அழுக்காறாமை

ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்து
அழுக்காறு இலாத இயல்பு.   (௱௬௰௧ - 161)
 

தன் நெஞ்சில் பொறாமை எண்ணம் இல்லாத தன்மையினையே, ஒருவன் தனக்கு உரிய வாழ்க்கை நெறியாகக் கொண்டு வாழ வேண்டும் (௱௬௰௧)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

ஒருவன் தன் நெஞ்சில் பொறாமை இல்லாமல் வாழும் இயல்பைத் தனக்கு உரிய ஒழுக்க நெறியாகக் கொண்டு போற்ற வேண்டும். (௱௬௰௧)
—மு. வரதராசன்

உள்ளத்துள் பொறாமை இல்லாமல் வாழும் குணத்தை, ஒருவன் தனக்கு உரிய ஒழுக்கமாகக் கொள்க. (௱௬௰௧)
—சாலமன் பாப்பையா

மனத்தில் பொறாமையில்லாமல் வாழும் இயல்பை ஒழுக்கத்திற்குரிய நெறியாகப் பெற்று விளங்கிட வேண்டும் (௱௬௰௧)
—மு. கருணாநிதி

விழுப்பேற்றின் அஃதொப்பது இல்லையார் மாட்டும்
அழுக்காற்றின் அன்மை பெறின்.   (௱௬௰௨ - 162)
 

ஒருவன் எவரிடத்திலும் எப்போதும் பொறாமை இல்லாமல் இருக்கின்ற தன்மையைப் பெறுவானாயின், மேலான பேறுகளில் அதற்கு இணையாகச் சிறந்தது எதுவும் இல்லை (௱௬௰௨)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

யாரிடத்திலும் பொறாமை இல்லாதிருக்கப் பெற்றால், ஒருவன் பெறத்தக்க மேம்பாடான பேறுகளில் அதற்கு ஒப்பானது வேறொன்றும் இல்லை. (௱௬௰௨)
—மு. வரதராசன்

எவர் இடத்தும் பொறாமை கொள்ளாதிருப்பதை ஒருவன் பெற்றால் சீரிய சிறப்புகளுள் அது போன்றது வேறு இல்லை. (௱௬௰௨)
—சாலமன் பாப்பையா

யாரிடமும் பொறாமை கொள்ளாத பண்பு ஒருவர்க்கு வாய்க்கப் பெறுமேயானால் அதற்கு மேலான பேறு அவருக்கு வேறு எதுவுமில்லை (௱௬௰௨)
—மு. கருணாநிதி

அறன்ஆக்கம் வேண்டாதான் என்பான் பிறனாக்கம்
பேணாது அழுக்கறுப் பான்.   (௱௬௰௩ - 163)
 

பிறனுடைய ஆக்கத்தைக் கண்டதும், அதனைப் பாராட்டாமல் பொறாமைப்படுகிறவன், தனக்கு அறனும் ஆக்கமும் சேர்வதை விரும்பாதவனே ஆவான் (௱௬௰௩)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

தனக்கு அறமும் ஆக்கமும் விரும்பாதவன் என்று கருதத் தக்கவனே, பிறனுடைய ஆக்கத்தைக் கண்டு மகிழாமல் அதற்காகப் பொறாமைப்படுவான். (௱௬௰௩)
—மு. வரதராசன்

பிறர் உயர்வு கண்டு மகிழாமல் பொறாமைப்படுபவன், அறத்தால் வரும் புண்ணியத்தை வேண்டா என மறுப்பவன் ஆவான் (௱௬௰௩)
—சாலமன் பாப்பையா

அறநெறியையும், ஆக்கத்தையும் விரும்பிப் போற்றாதவன்தான், பிறர் பெருமையைப் போற்றாமல் பொறாமைக் களஞ்சியமாக விளங்குவான் (௱௬௰௩)
—மு. கருணாநிதி

அழுக்காற்றின் அல்லவை செய்யார் இழுக்காற்றின்
ஏதம் படுபாக்கு அறிந்து.   (௱௬௰௪ - 164)
 

‘பொறாமை’ என்னும் தவறான எண்ணத்தால் துன்பமே உண்டாவதை அறிந்து, அறிவாளர், பொறாமையால் தீவினைகளைச் செய்ய மாட்டார்கள் (௱௬௰௪)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

பொறாமைப்படுதலாகிய தவறான நெறியில் துன்பம் ஏற்படுத‌ை அறிந்து, பொறாமை காரணமாக அறமல்லாதவைகளைச் செய்யார் அறிவுடையோர். (௱௬௰௪)
—மு. வரதராசன்

பொறாமை கொண்டால் துன்பம் வரும் என்பதை அறிந்து அறிவுடையோர் பொறாமை காரணமாகத் தீமைகளைச் செய்யமாட்டார் (௱௬௰௪)
—சாலமன் பாப்பையா

தீய வழியில் சென்றால் துன்பம் ஏற்படுமென்பதை அறிந்தவர்கள் பொறாமையினால் தீச்செயல்களில் ஈடுபடமாட்டார்கள் (௱௬௰௪)
—மு. கருணாநிதி

அழுக்காறு உடையார்க்கு அதுசாலும் ஒன்னார்
வழுக்காயும் கேடீன் பது.   (௱௬௰௫ - 165)
 

பொறாமை உடையவரைக் கெடுப்பதற்கு எந்தப் பகையும் வேண்டாம்; அதுவே போதும்; பகைவர் கேடு செய்யத் தவறினாலும், அது தவறாமல் கேட்டைத் தந்துவிடும் (௱௬௰௫)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

பொறாமை உடை‌யவர்க்கு வேறு பகை வேண்டா. அஃது ஒன்றே போதும், பகைவர் தீங்கு செய்யத் தவறினாலும் தவறாது கேட்டைத் தருவது அது. (௱௬௰௫)
—மு. வரதராசன்

பொறாமை உடையவர்க்குத் தீமை தரப் பகைவர் வேண்டியதில்லை; பொறாமையே போதும் (௱௬௰௫)
—சாலமன் பாப்பையா

பொறாமைக் குணம் கொண்டவர்களுக்கு அவர்களை வீழ்த்த வேறு பகையே வேண்டா அந்தக் குணமே அவர்களை வீழ்த்தி விடும் (௱௬௰௫)
—மு. கருணாநிதி

கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்
உண்பதூஉம் இன்றிக் கெடும்.   (௱௬௰௬ - 166)
 

இன்னொருவன் பிறனுக்குக் கொடுப்பதைப் பார்த்துப் பொறாமைப்படுகிறவனின் குடும்பம், உடுக்க உடையும், உண்ண உணவும் இல்லாமல் கெடும் (௱௬௰௬)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

பிறர்க்கு உதவியாகக் கொடுக்கப்படும் பொருளைக் கண்டு பொறாமைப்படுகின்றவனுடைய சுற்றம், உடையும் உணவும் இல்லாமல் கெடும். (௱௬௰௬)
—மு. வரதராசன்

பிறர்க்குக் கொடுப்பதைக் கண்டு பொறாமைப் படுகிறவனின் குடும்பம், உடுக்கவும், உண்ணவும் இல்லாமல் அலையும். (௱௬௰௬)
—சாலமன் பாப்பையா

உதவியாக ஒருவருக்குக் கொடுக்கப்படுவதைப் பார்த்துப் பொறாமை கொண்டால் அந்தத் தீய குணம், அவனை மட்டுமின்றி அவனைச் சார்ந்திருப்போரையும் உணவுக்கும், உடைக்கும்கூட வழியில்லாமல் ஆக்கிவிடும் (௱௬௰௬)
—மு. கருணாநிதி

அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள்
தவ்வையைக் காட்டி விடும்.   (௱௬௰௭ - 167)
 

பொறாமை உடையவனைக் கண்டு திருமகள் வெறுத்து, அவனைத் தன் தமக்கையான மூதேவிக்குக் காட்டி, தான் அவனை விட்டு நீங்கிப் போய்விடுவாள் (௱௬௰௭)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

பொறாமை உடையவனைத் திருமகள் கண்டு பொறாமைப்பட்டுத் தன் தமக்கைக்கு அவனைக் காட்டி நீங்கி விடுவாள். (௱௬௰௭)
—மு. வரதராசன்

பிறர் உயர்வு கண்டு பொறாமைப்படுபவனைப் பார்க்கும் திருமகள் வெறுப்புக் கொண்டு தன் அக்காள் மூதேவிக்கு அவனை அடையாளம் காட்டிவிட்டு விலகிப் போய்விடுவாள். (௱௬௰௭)
—சாலமன் பாப்பையா

செல்வத்தை இலக்குமி என்றும், வறுமையை அவளது அக்காள் மூதேவி என்றும் வர்ணிப்பதுண்டு பொறாமைக் குணம் கொண்டவனை அக்காளுக்கு அடையாளம் காட்டிவிட்டுத் தங்கை இலக்குமி அவனைவிட்டு அகன்று விடுவாள் (௱௬௰௭)
—மு. கருணாநிதி

அழுக்காறு எனஒரு பாவி திருச்செற்றுத்
தீயுழி உய்த்து விடும்.   (௱௬௰௮ - 168)
 

பொறாமை என்னும் ஒப்பற்ற கொடிய ‘பாவி’, ஒருவனது செல்வத்தையும் கெடுத்து, அவனைத் தீய வழியிலும் செல்லும்படி செலுத்திவிடும் (௱௬௰௮)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

பொறாமை என்று கூறப்படும் ஒப்பற்ற பாவி, ஒருவனுடைய செல்வத்தைக் கெடுத்துத் தீய வழியில் அவனைச் செலுத்தி விடும். (௱௬௰௮)
—மு. வரதராசன்

பொறாமை எனப்படும் ஒப்பில்லாத பாவி எவனிடம் இருக்கிறதோ, அவனது செல்வத்தை அழிப்பதோடு, அவனை நரகத்திலும் அது சேர்க்கும் (௱௬௰௮)
—சாலமன் பாப்பையா

பொறாமை எனும் தீமை ஒருவனுடைய செல்வத்தையும் சிதைத்துத் தீய வழியிலும் அவனை விட்டுவிடும் (௱௬௰௮)
—மு. கருணாநிதி

அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்
கேடும் நினைக்கப் படும்.   (௱௬௰௯ - 169)
 

பொறாமை கொண்ட நெஞ்சத்தானின் ஆக்கமும், பொறாமையற்ற சிறந்தவனுடைய கேடும், மக்களால் எப்போதும் நினைக்கப்படும் (௱௬௰௯)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

பொறாமை பொருந்திய நெஞ்சத்தானுடைய ஆக்கமும், பொறாமை இல்லாத நல்லவனுடைய கேடும் ஆராயத் தக்கவை (௱௬௰௯)
—மு. வரதராசன்

பொறாமை கொண்ட மனத்தவனின் உயர்வும், அது இல்லாத நல்லவனின் தாழ்வும் பற்றி ஆராய்க (௱௬௰௯)
—சாலமன் பாப்பையா

பொறாமைக் குணம் கொண்டவனின் வாழ்க்கை வளமாக இருப்பதும், பொறாமைக் குணம் இல்லாதவனின் வாழ்க்கை வேதனையாக இருப்பதும் வியப்புக்குரிய செய்தியாகும் (௱௬௰௯)
—மு. கருணாநிதி

அழுக்கற்று அகன்றாரும் இல்லை அஃதுஇல்லார்
பெருக்கத்தில் தீர்ந்தாரும் இல்.   (௱௭௰ - 170)
 

உலகில் பொறாமையினால் மேன்மை அடைந்தாரும் இல்லை; பொறாமை இல்லாததால் பொருள் பெருக்கத்தில் குறைந்த வறுமையானவரும் இல்லை (௱௭௰)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

பொறாமைப்பட்டுப் பெருமையுற்றவரும் உலகத்தில் இல்லை; பொறாமை இல்லாதவராய் மேம்பாட்டிலிருந்து நீங்கியவரும் இல்லை. (௱௭௰)
—மு. வரதராசன்

பொறாமை கொண்டு உயர்ந்தவரும் இல்லை. அது இல்லாதபோது தாழ்ந்தவரும் இல்லை (௱௭௰)
—சாலமன் பாப்பையா

பொறாமை கொண்டதால் புகழ் பெற்று உயர்ந்தோரும் இல்லை; பொறாமை இல்லாத காரணத்தால் புகழ் மங்கி வீழ்ந்தோரும் இல்லை (௱௭௰)
—மு. கருணாநிதி

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

இராகம்: ஆபோகி  |  தாளம்: ஆதி
பல்லவி:
அழுக்காறடையாதே - நண்பா
அழுக்காறடையாதே

அநுபல்லவி:
"அழுக்காறென்பதே ஒரு பாவி
திருச்செற்றுத் தீயுழி உய்த்துவிடும்" அதனால்

சரணம்:
பொறாமை உள்ளவர் மனம் புகைந்திடும் கொள்ளி
புத்தியுள்ளோர் நகையாடுவர் எள்ளி
பெறாதிது நன்மதிப்பும் பெருங்குழி தள்ளி
பெருமை எல்லாம் கெடுக்கும் வறுமைநோய் அள்ளி

சஞ்சலமாகும் பொறாமையின் வீடு
சதிகாரர் நேசமே அவர்க்குடன்பாடு
கொஞ்சமோ இதனால் வந்திடும் கேடு
கூடாது இதைவிட்டே குறள்வழி நாடு




பிரபலமான அதிகாரம்

பிரபலமான குறள்

குறளில் பல முறை தோன்றிய சொல்
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

பல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22