வினைசெயல் வகை

சூழ்ச்சி முடிவு துணிவெய்தல் அத்துணிவு
தாழ்ச்சியுள் தங்குதல் தீது.   (௬௱௭௰௧ - 671)
 

ஒரு செயலைப் பற்றிய ஆராய்ச்சியின் முடிவு, மனத்தில் துணிவு பெறுவதே ஆகும்; அவ்வாறு துணிவு கொண்ட பின், அதனைச் செய்யாமல் காலம் கடத்துதல் தீமையாகும் (௬௱௭௰௧)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

ஆராய்ந்து எண்ணுவதற்கு எல்லை துணிவு கொள்வதே ஆகும், அவ்வாறு கொண்ட துணிவு காலந் தாழ்த்து நிற்பது குற்றமாகும். (௬௱௭௰௧)
—மு. வரதராசன்

ஓர் ஆலோசனையின் முடிவு, செயலைச் செய்யும் துணிவைப் பெறுவதே, பெற்ற அத்துணிவைச் செயலாக்கக் காலம் தாழ்த்தினால் அது தீமையாகும். (௬௱௭௰௧)
—சாலமன் பாப்பையா

ஒரு செயலில் ஈடுபட முடிவெடுக்கும்போது அச்செயலால் விளையும் சாதக பாதகங்கள் பற்றிய ஆராய்ச்சியும் முடிவடைந்திருக்க வேண்டும் முடிவெடுத்த பிறகு காலந்தாழ்த்துவது தீதாக முடியும் (௬௱௭௰௧)
—மு. கருணாநிதி

தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்க
தூங்காது செய்யும் வினை.   (௬௱௭௰௨ - 672)
 

காலம் கடந்து செய்வதற்கு உரிய செயல்களைக் காலம் தாழ்த்தியே செய்ய வேண்டும்; கடத்தாமல் செய்வதற்குரிய செயல்களை விரைந்து செய்ய வேண்டும் (௬௱௭௰௨)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

காலந்தாழ்த்தி செய்யத் தக்கவற்றைக் காலந்தாழ்ந்தே செய்ய வேண்டும், காலந்தாழ்த்தாமல் விரைந்து செய்யவேண்டிய செயல்களைச் செய்ய காலந்தாழ்த்தக் கூடாது. (௬௱௭௰௨)
—மு. வரதராசன்

காலந்தாழ்த்திச் செய்யவேண்டிய செயல்கள் என்றால் காலந்தாழ்த்துக; காலம் தாழத்தாது செய்ய வேண்டிய செயல்கள் என்றால் காலம் தாழ்த்த வேண்டா. (௬௱௭௰௨)
—சாலமன் பாப்பையா

நிதானமாகச் செய்ய வேண்டிய காரியங்களைத் தாமதித்துச் செய்யலாம்; ஆனால் விரைவாகச் செய்ய வேண்டிய காரியங்களில் தாமதம் கூடாது (௬௱௭௰௨)
—மு. கருணாநிதி

ஒல்லும்வா யெல்லாம் வினைநன்றே ஒல்லாக்கால்
செல்லும்வாய் நோக்கிச் செயல்.   (௬௱௭௰௩ - 673)
 

செய்யக்கூடிய இடங்களில் எல்லாம் செயலைச் செய்வது நன்மையே; செய்ய இயலாத போது, அதை முடிப்பதற்கேற்ற வழிகளை ஆராய்ந்த பின்பே செய்தல் வேண்டும் (௬௱௭௰௩)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

இயலுமிடத்தில் எல்லாம் செயலைச் செய்து முடித்தல் நல்லது, இயலாவில்லையானால் பயன்படும் இடம் நோக்கியாவது செய்ய வேண்டும். (௬௱௭௰௩)
—மு. வரதராசன்

ஒரு செயலைச் செய்யும்போது சாம, தான, பேத, தண்டம் என்னும் எல்லா உபாயங்களிலும் தண்டம் என்னும் உபாயம் கொண்டு செய்வது நல்லது. அது பலன் அளிக்காத போது, பிற மூன்றினுள் ஏற்ற ஒன்று கொண்டு செய்க. (௬௱௭௰௩)
—சாலமன் பாப்பையா

இயலும் இடங்களில் எல்லாம் செயல் முடிப்பது நலம் தரும் இயலாத இடமாயின் அதற்கேற்ற வழியை அறிந்து அந்தச் செயலை முடிக்க வேண்டும் (௬௱௭௰௩)
—மு. கருணாநிதி

வினைபகை என்றிரண்டின் எச்சம் நினையுங்கால்
தீயெச்சம் போலத் தெறும்.   (௬௱௭௰௪ - 674)
 

செய்யும் செயலையும், ஒழிக்கும் பகையையும், குறைவிடாமல் செய்துவிட வேண்டும்; அவற்றின் மிச்சம் தீயின் ஒழிவைப் போலப் பெருகிப் பெருங்கேடு உண்டாக்கிவிடும் (௬௱௭௰௪)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

செய்யத்தொடங்கியச் செயல், கொண்ட பகை என்று இவ்விரண்டின் குறை ஆராய்ந்து பார்த்தால், தீயின் குறைபோல் தெரியாமல் வளர்ந்து கெடுக்கும். (௬௱௭௰௪)
—மு. வரதராசன்

செய்யத் தொடங்கிய செயல், அழிக்கத் தொடங்கிய பகை இவை இரண்டிலும் மிச்சம் இருந்தால் அவை தீயின் மிச்சம் போல வளர்ந்து அழிக்கும் (ஆதலால் எதையும் முழுமையாகச் செய்க) (௬௱௭௰௪)
—சாலமன் பாப்பையா

எற்ற செயலையோ, எதிர்கொண்ட பகையையோ முற்றாக முடிக்காமல் விட்டுவிட்டால் அது நெருப்பை அரை குறையாக அணைத்தது போலக் கேடு விளைவிக்கும் (௬௱௭௰௪)
—மு. கருணாநிதி

பொருள்கருவி காலம் வினையிடனொடு ஐந்தும்
இருள்தீர எண்ணிச் செயல்.   (௬௱௭௰௫ - 675)
 

வேண்டிய பொருள், கருவிகள், தக்க காலம், செயலறிவு, உரிய இடம் என்னும் ஐந்தையும் மயக்கமில்லாமல் ஆராய்ந்து கொண்ட பின்னரே, செய்தல் வேண்டும் (௬௱௭௰௫)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

வேண்டிய பொருள், ஏற்றக்கருவி, தக்க காலம், மேற்கொண்ட தொழில், உரிய இடம் ஆகிய ஐந்தினையும் மயக்கம் தீர எண்ணிச் செய்ய வேண்டும். (௬௱௭௰௫)
—மு. வரதராசன்

ஒரு செயலைச் செய்யத் தொடங்கும்போது தனக்கும் தன் எதிரிக்கும் இருக்கும் செல்வம், சாதனங்கள், ஏற்ற காலம், செயல்திறம், பொருத்தமான இடம் ஆகிய ஐந்தையும் சந்தேகத்திற்கு இடம் இல்லாமல் சிந்தித்துச் செய்க. (௬௱௭௰௫)
—சாலமன் பாப்பையா

ஒரு காரியத்தில் ஈடுபடுவதற்கு முன்பு, அதற்குத் தேவையான பொருள், ஏற்ற கருவி, காலம், மேற்கொள்ளப் போகும் செயல்முறை, உகந்த இடம் ஆகிய ஐந்தையும் குறையில்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் (௬௱௭௰௫)
—மு. கருணாநிதி

முடிவும் இடையூறும் முற்றியாங்கு எய்தும்
படுபயனும் பார்த்துச் செயல்.   (௬௱௭௰௬ - 676)
 

செயலின் முடிவைப் பற்றியும், இடையில் வரும் இடையூறுகளைப் பற்றியும், முடித்த பின் அடையும் பெரும்பயனையும் ஆராய்ந்தே ஒரு செயலைச் செய்தல் வேண்டும் (௬௱௭௰௬)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

செயலை முடிக்கும் வகையும், வரக்கூடிய இடையூறும், முடிந்த போது கிடைக்கும் பெரும்பயனும் ஆகியவற்றை ஆராய்ந்து செய்ய வேண்டும். (௬௱௭௰௬)
—மு. வரதராசன்

ஒரு செயலைச் செய்யும்போது அது முடிவதற்கான முயற்சி, இடையில் வரும் தடை, முடியும்போது அடையும் பெரும்பயன் ஆகியவற்றை எண்ணிப் பார்த்துச் செய்க. (௬௱௭௰௬)
—சாலமன் பாப்பையா

ஈடுபடக்கூடிய ஒரு செயலால் எதிர்பார்க்கப்படும் பயன், அதற்கான முயற்சிக்கு இடையே வரும் தடைகள், அச்செயலாற்றுதவற்கான முறை ஆகிய அனைத்தையும் முதலில் ஆராய்ந்து அறிந்து கொள்ள வேண்டும் (௬௱௭௰௬)
—மு. கருணாநிதி

செய்வினை செய்வான் செயன்முறை அவ்வினை
உள்ளறிவான் உள்ளம் கொளல்.   (௬௱௭௰௭ - 677)
 

ஒரு செயலைச் செய்வதற்குரிய செயல்முறையாவது, அதனை முன்பே செய்து முடித்துத் தெளிந்தவனிடம் கேட்டறிந்து, அவைகளைத் தாமும் மேற்கொள்ளுதல் ஆகும் (௬௱௭௰௭)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

செயலைச் செய்கின்றவன் செய்ய வேண்டிய முறை, அச் செயலின் உண்மையான இயல்பை அறிந்தவனுடையக் கருத்தைத் தான் ஏற்றுக் கொள்ளவதாகும் (௬௱௭௰௭)
—மு. வரதராசன்

ஒரு செயலைச் செய்யத் தொடங்குபவன் அதைச் செய்யும் முறையாவது, அச்செயலை இதற்கு முன்பு செய்திருப்பவனின் கருத்தை அறிந்து கொள்வதேயாகும். (௬௱௭௰௭)
—சாலமன் பாப்பையா

ஒரு செயலில் ஈடுபடுகிறவன், அச்செயல் குறித்து முழுமையாக உணர்ந்தவனின் கருத்தினை முதலில் அறிந்து கொள்ள வேண்டும் (௬௱௭௰௭)
—மு. கருணாநிதி

வினையான் வினையாக்கிக் கோடல் நனைகவுள்
யானையால் யானையாத் தற்று.   (௬௱௭௰௮ - 678)
 

மதநீரால் கன்னம் நனையும் யானையைக் கொண்டு, வேறான யானையைக் கட்டுவதைப் போல, பழகிய செயலின் அறிவைக் கொண்டே பிற செயல்களையும் செய்தல் வேண்டும் (௬௱௭௰௮)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

ஒரு செயலைச் செய்யும் போது அச் செயலால் மற்றொரு செயலையும் செய்து முடித்துக் கொள்ளல், ஒரு யானையால் மற்றொரு யானையைப் பிடித்தலைப் போன்றது. (௬௱௭௰௮)
—மு. வரதராசன்

ஒரு செயலைச் செய்யும்போதே இன்னொரு செயலையும் செய்து கொள்வது மதநீர் வழியும் யானையால் இன்னொரு யானையைப் பிடிப்பது போலாம். (௬௱௭௰௮)
—சாலமன் பாப்பையா

ஒரு செயலில் ஈடுபடும்போது, அச்செயலின் தொடர்பாக மற்றொரு செயலையும் முடித்துக் கொள்வது ஒரு யானையைப் பயன்படுத்தி மற்றொரு யானையைப் பிடிப்பது போன்றதாகும் (௬௱௭௰௮)
—மு. கருணாநிதி

நட்டார்க்கு நல்ல செயலின் விரைந்ததே
ஒட்டாரை ஒட்டிக் கொளல்.   (௬௱௭௰௯ - 679)
 

மாறுபட்டவரையும் தம்முடன் பொருந்துமாறு செய்து செயலிலே ஈடுபடுதல், நண்பருக்கு நல்லவை செய்வதிலும் மிகவும் விரைவாகச் செய்வதற்கு உரியதாகும் (௬௱௭௰௯)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

பகைவராக உள்ளவரைப் பொருந்துமாறு சேர்த்துக் கொள்ளல், நண்பர்க்கு உதவியானவற்றை செய்தலைவிட விரைந்து செய்யத்தக்கதாகும். (௬௱௭௰௯)
—மு. வரதராசன்

ஒரு செயலைச் செய்யும்போது நண்பர்களுக்கு நல்லது செய்வதைக் காட்டிலும் தன் பகைவர்களோடு நட்புக் கொள்வது விரைந்து செய்யப்படவேண்டியது. (௬௱௭௰௯)
—சாலமன் பாப்பையா

நன்பருக்கு நல்லுதவி செய்வதைக் காட்டிலும் பகைவராயிருப்பவரைத் தம்முடன் பொருந்துமாறு சேர்த்துக் கொள்ளுதல் விரைந்து செய்யத் தக்கதாகும் (௬௱௭௰௯)
—மு. கருணாநிதி

உறைசிறியார் உள்நடுங்கல் அஞ்சிக் குறைபெறின்
கொள்வர் பெரியார்ப் பணிந்து.   (௬௱௮௰ - 680)
 

ஒன்றைச் செய்யும் வல்லமை இல்லாதவருள், பயந்து இடையில் குறைப்பட்டவர்கள், பெரியோரைப் பணிந்து கேட்டு, அவர் கூறியபடி நடந்து கொள்ள வேண்டும் (௬௱௮௰)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

வலிமை குறைந்தவர், தம்மை சார்ந்துள்ளவர் நடுங்குவதற்காக தாம் அஞ்சி, வேண்டியது கிடைக்ககுமானால் வலிமைமிக்கவரைப் பணிந்தும் ஏற்றுக் கொள்வர். (௬௱௮௰)
—மு. வரதராசன்

சிறிய இடத்தில் வாழ்பவர், தம்மிலும் பெரியவர் எதிர்த்து வரும்போது அவரைக் கண்டு தம்மவர் நடுங்குவதற்கு அஞ்சி அப்பெரியவரைப் பணிந்து ஏற்றுக் கொள்வர். (௬௱௮௰)
—சாலமன் பாப்பையா

தம்மைவிட வலிமையானவர்களை எதிர்ப்பதற்குத் தம்முடன் இருப்பவர்களே அஞ்சும்போது தாம் எதிர்பார்க்கும் பலன் கிட்டுமானால் அவர்கள் வலியோரை வணங்கி ஏற்றுக் கொள்வார்கள் (௬௱௮௰)
—மு. கருணாநிதி

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

இராகம்: பேகடா  |  தாளம்: ஆதி
பல்லவி:
வினை செயல் வகை யறிவோம் - நாமே
வினை செயல் வகை யறிவோம்

அநுபல்லவி:
நினைவுற்றே ஆராய்ந்து நேரும் பயன்தெரிந்து
நிறை வேற்றவும் விரைந்து
நிகழ்த்துவோம் வகை துணிந்து

சரணம்:
செய்வனவும் திருந்தச் செய்திடல் வேண்டும்
சிறிது விட்டாலும் வினைப் பகைத் தீயாய்த் தீண்டும்
உய்வகை உள்ளறிவான் உளம் கொண்டும் முடிப்போம்
உரை தரும் நல்லமைச்சின் முறையிதுவும் படிப்போம்

ஒரு யானையால் கொள்ளலாம் இன்னொரு யானை
ஒட்டாரையும் ஒட்டினால் பெருகும் நம் சேனை
"பொருள் கருவி காலம் வினை இடனோடு ஐந்தும்
இருள்தீர எண்ணிச் செயல்" என்னும் குறள் பொருந்தும்




பிரபலமான அதிகாரம்

பிரபலமான குறள்

குறளில் பல முறை தோன்றிய சொல்
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

பல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22