
கையல்ல தன்கட் செயல்.   (832)

பேதைமை என்பவற்றுள் எல்லாம் பெரிய பேதைமையாவது, விரும்பத்தகாத ஒரு செயலைச் செய்யத் தொடங்கி, அதையும் பொருத்தமற்ற வகையில் செய்தல் ஆகும்
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

நாணாமை நாடாமை நாரின்மை யாதொன்றும்
பேணாமை பேதை தொழில்.   (833)

பழிக்கு வெட்கப்படாமையும், நன்மைகளை விரும்பாதிருத்தலும், அன்பரிடம் அன்புகொள்ளாமையும், எதனையும் பேணிக் காவாமையும், பேதையரது தொழிலாகும்
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

ஓதி உணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்காப்
பேதையின் பேதையார் இல்.   (834)

நூல்களை முறையாக ஓதி உணர்ந்தும், பிறருக்குச் சொல்லி வந்தும், தான் அடக்கத்தைக் கொள்ளாத பேதையிலும், பெரிய பேதையர் உலகில் எவரும் இலர்
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

ஒருமைச் செயலாற்றும் பேதை எழுமையும்
தான்புக் கழுந்தும் அளறு.   (835)

இந்தப் பிறப்பில் பேதைமைச் செயல்களையே செய்துவரும் பேதை
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

பொய்படும் ஒன்றோ புனைபூணும் கையறியாப்
பேதை வினைமேற் கொளின்.   (836)

ஒன்றின் செய்வகை அறியாத பேதை அதனைச் செய்வதற்கு முற்படுவதால், அது பொய்யாகிப் போவதுடன், அவனும் தளைபூண்கின்ற துயரத்தை அடைவான்
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதை
பெருஞ்செல்வம் உற்றக் கடை.   (837)

பேதை, தன் முன்வினைப் பயனால் பெருஞ்செல்வத்தை அடைந்த காலத்தில், தொடர்பில்லாத பலரும் நன்றாக அனுபவிக்க, அவன் சுற்றத்தார் பசியால் வாடுவர்
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

மையல் ஒருவன் களித்தற்றால் பேதைதன்
கையொன்று உடைமை பெறின்.   (838)

பேதை ஒரு பொருளைத் தனது உடைமையாகப் பெற்றால், மயங்கிய ஒருவன் மேன்மேலும் கள்ளைப் பருகியது போல நிலைமாறி வழிதவறி நடப்பான்
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

பெரிதினிது பேதையார் கேண்மை பிரிவின்கண்
பீழை தருவதொன் றில்.   (839)

ஒருவகையில், பேதையோடு கொள்ளும் தொடர்பும் இனிமை தருவதேயாகும்; அதுதான், அவனைப் பிரிந்த விடத்துத் துன்பம் தரும் தன்மை இல்லாததால்
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

கழாஅக்கால் பள்ளியுள் வைத்தற்றால் சான்றோர்
குழாஅத்துப் பேதை புகல்.   (840)

சான்றோர்களின் கூட்டத்தில் ஒரு பேதை புகுதலானது, மாசுபடிந்த காலைக் கழுவாமல், தொழுகைக்குரிய பள்ளியினுள்ளே எடுத்து வைப்பது போன்றதாகும்
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)