மடியின்மை

குடியென்னும் குன்றா விளக்கம் மடியென்னும்
மாசூர மாய்ந்து கெடும்.   (௬௱௧ - 601)
 

ஒருவன் வந்து பிறந்த குடியென்னும் அணையா விளக்கானது, சோம்பல் என்னும் மாசு படரப்பட, ஒளி மழுங்கி, முடிவில் அணைந்து போய்விடும் (௬௱௧)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

ஒருவனுக்கு தன் குடியாகிய மங்காத விளக்கு, அவனுடைய சோம்பலாகிய மாசு படிய படிய ஒளி மங்கிக் கெட்டுவிடும். (௬௱௧)
—மு. வரதராசன்

ஒருவனிடம் சோம்பல் என்னும் இருள் நெருங்கினால் அவன் பிறந்த குடும்பமாகிய அணையாத விளக்கு ஒளி மங்கி அழிந்து போகும். (௬௱௧)
—சாலமன் பாப்பையா

பிறந்த குடிப் பெருமை என்னதான் ஒளிமயமாக இருந்தாலும், சோம்பல் குடிகொண்டால் அது மங்கிப் போய் இருண்டு விடும் (௬௱௧)
—மு. கருணாநிதி

மடியை மடியா ஒழுகல் குடியைக்
குடியாக வேண்டு பவர்.   (௬௱௨ - 602)
 

தாம் பிறந்த குடியை மேன்மேலும் உயர்ந்த குடியாக உயர்த்த விரும்புகிறவர்கள், சோம்பலை அறவே விலக்கி, முயற்சியாளராக விளங்க வேண்டும் (௬௱௨)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

தம் குடியைச் சிறப்புடைய குடியாக விளங்குமாறு செய்ய விரும்புகின்றவர் சோம்பலைச் சோம்பலாகக் கொண்டு முயற்சியுடையவராய் நடக்க வேண்டும். (௬௱௨)
—மு. வரதராசன்

தாம் பிறந்த குடும்பத்தை நல்ல குடும்பமாக உயர்த்த விரும்புபவர் சோம்பலைச் சோம்பலாக எண்ணி முயற்சி செய்க. (௬௱௨)
—சாலமன் பாப்பையா

குலம் சிறக்க வேண்டுமானால், சோம்பலை ஒழித்து, ஊக்கத்துடன் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் (௬௱௨)
—மு. கருணாநிதி

மடிமடிக் கொண்டொழுகும் பேதை பிறந்த
குடிமடியும் தன்னினும் முந்து.   (௬௱௩ - 603)
 

விலக்க வேண்டிய சோம்பலைத் தன்னிடத்தே கொண்டிருக்கும் அறிவற்றவன், பிறந்த குடியின் பெருமையானது, அவன் அறிவதற்கு முன்பாகவே அழிந்துவிடும் (௬௱௩)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

அழிக்கும் இயல்புடைய சோம்பலைத் தன்னிடம் கொண்டு நடக்கும் அறிவவில்லாதவன் பிறந்த குடி அவனுக்கு முன் அழிந்துவிடும். (௬௱௩)
—மு. வரதராசன்

விட்டுவிட வேண்டிய சோம்பலைத் தனக்குள்ளே கொண்டு வாழும் அறிவற்றவன் பிறந்த குடும்பம் அவனுக்கும் முன்பே அழிந்துவிடும். (௬௱௩)
—சாலமன் பாப்பையா

அறிவும் அக்கறையுமில்லாத சோம்பேறி பிறந்த குடி, அவனுக்கு முன் அழிந்து போய் விடும் (௬௱௩)
—மு. கருணாநிதி

குடிமடிந்து குற்றம் பெருகும் மடிமடிந்து
மாண்ட உஞற்றி லவர்க்கு.   (௬௱௪ - 604)
 

சோம்பலிலே ஆழ்ந்துவிட்டுச் சிறந்த முயற்சிகளிலே ஈடுபடாமல் இருப்பவருடைய குடிப்பெருமையும் கெட்டு, குற்றமும் நாளுக்கு நாள் பெருகும் (௬௱௪)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

சோம்பலில் அகப்பட்டு சிறந்த முயற்சி இல்லாதவராய் வாழ்கின்றவர்க்கு குடியின் பெருமை அழிந்து குற்றம் பெருகும். (௬௱௪)
—மு. வரதராசன்

சோம்பலில் வீழ்வதால் சிறந்தவற்றையேச் செய்யும் முயற்சியே இல்லாதவரின் குடும்பமும் அழியும் குற்றமும் பெருகும். (௬௱௪)
—சாலமன் பாப்பையா

சோம்பேறித்தனமானவர்களின் வாழ்க்கையில் குற்றங்களும் பெருகிவிடும்; குடும்பப் பெருமையும் சீரழிந்து போய்விடும் (௬௱௪)
—மு. கருணாநிதி

நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்
கெடுநீரார் காமக் கலன்.   (௬௱௫ - 605)
 

சோம்பல், எதையும் தாமதமாகவே செய்தல், மறதி, தூக்கம் என்னும் நான்கும், தாம் அழிந்துவிடக் கருதும் தன்மை கொண்டவர்கள், விரும்பி ஏறும் கப்பல்களாம் (௬௱௫)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

காலம் நீட்டித்தல், சோம்பல், மறதி, அளவு மீறியத் தூக்கம் ஆகிய இந் நான்கும் கெடுகின்ற இயல்புடையவர் விரும்பி ஏறும் மரக்கலமாம். (௬௱௫)
—மு. வரதராசன்

காலம் தாழ்த்தி செய்வது, மறதி, சோம்பல், ஓயாத் தூக்கம் இவை நான்கும் அழிவை நாடுவார் விரும்பி ஏறும் சிறு படகாகும். (௬௱௫)
—சாலமன் பாப்பையா

காலம் தாழ்த்துதல், மறதி, சோம்பல், அளவுக்கு மீறிய தூக்கம் ஆகிய நான்கும், கெடுகின்ற ஒருவர் விரும்பியேறும் தோணிகளாம்! (௬௱௫)
—மு. கருணாநிதி

படியுடையார் பற்றமைந்தக் கண்ணும் மடியுடையார்
மாண்பயன் எய்தல் அரிது.   (௬௱௬ - 606)
 

நாடாளும் தலைவருடைய தொடர்பு இயல்பாக வந்து கிடைத்த காலத்திலும், சோம்பல் உடையவர்கள், அதனால் எந்தவிதமான சிறந்த பயனையும் அடைவதில்லை (௬௱௬)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

நாட்டை ஆளும் தலைவருடைய உறவுத் தானே வந்து சேர்ந்தாலும், சோம்பல் உடையவர் சிறந்த பயனை அடைய முடியாது. (௬௱௬)
—மு. வரதராசன்

நிலம் முழுவதும் ஆண்ட மன்னர்களின் செல்வம் எல்லாம் சேர்ந்திருந்தாலும், சோம்பலை உடையவர் நல்ல பயனை அடைவது அரிது. (௬௱௬)
—சாலமன் பாப்பையா

தகுதியுடையவரின் அன்புக்குப் பாத்திரமானவராக இருப்பினும் சோம்பலுடையவர்கள் பெருமை எனும் பயனை அடைவதென்பது அரிதாகும் (௬௱௬)
—மு. கருணாநிதி

இடிபுரிந்து எள்ளுஞ்சொல் கேட்பர் மடிபுரிந்து
மாண்ட உஞற்றி லவர்.   (௬௱௭ - 607)
 

சோம்பலை விரும்பி, நல்ல முயற்சிகளைக் கைவிடுகிறவர்கள், கடுமையாகப் பிறர் இகழ்ந்து பேசுகின்ற சொற்களைக் கேட்கின்ற நிலைமையை அடைவார்கள் (௬௱௭)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

சோம்பலை விரும்பி மேற்க் கொண்டு சிறந்த முயற்சி இல்லாதவராய் வாழ்கின்றவர் பிறர் இடித்துக் கூறி இகழ்கின்ற சொல்லைக் கேட்கும் நிலைமை அடைவர். (௬௱௭)
—மு. வரதராசன்

சோம்பலில் வீழ்வதால் சிறந்த முயற்சி செய்யாதவர், நண்பர்களால் முதலில் இடித்துச் சொல்லப்பட்டு, பின்பு அவர் இழந்து பேசும் சொல்லையும் கேட்பர். (௬௱௭)
—சாலமன் பாப்பையா

முயற்சி செய்வதில் அக்கறையின்றிச் சோம்பேறிகளாய் வாழ்பவர்கள் இகழ்ச்சிக்கு ஆளாவார்கள் (௬௱௭)
—மு. கருணாநிதி

மடிமை குடிமைக்கண் தங்கின்தன் ஒன்னார்க்கு
அடிமை புகுத்தி விடும்.   (௬௱௮ - 608)
 

நல்ல குடியிலே பிறந்தவனிடம், சோம்பல் என்பது சேர்ந்து விடுமானால், அது அவனை, அவன் எதிரிகளுக்கு விரைவில் அடிமைப்படுத்தி விடும் (௬௱௮)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

சோம்பல் நல்ல குடியில் பிறந்தவனிடம் வந்து பொருந்தினால், அஃது அவனை அவனுடைய பகைவர்க்கு அடிமையாகுமாறு செய்துவிடும். (௬௱௮)
—மு. வரதராசன்

குடும்பத்தானுக்குச் சோம்பல் சொந்தமானால் அது அவனை அவனுடைய பகைவரிடத்தில் அடிமை ஆக்கிவிடும். (௬௱௮)
—சாலமன் பாப்பையா

பெருமைமிக்க குடியில் பிறந்தவராயினும், அவரிடம் சோம்பல் குடியேறி விட்டால் அதுவே அவரைப் பகைவர்களுக்கு அடிமையாக்கிவிடும் (௬௱௮)
—மு. கருணாநிதி

குடியாண்மை யுள்வந்த குற்றம் ஒருவன்
மடியாண்மை மாற்றக் கெடும்.   (௬௱௯ - 609)
 

ஒருவன், தன்னிடமுள்ள சோம்பலை ஒழித்துவிட்டான் என்றால், அவன் தன் குடும்பத்தை நடத்துவதில் ஏற்பட்ட குற்றங்கள் எல்லாம் நீங்கிவிடும் (௬௱௯)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

ஒருவன் சோம்பலை ஆளுந் தன்மையை மாற்றிவிட்டால் அவனுடைய குடியிலும் ஆண்மையிலும் வந்தக் குற்றம் தீர்ந்து விடும். (௬௱௯)
—மு. வரதராசன்

ஒருவன் சோம்பலுக்கு அடிமையாவதை விட்டுவிட்டால், அவனது குடும்பத்திற்குள் வந்த சிறுமைகள் அழிந்துவிடும். (௬௱௯)
—சாலமன் பாப்பையா

தன்னை ஆட்கொண்டுள்ள சோம்பலை ஒருவன் அகற்றிவிட்டால், அவனது குடிப்பெருமைக்கும், ஆண்மைக்கும் சிறப்பு தானே வந்து சேரும் (௬௱௯)
—மு. கருணாநிதி

மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்
தாஅய தெல்லாம் ஒருங்கு.   (௬௱௰ - 610)
 

சோம்பல் இல்லாத அரசன், தன் அடியாலே உலகத்தை அளந்த திருமால் தாவிய நிலப்பரப்பு எல்லாம், தானும் தன் முயற்சியால் ஒருங்கே பெற்றுவிடுவான் (௬௱௰)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

அடியால் உலகத்தை அளந்த கடவுள் தாவியப் பரப்பு எல்லாவற்றையும் சோம்பல் இல்லாத அரசன் ஒரு சேர அடைவான். (௬௱௰)
—மு. வரதராசன்

தன் அடியால் எல்லா உலகையும் அளந்தவன் கடந்த உலகம் முழுவதையும், சோம்பல் இல்லாத அரசு முழுமையாக அடையும். (௬௱௰)
—சாலமன் பாப்பையா

சோம்பல் இல்லாதவர் அடையும் பயன், சோர்வில்லாத ஒரு மன்னன், அவன் சென்ற இடமனைத்தையும் தனது காலடி எல்லைக்குள் கொண்டு வந்ததைப் போன்றதாகும் (௬௱௰)
—மு. கருணாநிதி

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

இராகம்: பூரி கல்யாணி  |  தாளம்: ஆதி
பல்லவி:
குடியென்னும் குன்றாத விளக்கேற்றுவோம் - என்றும்
குலந்தரும் செல்வம் தரும்
குறள்வழியைப் போற்றுவோம்

அநுபல்லவி:
குடி கெடுக்கும் சோம்பலின் இருள்படியாமல்
கொடும் நெடுநீர் மறவிதுயில் கொண்டு மடியாமல்

சரணம்:
சோம்பர் எவராயினும் தேம்பியே திரிவர்
சூழும் குடிப் பெருமை தாழும்படி அலைவர்
தீம்புக் கிடமாம் இந்தச் சோம்பலையே களைவோம்
தேறும் நம் நாட்டின் செல்வம் செழிக்கும் வகை புரிவோம்

மடியை மடியாக ஒழுகல் குடியைக்
குடியாக வேண்டுபவர் எனப் பெறுவோம் நிலையை
குடியாண்மையுள் வந்த குற்றமெல்லாம் தவிர்ப்போம்
மடியாண்மை மாற்றும் நல்ல முயற்சி வழி நடப்போம்




பிரபலமான அதிகாரம்

பிரபலமான குறள்

குறளில் பல முறை தோன்றிய சொல்
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

பல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22