நட்பாராய்தல்

நாடாது நட்டலிற் கேடில்லை நட்டபின்
வீடில்லை நட்பாள் பவர்க்கு.   (௭௱௯௰௧ - 791)
 

நன்றாக ஆராயாமல் நட்புச் செய்வதைவிடக் கெடுதி எதுவும் இல்லை; அப்படி நட்புச் செய்தபின் கைவிடுதல், நட்பை விரும்புவோரால் முடிவதும் இல்லை (௭௱௯௰௧)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

நட்புச் செய்தபிறகு நட்பை உடையவர்க்கு அதிலிருந்து விடுதலை இல்லை, ஆகையால் ஆராயாமல் நட்புச் செய்வது போல் கெடுதியானது வேறு இல்லை. (௭௱௯௰௧)
—மு. வரதராசன்

விரும்பி நட்புச் செய்தவர்க்கு ஒருவருடன், நட்புக் கொண்ட பின் அந்த நட்பை விடுவது கடினம். அதனால் முன்பே ஒருவரைப் பற்றி நன்கு அறியாமல் நட்புக் கொள்வதைக் காட்டிலும் கேடு தருவது வேறு இல்லை. (௭௱௯௰௧)
—சாலமன் பாப்பையா

ஆராய்ந்து பாராமல் கொண்டிடும் தீய நட்பு, அந்த நட்பிலிருந்து விடுபட முடியாத அளவுக்குக் கேடுகளை உண்டாக்கும் (௭௱௯௰௧)
—மு. கருணாநிதி

ஆய்ந்தாய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை
தான்சாம் துயரம் தரும்.   (௭௱௯௰௨ - 792)
 

பலப்பல வகையாலும் ஒருவனைப் பற்றி ஆராய்ந்து தெளிந்த பின் கொள்ளாத நட்பானது, தானே முடிவில் சாக வேண்டிய அளவுக்குப் பெரும் துயரத்தைத் தந்துவிடும் (௭௱௯௰௨)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

ஆராய்ந்து ஆராய்ந்து நட்புக் கொள்ளாதவனுடைய நட்பு, இறுதியில் தான் சாவதற்க்குக் காரணமானத் துயரத்தை உண்டாக்கிவிடும். (௭௱௯௰௨)
—மு. வரதராசன்

ஒருவனது குணத்தையும் குற்றத்தையும் நன்கு எண்ணி நட்புக் கொள்ளாதவனுக்கு, அந்த நட்பு இறுதியில் அவன் சாவதற்கு ஏற்ற துன்பத்தைத் தரும். (௭௱௯௰௨)
—சாலமன் பாப்பையா

திரும்பத் திரும்ப ஆராய்ந்து பார்க்காமல் ஏற்படுத்திக் கொள்கிற நட்பு, கடைசியாக ஒருவர் சாவுக்குக் காரணமாகிற அளவுக்குத் துயரத்தை உண்டாக்கி விடும் (௭௱௯௰௨)
—மு. கருணாநிதி

குணமும் குடிமையும் குற்றமும் குன்றா
இனனும் அறிந்தியாக்க நட்பு.   (௭௱௯௰௩ - 793)
 

ஒருவன் குணத்தையும், அவன் பிறந்த குடியின் சிறப்பையும், அவன் குற்றங்குறைகளையும், நிலையாக அவனோடு இருக்கும் தோழர்களையும் அறிந்தே, நட்புச் செய்ய வேண்டும் (௭௱௯௰௩)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

ஒருவனுடைய குணத்தையும், குடிப்பிறப்பையும் குற்றத்தையும் குறையாத இனத்தாரின் இயல்பையும் அறிந்து அவனேடு நட்புக் கொள்ள வேண்டும். (௭௱௯௰௩)
—மு. வரதராசன்

ஒருவனது குணம், குடும்பப் பிறப்பு, குற்றம், குறையாத சுற்றம் ஆகியவற்றை அறிந்து நட்புக் கொள்க. (௭௱௯௰௩)
—சாலமன் பாப்பையா

குணமென்ன? குடிப்பிறப்பு எத்தகையது? குற்றங்கள் யாவை? குறையாத இயல்புகள் எவை? என்று அனைத்தையும் அறிந்தே ஒருவருடன் நட்புக் கொள்ள வேண்டும் (௭௱௯௰௩)
—மு. கருணாநிதி

குடிப்பிறந்து தன்கண் பழிநாணு வானைக்
கொடுத்தும் கொளல்வேண்டும் நட்பு.   (௭௱௯௰௪ - 794)
 

உயர்ந்த குடியிலே பிறந்தவனும், பழிச்சொற்களுக்கு வெட்கப்படுகிறவனும் ஆகிய ஒருவனை, எந்தப் பொருளைக் கொடுத்தானாலும் நட்பாக்கிக் கொள்ள வேண்டும் (௭௱௯௰௪)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

உயர்ந்த குடியில் பிறந்து, தன்னிடத்தில் வருகின்றப் பழிக்கு நாணுகின்றவனைப் பொருள் கொடுத்தாவது நட்பு கொள்ளவேண்டும். (௭௱௯௰௪)
—மு. வரதராசன்

நல்ல குடியில் பிறந்து தன்மீது சொல்லப்படும் பழிக்கு அஞ்சு பவனின் நட்பை விலை கொடுத்தாவது கொள்ள வேண்டும். (௭௱௯௰௪)
—சாலமன் பாப்பையா

பழிவந்து சேரக் கூடாது என்ற அச்ச உணர்வுடன் நடக்கும் பண்பார்ந்த குடியில் பிறந்தவருடைய நட்பை எந்த வகையிலாவது பெற்றிருப்பது பெரும் சிறப்புக்குரியதாகும் (௭௱௯௰௪)
—மு. கருணாநிதி

அழச்சொல்லி அல்லது இடித்து வழக்கறிய
வல்லார்நடபு ஆய்ந்து கொளல்.   (௭௱௯௰௫ - 795)
 

நாம் தவறு செய்யும் பொழுது கடுமையாகப் பேசியும், மேலும் செய்யாதபடி தடுத்தும், உலக நடையை அறிவதற்கு வல்லவரின் நட்பினையே கொள்ள வேண்டும் (௭௱௯௰௫)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

நன்மை இல்லாதச் சொற்களைக் கண்டபோது வருந்தும்படியாக இடிந்துச் சொல்லி, உலகநடையை அறிய வல்லவரின் நட்பை ஆராய்ப்து கொள்ள வேண்டும். (௭௱௯௰௫)
—மு. வரதராசன்

நாம் தவறு செய்ய எண்ணினால் நம் மனம் நோகச் சொல்லியும் செய்து விட்டால் கண்டித்தும், உலக வழக்கினை அறிந்து செய்யும் ஆற்றலைப் பெற்றும் உள்ளவரை அறிந்து அவர் நட்பைக் கொள்க. (௭௱௯௰௫)
—சாலமன் பாப்பையா

தவறு செய்கின்றவர் கண்ணீர் விடுமளவுக்குக் கண்டித்து, அறிவுரை வழங்கக் கூடிய ஆற்றலுடையவரின் நட்பையே தெளிவான நட்பாக எண்ண வேண்டும் (௭௱௯௰௫)
—மு. கருணாநிதி

கேட்டினும் உண்டோர் உறுதி கிளைஞரை
நீட்டி அளப்பதோர் கோல்.   (௭௱௯௰௬ - 796)
 

ஒருவனுக்கு கெடுதல் உண்டாவதாலும் ஒருவகை நன்மை உண்டு; அது, நண்பரின் உறவை அளந்து அறியும் அளவுகோலாக அது விளங்குவதுதான் (௭௱௯௰௬)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

கேடு வந்த போதும் ஒருவகை நன்மை உண்டு, அக் கேடு ஒருவனுடைய நண்பரின் இயல்புகளை நீட்டிஅளந்து பார்ப்பதொரு கோலாகும். (௭௱௯௰௬)
—மு. வரதராசன்

எவன் நமக்கு உற்ற நண்பன் என்பதை நீட்டி அளந்து கொள்ளும் அறிவு நம் துன்பத்தில் உண்டு. (௭௱௯௰௬)
—சாலமன் பாப்பையா

தீமை வந்தால் அதிலும் ஒரு நன்மை உண்டு அந்தத் தீமைதான் நண்பர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று அளந்து காட்டும் கருவியாகிறது (௭௱௯௰௬)
—மு. கருணாநிதி

ஊதியம் என்பது ஒருவற்குப் பேதையார்
கேண்மை ஒரீஇ விடல்.   (௭௱௯௰௭ - 797)
 

ஒருவனுக்கு ஊதியமாவது யாதென்றால், அறிவற்றவர்களோடு அறியாமல் கொண்ட நட்பினை, அவரைப்பற்றித் தெரிந்த அப்பொழுதிலேயே விட்டுவிடுதல் ஆகும் (௭௱௯௰௭)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

ஒருவனுக்கு ஊதியம் என்று சொல்லப்படுவது, அறிவில்லாதவறுடன் செய்து கொண்ட நட்பிலிருந்து நீங்கி அவரைக் கைவிடுதலாகும். (௭௱௯௰௭)
—மு. வரதராசன்

அறிவில்லாதவரோடு கொண்ட நட்பை விட்டு விடுவது, ஒருவனுக்கு இலாபம். (௭௱௯௰௭)
—சாலமன் பாப்பையா

ஒருவருக்குக் கிடைத்த நற்பயன் என்பது அவர் அறிவில்லாத ஒருவருடன் கொண்டிருந்த நட்பைத் துறந்து விடுவதேயாகும் (௭௱௯௰௭)
—மு. கருணாநிதி

உள்ளற்க உள்ளம் சிறுகுவ கொள்ளற்க
அல்லற்கண் ஆற்றறுப்பார் நட்பு.   (௭௱௯௰௮ - 798)
 

உள்ளம் சிறுமை கொள்ளும்படி எதனையுமே நண்பனைக் குறித்து எண்ணக்கூடாது; அல்லல் காலத்திலே கைவிட்டுப் போனவர் நட்பையும் விட்டுவிட வேண்டும் (௭௱௯௰௮)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

ஊக்கம் குறைவதற்குக் காரணமான செயல்களை எண்ணாமலிருக்க வேண்டும், அதுபோல் துன்பம் வந்த போது கைவிடுகின்றவரின் நட்பைக் கொள்ளாதிருக்க வேண்டும். (௭௱௯௰௮)
—மு. வரதராசன்

உற்சாகம் குறைவதற்கான செயல்களை எண்ண வேண்டா; நம் துன்பக் காலத்தில் நம்மைக் கைவிட்டு விடுபவரின் நட்பைக் கொள்ள வேண்டா. (௭௱௯௰௮)
—சாலமன் பாப்பையா

ஊக்கத்தைச் சிதைக்கக்கூடிய செயல்களையும், துன்பம் வரும்போது விலகிவிடக்கூடிய நண்பர்களையும் நினைத்துப் பார்ககாமலே இருந்து விட வேண்டும் (௭௱௯௰௮)
—மு. கருணாநிதி

கெடுங்காலைக் கைவிடுவார் கேண்மை அடுங்காலை
உள்ளினும் உள்ளஞ் சுடும்.   (௭௱௯௰௯ - 799)
 

நாம் கெட்டுப் போன காலத்திலே, நம்மைக் கைவிட்டு விலகிப் போனவரின் நட்பைப் பற்றிச் சாகிற காலத்திலே நினைத்தாலும், நம் உள்ளம் வேதனையால் எரியும் (௭௱௯௰௯)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

கேடு வரும் காலத்தில் கைவிட்டு ஒதுங்குகின்றவரின் நட்பு, எமன் கொல்லும் காலத்தில் நினைத்தாலும் நினைத்த உள்ளத்தை வருத்தும். (௭௱௯௰௯)
—மு. வரதராசன்

கெடும்போது நம்மைக் கைவிட்டவரின் நட்பை நாம் சாகின்ற போது நினைத்தாலும் நம் நெஞ்சம் சுடும். (௭௱௯௰௯)
—சாலமன் பாப்பையா

ஒருவர் கொலைக்கு ஆளாகும் போது கூட, தனக்குக் கேடு வந்த நேரம் கைவிட்டு ஒதுங்கி ஓடிவிட்ட நண்பர்களை நினைத்து விட்டால் அந்த நினைப்பு அவரது நெஞ்சத்தைச் சுட்டுப் பொசுக்கும் (௭௱௯௰௯)
—மு. கருணாநிதி

மருவுக மாசற்றார் கேண்மைஒன் றீத்தும்
ஒருவுக ஒப்பிலார் நட்பு.   (௮௱ - 800)
 

குற்றம் இல்லாத நல்லோர்களின் நட்பையே கொள்ளவேண்டும்; தகுதியில்லாத கீழோரின் நட்பினை, ஒன்றைக் கொடுத்தாவது விட்டுவிடுதல் வேண்டும் (௮௱)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

குற்றமற்றவருடைய நட்பைக் கொள்ள வேண்டும், ஒத்தபண்பை இல்லாதவறுடைய நட்பை ஒன்றைக் கொடுத்தாவது கைவிட வேண்டும். (௮௱)
—மு. வரதராசன்

குற்றம் அற்றவரோடு நட்புக் கொள்க; உலகோடு ஒத்து வராதவரின் நட்பை விலை கொடுத்தாவது விட்டு விடுக. (௮௱)
—சாலமன் பாப்பையா

மனத்தில் மாசு இல்லாதவர்களையே நண்பர்களாகப் பெற வேண்டும் மாசு உள்ளவர்களின் நட்பை, விலை கொடுத்தாவது விலக்கிட வேண்டும் (௮௱)
—மு. கருணாநிதி

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

இராகம்: தோடி  |  தாளம்: ரூபகம்
பல்லவி:
ஆய்ந்து பார்த்துக் கொள்ளவேண்டுமே - நட்பை
ஆய்ந்து பார்த்துக் கொள்ளவேண்டுமே

அநுபல்லவி:
ஆய்ந்தாய்ந்து பாராதான் கேண்மை கடைமுறை
தான் சாம் துயரம் என்றே நண்பரை

சரணம்:
கொடுத்தும் கொளல் வேண்டும் குடிப்பிறந்தார் நட்பு
குற்றமில்லாருடன் கூடுவதும் பெட்பு
இடித்தழச் சொல்லுவார் இணக்கமே நல்லது
இவ்வுலகின் நடை அறியவும் வல்லது

மாட்டியே துன்பத்தில் கைவிடு வோரே
மாய்த்திடும் கூற்றினும் துயரிழைப் போரே
கேட்டிலும் உண்டோர் உறுதி கிளைஞரை
நீட்டி அளப்பதோர் கோல் என்னும் தமிழ்மறை




பிரபலமான அதிகாரம்

பிரபலமான குறள்

குறளில் பல முறை தோன்றிய சொல்
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

பல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22