பிரிவாற்றாமை

செல்லாமை உண்டேல் எனக்குரை மற்றுநின்
வல்வரவு வாழ்வார்க் குரை.   (௲௱௫௰௧ - 1151)
 

பிரிந்து செல்லாமை உண்டானால் எனக்குச் சொல்வாயாக; பிரிந்து போய் விரைந்து திரும்பி வருவது பற்றியானால், அது வரையிலும் வாழ்ந்திருப்பவருக்குச் சொல்வாயாக (௲௱௫௰௧)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

பிரிந்து செல்லாத நிலைமை இருந்தால் எனக்குச் சொல், பிரிந்து சென்று விரைந்து வருதலைப் பற்றியானால் அதுவரையில் உயிர்வாழ வல்லவர்க்குச் சொல். (௲௱௫௰௧)
—மு. வரதராசன்

என்னைப் பிரிவதில்லை என்றால் என்னிடம் சொல். சீக்கிரம் வருவேன் என்பதை எல்லாம் நீ வரும்போது உயிரோடு இருப்பார்களே அவர்களிடம் சொல். (௲௱௫௰௧)
—சாலமன் பாப்பையா

பிரிந்து செல்வதில்லையென்றால் அந்த மகிழ்ச்சியான செய்தியை என்னிடம் சொல் நீ போய்த்தான் தீர வேண்டுமென்றால் நீ திரும்பி வரும்போது யார் உயிரோடு இருப்பார்களோ அவர்களிடம் இப்போது விடைபெற்றுக் கொள் (௲௱௫௰௧)
—மு. கருணாநிதி

இன்கண் உடைத்தவர் பார்வல் பிரிவஞ்சும்
புன்கண் உடைத்தால் புணர்வு.   (௲௱௫௰௨ - 1152)
 

அவர் அன்பான பார்வையும் முன்னர் இனிதாய் இருந்தது; இப்பொழுதோ, பிரிவை நினைத்து அஞ்சுகின்ற துன்பத்தால், அவர் கூடுதலும் துன்பமாகத் தோன்றுகின்றது (௲௱௫௰௨)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

அவருடைய பார்வை முன்பு இன்பம் உடையதாக இருந்தது, இப்போது அவருடைய கூட்டம் பிரிவுக்கு அஞ்சுகின்ற துன்பம் உடையதாக இருக்கின்றது. (௲௱௫௰௨)
—மு. வரதராசன்

அவர் பார்வை எனக்கு மகிழ்ச்சிதான். அவர் செயலோ பிரியப் போகிறார் என்ற அச்சத்தைத் தந்து கொண்டிருக்கிறதே! (௲௱௫௰௨)
—சாலமன் பாப்பையா

முன்பெல்லாம் அவரைக் கண்களால் தழுவிக் கொண்டதே இன்பமாக இருந்தது; ஆனால், இப்போது உடல் தழுவிக் களிக்கும் போதுகூடப் பிரிவை எண்ணும் அச்சத்தால் துன்பமல்லவா வருத்துகிறது! (௲௱௫௰௨)
—மு. கருணாநிதி

அரிதரோ தேற்றம் அறிவுடையார் கண்ணும்
பிரிவோ ரிடத்துண்மை யான்.   (௲௱௫௰௩ - 1153)
 

அறிவு உடையவரிடமும், தாம் காதலித்தவரைப் பிரிவது ஒரு சமயத்தில் உள்ளதனால், அவர், ‘பிரியேன்’ என்று சொன்ன சொல்லையும் என்னால் நம்ப முடியவில்லை! (௲௱௫௰௩)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

அறிவுடைய காதலரிடத்தும் பிரிவு ஒரு காலத்தில் உள்ள படியால் அவர் பிரியேன் என்று சொல்லும் உறுதி மொழியை நம்பித் தெளிவது அரிது. (௲௱௫௰௩)
—மு. வரதராசன்

எல்லாம் அறியும் ஆற்றல் உடைய அவரும் ஒருநேரம் பிரிவார் என்றால், என்மீது அவர் கொண்டிருக்கும் அன்பை அறிந்து கொள்ள முடியவில்லை. (௲௱௫௰௩)
—சாலமன் பாப்பையா

பிரிவுத் துன்பத்தை அறிந்துள்ள காதலரும் நம்மைப் பிரிந்த செல்ல நேரிடுவதால்; ``பிரிந்திடேன்'' என அவர் கூறவதை உறுதி செய்திட இயலாது (௲௱௫௰௩)
—மு. கருணாநிதி

அளித்தஞ்சல் என்றவர் நீப்பின் தெளித்தசொல்
தேறியார்க்கு உண்டோ தவறு.   (௲௱௫௰௪ - 1154)
 

அருள் செய்த காலத்தில், ‘அஞ்சாதே’ என்று கூறி, என் அச்சத்தைப் போக்கியவரே, இப்போது விட்டுப் பிரிவாரானால், அவரை நம்பிய நமக்கும் குற்றம் ஆகுமோ? (௲௱௫௰௪)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

அருள் மிகுந்தவராய் அஞ்ச வேண்டா என்று முன் தேற்றியவர் பிரிந்து செல்வாரானால் அவர் கூறிய உறுதிமொழியை நம்பித் தெளிந்தவர்க்கு குற்றம் உண்டோ. (௲௱௫௰௪)
—மு. வரதராசன்

என்னை மணந்தபோதே என்மீது அன்பு காட்டிப் பயப்படாதே, உன்னைப் பிரியமாட்டேன் என்று சொல்லி என்னைத் தேற்றிய அவர் சொல்லை, நான் நம்பியது தவறோ? (௲௱௫௰௪)
—சாலமன் பாப்பையா

பிரிந்திடேன்; அஞ்சாதே எனச் சொல்லியவர் எனைப்பிரிந்து செல்வாரானால், அவர் சொன்னதை நம்பியதில் என்ன குற்றமிருக்க முடியும்? (௲௱௫௰௪)
—மு. கருணாநிதி

ஓம்பின் அமைந்தார் பிரிவோம்பல் மற்றவர்
நீங்கின் அரிதால் புணர்வு.   (௲௱௫௰௫ - 1155)
 

என்னைக் காப்பதானால், காதலர் பிரியாதபடி தடுத்துக் காப்பாயாக; அவர் பிரிந்து போய்விட்டார் என்றால், மீண்டும் அவரைக் கூடுதல் என்பது நமக்கு அரிதாகும் (௲௱௫௰௫)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

காத்துக் கொள்வதானால் காதலராக அமைந்தவரின் பிரிவு நேராமல் காக்க வேண்டும், அவர் பிரிந்து நீங்கினால் மீண்டும் கூடுதல் அரிது. (௲௱௫௰௫)
—மு. வரதராசன்

என் உயிரைக் காக்க எண்ணினால் அதைக் காப்பதற்கு உரிய அவர், என்னை விட்டுப் பிரிவதைத் தவிர்க்க வேண்டும். மீறிப் பிரிந்தால் நான் இனி அவரைச் சேர்வது அரிது. (௲௱௫௰௫)
—சாலமன் பாப்பையா

காதலர் பிரிந்து சென்றால் மீண்டும் கூடுதல் எளிதல்ல என்பதால், அவர் பிரிந்து செல்லாமல் முதலியேயே காத்துக் கொள்ள வேண்டும் (௲௱௫௰௫)
—மு. கருணாநிதி

பிரிவுரைக்கும் வன்கண்ணர் ஆயின் அரிதவர்
நல்குவர் என்னும் நசை.   (௲௱௫௰௬ - 1156)
 

‘பிரிவைப் பற்றிச் சொல்லும் கொடியவர் அவரானால்’, அவர் மீண்டும் திரும்பி வந்து நமக்கு இன்பம் தருவார் என்னும் நம் ஆசையும், பயன் இல்லாததே! (௲௱௫௰௬)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

பிரிவைப்பற்றி தெரிவிக்கும் அளவிற்குக் கல் நெஞ்சம் உடையவரானால் , அத்தகையவர் திரும்பிவந்து அன்பு செய்வார் என்னும் ஆசை பயனற்றது. (௲௱௫௰௬)
—மு. வரதராசன்

நான் வேலையின் பொருட்டுப் பிரியப் போகிறேன் என்று அவரே என்னிடம் சொல்லும் அளவிற்குக் கொடியவர் என்றால், அவர் பிரிவைத் தாங்க முடியாத என் மீது அன்பு காட்டுவார் என்னும் என் எதிர்பார்ப்பு பயனற்றது. (௲௱௫௰௬)
—சாலமன் பாப்பையா

போய் வருகிறேன் என்று கூறிப் பிரிகிற அளவுக்குக் கல் மனம் கொண்டவர் திரும்பி வந்து அன்பு காட்டுவார் என ஆவல் கொள்வது வீண் (௲௱௫௰௬)
—மு. கருணாநிதி

துறைவன் துறந்தமை தூற்றாகொல் முன்கை
இறைஇறவா நின்ற வளை.   (௲௱௫௰௭ - 1157)
 

நம்மைத் தலைவன் பிரிந்து போயினான் என்பதை, மெலிந்த நம் முன்கையிலிருந்து கழலும் வளைகள், ஊரறிய எடுத்துக் காட்டித் தூற்ற மாட்டவோ? (௲௱௫௰௭)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

என் மெலிவால் முன் கையில் இறை கடந்து கழலும் வளையல்கள், தலைவன் விட்டுப் பிரிந்த செய்தியைப் பலரறியத் தெரிவித்துத் தூற்றாமலிருக்குமோ. (௲௱௫௰௭)
—மு. வரதராசன்

அவர் என்னைப் பிரிய திட்டமிடுகிறார் என்பதை என் முன் கையிலிருந்து கழலும் வளையல்கள் எனக்குத் தெரிவிக்க மாட்டாவோ? (௲௱௫௰௭)
—சாலமன் பாப்பையா

என்னை விட்டுத் தலைவன் பிரிந்து சென்றுள்ள செய்தியை என் முன்கை மூட்டிலிருந்து கழன்று விழும் வளையல் ஊரறியத் தூற்றித் தெரிவித்து விடுமே! (௲௱௫௰௭)
—மு. கருணாநிதி

இன்னாது இனன்இல்ஊர் வாழ்தல் அதனினும்
இன்னாது இனியார்ப் பிரிவு.   (௲௱௫௰௮ - 1158)
 

தோழியவர் எவருமே இல்லாத ஊரில் குடியிருப்பது மிகத் துன்பமானது; இனிய காதலரைப் பிரிந்து தனித்திருப்பது, அதை விட மிகவும் துன்பமானது (௲௱௫௰௮)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

இனத்தவராக நம்மேல் அன்புடையார் இல்லாத ஊரில் வாழ்தல் துன்பமானது, இனியக் காதலரின் பிரிவு அதை விடத் துன்பமானது. (௲௱௫௰௮)
—மு. வரதராசன்

உறவானவர் இல்லாத ஊரிலே வாழ்வது கொடுமை; என் உயிர்க்கு இனியவரைப் பிரிவது அதைவிடக் கொடுமை. (௲௱௫௰௮)
—சாலமன் பாப்பையா

நம்மை உணர்ந்து அன்பு காட்டுபவர் இல்லாத ஊரில் வாழ்வது துன்பமானது; அதைக் காட்டிலும் துன்பமானது இனிய காதலரைப் பிரிந்து வாழ்வது (௲௱௫௰௮)
—மு. கருணாநிதி

தொடிற்சுடின் அல்லது காமநோய் போல
விடிற்சுடல் ஆற்றுமோ தீ.   (௲௱௫௰௯ - 1159)
 

தன்னைத் தொட்டால் சுடுவதல்லாமல், காமநோயைப் போலத் தன்னை அகன்று தொலைவில் விலகினால் சுடுவதற்குத் தீயும் ஆற்றல் உடையது ஆகுமோ! (௲௱௫௰௯)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

நெருப்பு, தன்னைத் தொட்டால் சுடுமே அல்லாமல் காமநோய் போல் தன்னை விட்டு நீங்கிய பொழுது சுடவல்லதாகுமோ. (௲௱௫௰௯)
—மு. வரதராசன்

தீ தன்னைத் தொட்டவரைத்தான் சுடும்; காதல் நோயைப் போல அதை விட்டு அகன்றாலும் சுடுமோ? (௲௱௫௰௯)
—சாலமன் பாப்பையா

ஒருவரையொருவர் காணாமலும் தொடாமலும் பிரிந்திருக்கும் போது காதல் நோய் உடலையும் உள்ளத்தையும் சுடுவது போன்ற நிலை நெருப்புக்கு இல்லை; நெருப்பு தொட்டால் சுடும்; இது, பிரிவில் சுடுகிறதே! (௲௱௫௰௯)
—மு. கருணாநிதி

அரிதாற்றி அல்லல்நோய் நீக்கிப் பிரிவாற்றிப்
பின்இருந்து வாழ்வார் பலர்.   (௲௱௬௰ - 1160)
 

காதலர் பிரிவைப் பொறுத்து, அதனால் வரும் நலிவையும் விலக்கி, பிரிவுத் துயரையும் தாங்கி, அதன் பின்னரும் உயிரோடு இருக்கும் மகளிர் உலகத்தில் பலர்! (௲௱௬௰)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

பிரிய முடியாத பிரிவிற்கு உடன்பட்டு,( பிரியும் போது) துன்பத்தால் கலங்குவதையும், விட்டு பிரிந்த பின் பொருத்திருந்து பின்னும் உயிரோடிருந்து வாழ்வோர் உலகில் பலர். (௲௱௬௰)
—மு. வரதராசன்

சம்பாதிப்பதற்குக் கணவன் பிரிந்தால் அவன் பிரிவைத் தாங்கிக் கொண்டு, பிரிவுத் துன்பத்தையும், விட்டுவிட்டு, அரிய செயலாற்றி உயிர் வாழும் பெண்கள் பலர் இருக்கின்றனர். (௲௱௬௰)
—சாலமன் பாப்பையா

காதலர் பிரிந்து செல்வதற்கு ஒப்புதல் அளித்து, அதனால் ஏற்படும் துன்பத்தைப் போக்கிக் கொண்டு, பிரிந்த பின்னும் பொறுத்திருந்து உயிரோடு வாழ்பவர் பலர் இருக்கலாம்; ஆனால் நான்? (௲௱௬௰)
—மு. கருணாநிதி

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

இராகம்: பாகேஸ்வரி  |  தாளம்: ஆதி
பல்லவி:
செல்லாமை உண்டேல் எனக்குரை மற்று நின்
வல்வரவு வாழ்வார்க்குரை

அநுபல்லவி:
இல்லாமல் எனை விடுத்தே ஏகுவேன் என்ற சொல்
கொல்லாமல் கொல்லுதே
பொல்லாத நெருப்பிதே

சரணம்:
இன்பமான பார்வையும் துன்பமாகத் தோணுதே
இன்னாத பிரிவை எண்ணி என்றன் உள்ளம் வாடுதே
முன்கை வளைகழன்றே என்மெலிவைக் கூறுதே
முன்னம் பிரியேன் என்ற சொல்லை நம்பித் தேறுதே




பிரபலமான அதிகாரம்

பிரபலமான குறள்

குறளில் பல முறை தோன்றிய சொல்
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

பல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22