தனிப்படர் மிகுதி

தாம்வீழ்வார் தம்வீழப் பெற்றவர் பெற்றாரே
காமத்துக் காழில் கனி.   (௲௱௯௰௧ - 1191)
 

தாம் விரும்பும் காதலர், தம்மையும் விரும்பும் பேறு பெற்றவர்கள், காதல் வாழ்வின் பயனாகிய விதையற்ற கனியை நுகரப் பெற்றவர்கள் ஆவர் (௲௱௯௰௧)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

தாம் விரும்பும் காதலர் தம்மை விரும்புகின்ற பேறு பெற்றவர், காதல் வாழ்க்கையின் பயனாகிய விதை இல்லாத பழத்தைப் பெற்றவரே ஆவார். (௲௱௯௰௧)
—மு. வரதராசன்

தாம் விரும்புபவராலேயே விரும்பப்பட்ட பெண்கள்தாம் காதல் இன்பம் என்னும் விதை இல்லாத கனியைப் பெற்றவர் ஆவர். (௲௱௯௰௧)
—சாலமன் பாப்பையா

தம்மால் விரும்பப்படும் காதலர், தம்மை விரும்புகிற பேறு பெற்றவர் விதையில்லாத பழத்தைப் போன்ற காதல் வாழ்க்கையின் பயனைப் பெற்றவராவார் (௲௱௯௰௧)
—மு. கருணாநிதி

வாழ்வார்க்கு வானம் பயந்தற்றால் வீழ்வார்க்கு
வீழ்வார் அளிக்கும் அளி.   (௲௱௯௰௨ - 1192)
 

தம்மை விரும்புபவருக்கு, அவரை விரும்புகிற காதலர் அளிக்கும் அன்பானது, உயிர்வாழ்பவருக்கு, வானம் மழை பெய்து உதவினாற் போன்றது ஆகும் (௲௱௯௰௨)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

தம்மை விரும்புகின்றவர்க்குக் காதலர் அளிக்கும் அன்பு, உயிர் வாழ்கினறவர்க்கு மேகம் மழை பெய்து காப்பாற்றுதலைப் போன்றது. (௲௱௯௰௨)
—மு. வரதராசன்

அவர் இன்றி வாழ முடியாத மனைவிக்கு, அவள் இன்றி அமையாத கணவர் காட்டும் அன்பு, தன்னை நோக்கி உயிர்வாழும் உலகத்தவர்க்கு வானம் உரிய நேரம் மழை தந்தது போலாம். (௲௱௯௰௨)
—சாலமன் பாப்பையா

காதலர்கள் ஒருவரையொருவர் உரிய நேரத்தில் சந்தித்து அன்பு பொழிவது, வாழ்வதற்குத் தேவையான பருவமழை பொழிவது போன்றதாகும் (௲௱௯௰௨)
—மு. கருணாநிதி

வீழுநர் வீழப் படுவார்க்கு அமையுமே
வாழுநம் என்னும் செருக்கு.   (௲௱௯௰௩ - 1193)
 

காதலரால் விரும்பப்படுகிறவருக்கு, இடையில் பிரிவுத் துன்பம் வந்தாலும், ‘மீண்டும் யாம் இன்பமாக வாழ்வோம்’ என்னும் செருக்குப் பொருந்துவது ஆகும் (௲௱௯௰௩)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

காதலரால் விரும்பப்படுகின்றவர்க்கும் ( பிரிவுத் துன்பம் இருந்தாலும்) மீண்டும் வந்தபின் வாழ்வோம் என்று இருக்கும் செருக்குத் தகும். (௲௱௯௰௩)
—மு. வரதராசன்

தாம் விரும்பும் கணவனால் விரும்பப்பட்ட பெண்ணுக்கே (எப்படியும் விரைவில் அவர் வருவார் என்ற உறுதியினால்) வாழ்வோம் என்னும் செருக்கு, பொருத்தமாக இருக்கும். (௲௱௯௰௩)
—சாலமன் பாப்பையா

காதலன்பில் கட்டுண்டு பிரியாமல் இணைந்திருப்பவர்களுக்குத்தான் இன்புற்று வாழ்கிறோம் எனும் பெருமிதம் ஏற்படும் (௲௱௯௰௩)
—மு. கருணாநிதி

வீழப் படுவார் கெழீஇயிலர் தாம்வீழ்வார்
வீழப் படாஅர் எனின்.   (௲௱௯௰௪ - 1194)
 

தாம் காதலிக்கின்ற காதலரால் தாமும் விரும்பப்படும் தன்மையைப் பெறாதவர் என்றால், அம் மகளிர், முன்செய்த நல்வினைப் பயனை உடையவரே அல்லர் (௲௱௯௰௪)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

தாம் விரும்பும் காதலரால் விரும்பப்படாவிட்டால் உலகத்தாரால் விரும்பப்படும் நிலையில் உள்ளவரும் நல்வினை பொருந்தியவர் அல்லர். (௲௱௯௰௪)
—மு. வரதராசன்

தாம் விரும்பும் கணவனால் விரும்பப்படாதவளாக மனைவி இருந்துவிடுவாளானால், அவள் தீவினை வசப்பட்டவளே. (௲௱௯௰௪)
—சாலமன் பாப்பையா

விரும்பப்படாத நிலை ஏற்படின், அந்தக் காதலர் நட்புணர்வு இல்லாதவராகவே கருதப்படுவார் (௲௱௯௰௪)
—மு. கருணாநிதி

நாம்காதல் கொண்டார் நமக்கெவன் செய்பவோ
தாம்காதல் கொள்ளாக் கடை.   (௲௱௯௰௫ - 1195)
 

நாம் காதல் கொண்டவர், நம் மீது தாமும் காதல் கொள்ளாவிட்டால், நமக்கு என்ன நன்மையைத் தான் செய்யப் போகின்றார்! (௲௱௯௰௫)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

நாம் காதல் கொண்ட காதலர் தாமும் அவ்வாறே நம்மிடம் காதல் கொள்ளாதபோது, நமக்கு அவர் என்ன நன்மை செய்வார்? (௲௱௯௰௫)
—மு. வரதராசன்

நாம் காதலித்தவர் நம்மைக் காதலிக்கவில்லை என்றால் நமக்கு எத்தகைய மகிழ்ச்சியைத் தருவார்? (௲௱௯௰௫)
—சாலமன் பாப்பையா

நான் விரும்பிக் காதல் கொள்வது போன்று அவர் என்னை விரும்பிக் காதல் கொள்ளாத நிலையில் அவரால் எனக்கு என்ன இன்பம் கிடைக்கப் போகிறது? (௲௱௯௰௫)
—மு. கருணாநிதி

ஒருதலையான் இன்னாது காமம்காப் போல
இருதலை யானும் இனிது.   (௲௱௯௰௬ - 1196)
 

‘காதல் ஒருதலையானது’ என்றால் மிகவும் துன்பமானது; காவடித் தண்டின் பாரத்தைப் போல இரு பக்கமும் ஒத்தபடி இருந்ததானால், அதுவே மிகவும் இனிமையானது (௲௱௯௰௬)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

காதல் ஒரு பக்கமாக இருத்தல் துன்பமானது; காவடியின் பாரம் போல் இருபக்கமாகவும் ஒத்திருப்பது இன்பமானதாகும். (௲௱௯௰௬)
—மு. வரதராசன்

ஆண், பெண் என்னும் இரு பக்கத்தில் ஒரு பக்கம் மட்டுமே காதல் இருந்தால் அது கொடுமை காவடியின் பாரத்தைப் போல இருபக்கமும் இருந்தால்தான் இனிது. (௲௱௯௰௬)
—சாலமன் பாப்பையா

காவடித் தண்டின் இரண்டு பக்கங்களும் ஒரே அளவு கனமாக இருப்பதுபோல், காதலும் ஆண், பெண் எனும் இருவரிடத்திலும் மலர வேண்டும்; ஒரு பக்கம் மட்டுமே ஏற்படும் காதலால் பயனுமில்லை; துயரமும் உருவாகும் (௲௱௯௰௬)
—மு. கருணாநிதி

பருவரலும் பைதலும் காணான்கொல் காமன்
ஒருவர்கண் நின்றொழுகு வான்.   (௲௱௯௰௭ - 1197)
 

இருவரிடத்திலும் ஒத்து நடக்காமல் ஒருவரிடம் மட்டும் காமன் நின்று நடப்பதால், என் வருத்தத்தையும் துன்பத்தையும் அவன் காண மாட்டானோ? (௲௱௯௰௭)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

( காதலர் இருவரிடத்திலும் ஒத்திருக்காமல்) ஒருவரிடத்தில் மட்டும் காமன் நின்று இயங்குவதால், என்னுடைய துன்பத்தையும் வருத்தத்தையும் அறியானோ? (௲௱௯௰௭)
—மு. வரதராசன்

ஆண், பெண் இருவரிடமும் இருந்து செயல் ஆற்றாமல் ஒருவரிடம் மட்டுமே போரிடும் காமன், இன்னொருவரின் மேனி நிற வேறுபாட்டால் வரும் துன்பத்தையும் வருத்தத்தையும் அறிய மாட்டானோ? (௲௱௯௰௭)
—சாலமன் பாப்பையா

காமன், ஒரு பக்கமாக மட்டும் இருப்பதால், என்னைக் காதல் நோய் வருத்துவதையும், என் மேனியில் பசலை படர்வதையும் கண்டு கொள்ளமாட்டான் போலும்! (௲௱௯௰௭)
—மு. கருணாநிதி

வீழ்வாரின் இன்சொல் பெறாஅது உலகத்து
வாழ்வாரின் வன்கணார் இல்.   (௲௱௯௰௮ - 1198)
 

தாம் விரும்பிய காதலரின் இனிய சொல்லைப் பெறாமல், உலகத்தில் துன்புற்று வாழ்கின்ற பெண்களை விட வன்கண்மை உடையவர்கள், யாரும் இல்லை (௲௱௯௰௮)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

தான் விரும்பும் காதலரின் இனிய சொல்லைப் பெறாமல் உலகத்தில் ( பிரிவுத் துன்பத்தைப் பொறுத்து) வாழ்கின்றவரைப் போல் வன்கண்மை உடையவர் இல்லை. (௲௱௯௰௮)
—மு. வரதராசன்

தம்மால் விரும்பப்படும் கணவனிடமிருந்து ஓர் இன்சொல் கூடப் பெறாமல் உயிர் வாழும் மனைவியைப் போன்ற கொடியவர் இவ்வுலகத்தில் வேறு இல்லை. (௲௱௯௰௮)
—சாலமன் பாப்பையா

பிரிந்து சென்ற காதலரிடமிருந்து ஓர் இனிய சொல்கூட வராத நிலையில், உலகில் வாழ்கின்றவரைப் போல், கல் நெஞ்சம் உடையவர் யாரும் இருக்க முடியாது (௲௱௯௰௮)
—மு. கருணாநிதி

நசைஇயார் நல்கார் எனினும் அவர்மாட்டு
இசையும் இனிய செவிக்கு.   (௲௱௯௰௯ - 1199)
 

யான் விரும்பிய காதலர் மீண்டும் வந்து அன்பு செய்யார் என்றாலும், அவரைப் பற்றிய புகழைப் பிறர் சொல்லக் கேட்பதும், காதுகளுக்கு இனிமையாக இருக்கின்றது (௲௱௯௰௯)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

யான் விரும்பிய காதலர் மீண்டு வந்து அன்பு செய்யமாட்டார் என்றாலும், அவரைப் பற்றிய புகழைக் ‌கேட்பதும் என் செவிக்கு இன்பமாக இருக்கின்றது. (௲௱௯௰௯)
—மு. வரதராசன்

நான் காதலிக்கும் என் கணவர் என்மீது அன்பற்றவர்தாம் என்றாலும், அவரிடம் இருந்து வரும் எந்தச் சொல்லும் என் செவிக்கு இனிமையானதே. (௲௱௯௰௯)
—சாலமன் பாப்பையா

என் அன்புக்குரியவர் என்னிடம் அன்பு காட்டாதவராகப் பிரிந்து இருப்பினும், அவரைப் பற்றிய புகழ் உரை என் செவிக்குச் செந்தேனாகும் (௲௱௯௰௯)
—மு. கருணாநிதி

உறாஅர்க்கு உறுநோய் உரைப்பாய் கடலைச்
செறாஅஅய் வாழிய நெஞ்சு.   (௲௨௱ - 1200)
 

நெஞ்சமே! நின்னிடம் அன்பற்றவருக்கு நின் நோயைச் சென்று சொல்லுகிறாயே; அதை விட எளிதாகக் கடலைத் தூர்ப்பதற்கு நீயும் முயல்வாயாக (௲௨௱)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

நெஞ்சமே! நீ வாழி! அன்பு இல்லாதவரிடம் உன் மிகுந்த துன்பத்தைச் சொல்கின்றாய்! அதை விட எளிதாகக் கடலைத் தூர்ப்பாயாக. (௲௨௱)
—மு. வரதராசன்

நெஞ்சே நீ வாழ்க! பாவம், நீ ஏன் உன்னோடு உறவில்லாதவர்க்கு உன் அளவற்ற துன்பத்தைச் சொல்லிக் கொண்டிருக்கிறாய்? (அதற்குப் பதில்) உன்னைத் துன்புறுத்தும் கடலைத் தூர்க்க முயற்சி செய்; அது முடியும். (௲௨௱)
—சாலமன் பாப்பையா

நெஞ்சமே! நீ வாழ்க! உன்னிடம் அன்பு இல்லாதவரிடம் உனது துன்பத்தைச் சொல்லி ஆறுதல் பெறுவதைக் காட்டிலும் கடலைத் தூர்ப்பது எளிதான வேலையாகும் (௲௨௱)
—மு. கருணாநிதி

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

இராகம்: ஆநந்தபைரவி  |  தாளம்: ஆதி
பல்லவி:
தாம் வீழ்வார் தம் வீழப் பெற்றவர் பெறறாரே
காமத்துக் காழில் கனி

அநுபல்லவி:
நாம் காதல் கொண்டவர் நமக்கெவன் செய்பவோ
தாம் காதல் கொள்ளாக் கடை என்பதும் குறளுரை

சரணம்:
இருவரிடத்தும் இன்றி ஒருவரிடத்தில் மட்டும்
இயக்கிடும் காம வேளும் என் துன்பமறியானோ
ஒரு தலையான் இன்னாது காமம் காவடி போல
இரு தலையானும் இனிதாகும் அதனாலே

அன்பில்லாரிடம் ஏனோ துன்பத்தைச் சொல் கின்றாய்
அதைவிட எளிதாகக் கடலையும் தூர்க்கலாமே
மன்னுயிர்க் காத்தளிக்கும் மழைபோலும் வீழ்வார் அன்பு
வாழிய என் நெஞ்சே இதை நீ அறிவாய் முன்பு




பிரபலமான அதிகாரம்

பிரபலமான குறள்

குறளில் பல முறை தோன்றிய சொல்
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

பல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22